2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பிஹார் அமைச்சரவையில் எட்டு குற்றவாளிகள்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 19 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது தில்லி: 

பிஹாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையிலுள்ள 14 அமைச்சர்களில் 8 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஹார் சட்டப் பேரவைக்கு அக்டோபர் கடைசி வாரம் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரையிலும் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது.

இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் 2 பெண்கள் அடங்கிய 14 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு பிஹார் அமைச்சரவை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிஹார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 57 சதவீத அமைச்சர்கள் மீது, அதாவது 8 பேர்  மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 6 பேர்கள் தீவிரமான குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள். அதாவது பிணையில் விட இயலாத, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

 இவர்களில் 4 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், தலா ஒருவர் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகளையும் சேர்ந்த வர்கள்.

மேலும் 13 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.93 கோடி எனவும் தெரிய வந்துள்ளது. தாராபூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கும் மேவா லால் சௌத்ரி ரூ.12.31 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

அமைச்சர் அசோக் சௌத்ரி ரூ.72.89 லட்சம் சொத்துகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.

நான்கு அமைச்சர்கள் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். மற்ற 10 அமைச்சர்களும் பட்டப் படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்தவர்கள்.

6 அமைச்சர் கள் 41 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள். மற்ற 8 அமைச்சர் களும் 51 முதல் 75 வயதுடையவர்கள் எனவும் அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .