2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு 2,000 படைவீரர்களை அனுப்பியது வெனிசுவேலா

Shanmugan Murugavel   / 2017 மே 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயதான சிறுவன் ஒருவன், கொள்ளையிடும் போது கொல்லப்பட்டதையடுத்து, வெனிசுவேலா அரசாங்கத்துக்கெதிரான தீவிர நடவடிக்கையின் மையமாக மாறியுள்ள, கொலம்பிய எல்லையுடன் அமைந்துள்ள டஷிரா மாநிலத்துக்கு, 2,000 படைவீரர்களை அனுப்புவதாக, வெனிசுவேலா அதிகாரிகள், நேற்று (17) அறிவித்துள்ளனர்.   

டஷிரா மாநிலத்தின் தலைநகரான சான் கிறிஸ்டோபலிலுள்ள பல கடைகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டவாறும் படைவீரர்களினால் காக்கப்பட்டவாறும், நேற்று காணப்பட்டபோதும், சில வறிய பகுதிகளில், கொள்ளை தொடருவதாக, அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.   

மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள வெனிசுவேலாவில், அடிப்படை உணவுகள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகையில், கோப்பி, சமையல் எண்ணெய் போன்றவற்றை, மக்கள் கொள்ளையடிக்கின்றனர்.   

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான 2014ஆம் ஆண்டு போராட்டத்தின்போதும், முக்கிய நகரமாக விளங்கிய சான் கிறிஸ்டோபலில், குப்பைகளும் கார் டயர்களும் மணலும் வீதிகளில் கொட்டப்பட்டுள்ள நிலையில், நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையிலேயே, டஷிரா மாநிலத்தில், கொள்ளையொன்றின்போது, பதின்ம வயதையுடைய ஜொஸே பிரான்ஸிஸ்கோ குவரெரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அரச வழக்குத் தொடருநர் அலுவலகமும், குறித்த இறப்பை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆறு வார நெருக்கடியில் இறந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, 2014ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்குச் சமனாகும் என்பது குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .