2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

நிபா’வுக்கு முகங்கொடுக்க முன்கூட்டியே தயாராகுவது சிறந்தது

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘நிபா’வுக்கு முகங்கொடுக்க முன்கூட்டியே தயாராகுவது சிறந்தது 

கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்   கொவிட்-19 தொற்று பரவுவதற்கு  முன்னரே எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் கட்சிக்குள் இருந்தவர்களும் அமைச்சரவைக்குள் இருந்தவர்களில் சிலரும், கொவிட்-19 பெருந்தொற்று நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கும், பரவாமல் இருக்கவும் பல்வேறான ஆலோசனைகனை முன்வைத்தனர்;

அமைச்சரவைக்குள் எடுத்துரைத்தனர்; முன்கூட்டிய வழிமுறைகள் தொடர்பிலான ஆலோசனைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்வைத்தனர். 

எனினும், எதற்கும் செவிசாய்க்காத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அடுத்தவர்களின் யோசனையை கேட்காது. தான் நினைத்ததை மட்டுமே செய்தமையால், கொவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்தார்.

அதில் ஆரம்பித்து, பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்து, ஜனாதிபதி பதவியை விட்டோட வேண்டிய நிலைமைக்கு அவருக்கு ஏற்பட்டது. இது, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியவர்களும், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்குள் வழங்கிய ஆலோசனைகளை செவிசாய்க்காமையும் பிரதான காரணங்களாக இருந்தன.

ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே மூடியிருக்க வேண்டிய நாட்டை, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடவேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதியே முக்கிய காரணமாக இருந்தாரென உள்வீட்டில் இருந்தே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 
இதேவேளை, கொவிட்-19 பெருந் தொற்றுக்கு உள்ளாகி, மரணித்தவர்களின் ஜனாஸாக்களை எரியூட்டியமையால் இஸ்லாமிய நாடுகளை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டதென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை அறிந்ததே. 

இதனால் நாட்டில், ஏற்றுமதி, இறக்குமதி தடைபட்டது. பொருளாதார ரீதியில் பல்வேறான பாதிப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வருவாயின்றி, செலவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. பிரதான ஏற்றுமதி வருவாயாக இருந்த ஆடைத்தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. எனினும், தேயிலை தொழிற்றுறை தாக்குப்பிடித்தது. உழைப்பாளர்களாக இருந்த தொழிலாளர்களுக்கு எவ்விதமான மேலதிக வருமானமும் கிடைக்கவில்லை என்பது கவலையாது. 

“நாங்கள் சொல்லும் போதே, விமான நிலையங்களையும், நாட்டையும் இழுத்து மூடியிருந்தால், பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என சஜித் பிரேமதாஸ தலைமையிலான  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி குற்றஞ்சாட்டியது. 

அதற்குப் பின்னர், வெளிநாடுகளில் இனங்காணப்பட்ட பிறழ்வுகள், இலங்கையிலும் இனங்காணப்பட்டன. இந்தியாவில் இருந்து வந்தவர்களில் பலர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். 

இந்தியா- கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து,   ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘நிபா’ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் இறந்துள்னர். நால்வருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

 தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் பாதிப்புகள் இல்லை என்றாலும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த ‘நிபா’ வைரஸ், இலங்கைக்குள் நுழையவிடாது முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என நாம் சுட்டிக்காட்டுகின்றோம். 

2023.09.14


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .