2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'மதக்கல்வியை முழுமையாக கற்பது காலத்தின் கட்டாய கடமையாகும்'

Thipaan   / 2015 மார்ச் 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

ஒரு சமூகம், தாம் சார்ந்த மதக் கல்வியினை முழுமையாக கற்பது காலத்தின் கட்டாயக் கடமையாகும். அவ்வாறில்லாது நான் இஸ்லாமியன், நான் இந்து, நான் பௌத்தன் என்று தன்னுடைய மதத்துக்கு அப்பால் செயற்பட முற்பட்டால் அது அந்த சமூகத்தில் பாரிய முறன்பாடுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

தமது மதம் சார்ந்த விடயத்தில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தத்தமது மதங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.  அவற்றை விளங்கிக் கொள்ளமல் நாம் இன்று பாரிய பிழைகளையும் வழிகேடுகளையும் செய்து கொண்டிருக்கின்றோம். இதற்கு நாம் இறைவனிடத்தில் பதில் கூறியாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைத் துணிகள் வழங்கல் மற்றும் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்காக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்  திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 10 வகையான பாடநூல் என்பன வழங்கும் நிகழ்வு அல் இக்றாஹ் கல்வி நிலையத்தில் நேற்று (22) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆசிரியர் யூ.எல்.றிபாய்தீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மனிதன், இன்று தமது தேவைகளை அதிகமாக்கிக் கொண்டதனால் நிம்மதி இழந்து படைத்தவனை மறந்து பல பித்தலாட்டங்களுக்கும் பிதட்டல்களுக்கும் காரணமாகிக் கொண்டிருக்கின்றான்.

இதனால், பிள்ளைகள் தமது பெற்றோரை மதிப்பதில்லை. தமது சகோதரர்களை உறவினர்களை மதிப்பதில்லை.
நல்ல விருந்தோம்பல் பழக்கவழக்கங்களில்லை. இவ்வாறு இயந்திர வாழ்கையை மனிதன் வாழ்ந்து வருகின்றான். எங்கு பார்த்தாலும் பணம், சொத்து சுகம் என்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான காலகட்டத்தில் எந்தவொரு நோக்கங்களுமில்லாமல் இறைவனுக்கு பயந்து தாம் கற்றதை தான் சார்ந்த சமூகத்துக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயற்பட்டுவருகின்ற இந்த அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவை மகத்தானது.

உங்களது பணிக்கு கூலிதருவதற்கு எங்களால் ஒருபோதும் முடியாது அதற்கு போதுமானவன் இறைவன் மாத்திரமே. ஆனால், இறைவன் எமக்கு வழங்கியுள்ள அமானிதமான அதிகாரங்களைக் கொண்டு உங்களது பணி மேலும் சிறந்து விளங்க தேவையான உதவிகளை நான் வழங்குவேன் அதற்காக கிழக்கு மாகாண சபையும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ;ஷேய்க் எம்.ஐ.அமீர் நளீமி, முஸ்லீம் சமய கலாசார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான நூறுல் அமீன், நஸீல் அஹமட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.சுபைதீன், சம்மாந்துறை பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.ஆசாத், அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.மன்சூர் உட்பட பலர்கலந்த கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X