2021 மே 15, சனிக்கிழமை

‘ட்ரம்ப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது?’

Editorial   / 2017 மே 25 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொனால்ட் ட்ரம்ப்பின் மீது, ட்ரம்ப்பின் ஆலோசகர்களின் மூலம் எவ்வாறு தாக்கம் செலுத்துவது என்பது குறித்து, ரஷ்யாவின் சிரேஷ்ட புலனாய்வு, அரசியல் அதிகாரிகள் கலந்தாலோசித்ததாக, அமெரிக்க உளவாளிகளால் கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட தகவல்கள் வெளிக்காட்டுவதாக, நியூயோர்க் டைம்ஸ், நேற்று  (24) செய்தி வெளியிட்டுள்ளது.   

புலனாய்வு தொடர்பாக அறிந்த, இந்நாள், முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டியே, மேற்குறித்த செய்தியை, நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.   

ட்ரம்பின் பிரசாரக் குழுத் தலைவரான போல் மனஃபோர்ட், ட்ரம்புக்கு பிரசாரத்தின்போது ஆலோசனையளித்த, ஓய்வுபெற்ற ஜெனரலான மைக்கல் பிளின் ஆகியோர் தொடர்பினிலேயே,  ட்ரம்ப்பின் ஆலோசனையாளர்களின் மூலம் ட்ரம்ப்பில் தாக்கம் செலுத்துவது என்பது தொடர்பான, ரஷ்யாவின் சிரேஷ்ட புலனாய்வு, அரசியல் அதிகாரிகளின் கலந்துரையாடல் கவனஞ் செலுத்தியதாக, அச்செய்தி தெரிவிக்கிறது.   

கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுடன் ட்ரம்ப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ட்ரம்ப்பின் சார்பாக தேர்தலைச் சாய்க்கும் பொருட்டான ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய அமெரிக்க புலனாய்வுச் சமூகத்திடம் ஆழ்ந்த கரிசனைகள் காணப்பட்டதாக, மேற்படி செய்தியும் உறுதிப்படுத்தியுள்ளது.   
சில ரஷ்யர்கள், தங்களுக்கு எந்தளவுக்கு பிளினைத் தெரியுமென்ற பெருமையாகக் கூறிய நிலையில், ஏனையவர்கள், ரஷ்யாவில் வசிக்கும் உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதியான விக்டன் யனுகோவிச்சுடனான தொடர்பை தாங்கள் எவ்வாறு பயன்படுத்தினோம் என்று கலந்துரையாடியதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கால கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி யனுகோவிச்சுடன், மனஃபோர்ட் நெருங்கிப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

எவ்வாறெனினும், மனஃபோர்ட், பிளின் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்த ரஷ்ய அதிகாரிகள் உண்மையாக முயன்றனரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. தேர்தலைக் குழப்புவதற்காக, ரஷ்ய அரசாங்கத்துடன் எந்தவிதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என மனஃபோர்ட்டும் பிளினும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், “ரஷ்யர்களால், என்னில் தாக்கம் செலுத்துவதற்கு, ஏதாவதொரு நடவடிக்கை இருந்தால், எனக்குத் தெரியாது, அவர்கள் தோல்வியடைந்திருப்பார்கள்” என அறிக்கையொன்றில், மனபோர்ட் தெரிவித்துள்ளார்.   

வெள்ளை மாளிகை, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ), மத்திய புலனாய்வு முகவகரம் (சி.ஐ.ஏ) ஆகியன மேற்படி விடயம் என கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன. பிளைனின் வழக்கறிஞர், கருத்தைக் கோரும் மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .