2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வட்டமடு வயலில் பதற்றம்

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (04) விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கிமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
 
வட்டமடு பிரதேச விவசாயிகள் அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையிலேயே இரு தரப்பினருக்குமிடையில் வாய்தர்க்கம் அதிகரித்து முறுகல் நிலை ஏற்பட்டது.
 
இதனையடுத்து அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த டிகோவிட்ட, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூபி.தென்னக்கோன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் களத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
 
வட்டமடு விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்குமிடையிலான பிரச்சினைகள் பல வருடங்களாக தொடர்ந்து செல்வதுடன், இப்பிரச்சினைகள் தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் மற்றும் கல்முனை மேல்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டு இறுதியாக தற்போது மேன்முறையீட்டு நீதிமனற்றத்தில் இதற்கான  விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
கல்முனை மேல்நீதிமன்றத்தினால் விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கை விசாணைக்கு எடுத்துக்கொண்ட போது கல்முனை மேல்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முதல் கடந்த மே மாதம் 05ஆம் திகதி வரையும், பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விவசாயம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதை சட்டத்தரணி எஸ்.எம்.றகீப் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
 
இதற்கமைவாக, நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமன்ந்த டிகோவிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X