Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2017 மே 18 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல்களில் ஒன்றில், சாட்சியாக வரக்கூடிய ஒருவருக்குப் பணம் கொடுத்து, அவரை அமைதியாக்குவதற்கு, ஜனாதிபதி மிஷெல் தெமர் ஆசீர்வாதம் வழங்கினார் என, சாட்சியமொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
மாபெரும் இறைச்சி வணிக நிறுவனமொன்றின் தலைவரான ஜோஸ்லி பட்டிஸ்டா என்பவரே, தனது தண்டனையைக் குறைப்பதற்காக உண்மையைக் கூறும் மன்றாட்டப் பேரச் சாட்சியமளிப்பாக, தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலந்துரையாடலின் ஒலிப்பதிவை வழங்கியுள்ளார்.
“கார் வோஷ் நடவடிக்கை” என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல் தொடர்பான விசாரணையாக அமைந்துள்ளது. இதன் ஓர் அங்கமாகவே, இந்த ஒலிப்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மார்ச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தனது இறைச்சி நிறுவனத்துக்குக் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அரசியல்வாதியான எடுவார்டோ குன்ஹாவுக்குப் பணம் வழங்கி, அவரை அமைதியாக வைத்திருப்பதற்கு, பட்டிஸ்டா திட்டமிட்டுள்ளார். அதற்கு ஜனாதிபதி, “அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், சரியா?” என்று பதிலளிக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதில் குறிப்பிடப்படும் குன்ஹா, பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் என்பதோடு, முன்னாள் ஜனாதிபதி டில்மா றூசெப்பை பதவியிலிருந்து வெளியேற்றுவதில் முக்கியமான ஒருவராவார். குன்ஹா தற்போது, பெட்ரோபஸ் ஊழல் குற்றத்தில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
அதேபோல், ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர், பட்டிஸ்டாவின் நிறுவனத்துக்குக் காணப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, வாராந்தம் 160,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை, 20 ஆண்டுகளுக்கு இலஞ்சமாகப் பெற்றுக் கொள்வதற்குப் பேரம் பேசிய காணொளியும் ஒலிப்பதிவும், பொலிஸாரிடம் சென்றுள்ளவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை, ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ள போதிலும், இந்தச் செய்தி வெளியானதுமே, பிரேஸிலில் ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் கலந்துகொண்டோர், ஜனாதிபதி தெமர், பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .