2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இலங்கையர் தினமும்; 159 எம்.பிக்களும்

R.Tharaniya   / 2025 நவம்பர் 24 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட,  ‘இலங்கையர் தினம்’ டிசெம்பர் மாதம் 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இலங்கையர் தினத்துக்கு அமைச்சரவை ஏற்கெனவே, அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியொரு கட்சியினால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம், ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் 
அதில் தவறே இருக்காது. 

159 பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் வைத்திருக்கும் அரசாங்கம், அதிரடியான சட்ட திட்டங்களை நிறைவேற்றி, அமல்படுத்தலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வசம், 159 உறுப்பினர்கள் இருந்தாலும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல விடயங்களுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, எதிரணியில் இருக்கும் மலையகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 200 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவித்திருந்தார். அதற்காக மலையக கட்சிகளின் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருக்கலாம். 

அவ்வாறு வாக்களிக்காவிட்டால், மலையகத்துக்குக் குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செல்ல  முடியாத நிலைமை மலையக  எம்.பிக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

ஆக, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல விடயங்களுக்கு எதிரணியில் இருக்கும் உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. அதை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சனிக்கிழமை (22) அன்று நடைபெற்ற ‘இலங்கையர் தினம்’ பற்றிய கலந்துரையாடலில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதிப்படுத்தினர். 

இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்த நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. எனினும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முயற்சிக்கவே இல்லை. 
சில அரசாங்கங்கள் இன, மத வாதங்களுக்கு எண்ணெய் வார்த்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தன. 

இனவாதம் மத வாதத்தைப் பேசும் எந்த நபராக இருந்தாலும், அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த  வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஒரு சட்ட மாற்றத்தை நாம் அவசரமாகக் கொண்டு வர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஆகையால், இன்னும் காலம் தாமதம் வேண்டாம். இன, மத வாதங்களுக்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில், சட்டத்திட்டங்களை அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டு, உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையேல், இன, மத வாதங்களை இந்நாட்டில் இருந்து துடைத்தெறிய முடியாது என்பதை நினைவு படுத்துகிறோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X