2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துமாறு கோரி, அமைச்சர் அர்ஜுனவுக்கு மகஜர்

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் காரணமாக, தொழில் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதோடு, அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்துமாறு கோரி துறைமுக மற்றும் கப்பத்துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு, ஐக்கிய மீனவர் கூட்டுறவுச் சங்கம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஐக்கிய மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஆர். இப்றாலெவ்வையினால் ஒப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

தமது கோரிக்கை தொடர்பில், கடந்த ஆட்சிக்காலத்திலிருந்த ஜனாதிபதி மற்றும் விடயம் தொடர்பான அமைச்சுக்களுக்கு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மிக நீண்ட காலமாக கடிதங்களை அனுப்பியிருந்தும் எதுவித பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் காரணமாக, ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்படடுள்ளன.

ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான கரைவலை மற்றும் மாயாவலை மீன்பிடித் தொழிலாளர்கள், ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் நேரடியாக தொழில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கரைவலை மீனவர்களின் தொழிலிடங்கள், துறைமுகப் பகுதிக்குள் சென்றுள்ளதால், இங்குள்ள மீனவர்கள் - கரைவலை மீன்பிடிக்கு சாதகமான இடங்களின்றி அல்லல்பட்டு வருகின்றனர்.  

மேலும், துறைமுகத்தினை அண்டிய கடற்பகுதிகளில் போடப்பட்டுள்ள பாரிய பாறாங்கற்கள் - தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், மீனவர்களின் வலை உள்ளிட்ட தொழில் உபகரணங்கள், இந்தப் பாறாங்கற்களில் சிக்கிச் சேதமடைவதால், தாம் - பாரியளவு நஷ்டங்களை அடிக்கடி எதிர்கொள்ள நேர்வதாகவும் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த கரைவலை மற்றும் மாயாவலை மீன்பிடித் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குமாறு கோரியும் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிணங்க, ஒரு தொகை மீனவர்களுக்கு நஷ்டஈடு எனும் பெயரில் சிறியதொரு தொகைப் பணம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான மீனவர்களுக்கு - இந்த நஷ்டஈடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் காரணமாக, தொழில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் மேற்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று கடந்த அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட போதும், அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகின்றனர்.

துறைமுக நிர்மாணத்தின் காரணமாக, தாம் ஆண்டாண்டு காலமாக தொழில் செய்து வந்த, கரைவலை மற்றும் மாயாவலை மீன்பிடித் தொழிலுக்கு சாதகமான இடங்களை இழந்து விட்ட இந்தப் பகுதி மீனவர்களில் சிலர், தற்போது வேறு இடங்களில் தமது தொழிலை தொடர்ந்து வருகின்றனர்.

ஆயினும், இந்தப் பகுதிகள் - அவர்களின் தொழிலுக்குச் சாதமான இடங்களாக இல்லையென அவர்கள் தெரிவிப்பதோடு, இந்தப் பகுதியிலுள்ள கடற் பாறைகளால் தமது வலைகள் அடிக்கடி சேதமடைவதாகவும் கூறுகின்றனர்.

எனவே, ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் தொழில் பாதிப்புக்குள்ளான இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு தகுந்த நஷ்டஈடுகளை வழங்குவதோடு, மாற்றுத் தொழில்களுக்கான உதவிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே இந்த மீனவர்களின் கோரிக்கையாகும்.

துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அண்மையில் ஒலுவில் துறைமுகத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டபோது, ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் - அமைச்சரைச் சந்தித்து, தமக்கு மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கும், நஷ்டஈட்டினை வழங்குவதற்கும் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
                                                             
இந்த மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.                                                                                                                                                                                                  
                                                           
                                                                                                                                                                                                                                                                                  
                                                                                                  
                                                                                                                                                                             
    

 

 

 


                                                                                                                                                                                                                                                                                                                                                           

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X