2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

வழக்குகளை மீளப்பெற உத்தரவிட்டார் ஸ்டாலின்

Freelancer   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட 868 வழக்குகளைத் மீளப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்துக்கு அளித்த பதிலுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

 'கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மெதேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்' என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயற்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 13.9.2021 அன்று பொலிஸ் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், 'நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனவும் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளுமாக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .