2021 ஜூன் 16, புதன்கிழமை

மியான்மார் கடலிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் இராணுவ விமானமொன்று, 122 பேருடன் விபத்துக்குள்ளாகிய நிலையில், மியான்மாரின் தெற்குக் கரையோரத்துக்கு அப்பாலுள்ள கடலிலிருந்து, மியான்மாரின் தேடுதல், மீட்பு அணிகள், இறந்த உடல்களை, இன்று (08) மீட்டுள்ளன.   

தவயெய்ய நகரகத்துக்கருகிலுள்ள லொங்லான் கடற்பரப்பில், விமானம், நேற்று (07) விழுந்த பகுதிக்கருகிலுள்ள அந்தமான் கடலிலிருந்து, எட்டு சிறுவர்கள், 20  பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முப்படைத்தளபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள், தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கடற்கரையில் கூடியவாறு காணப்படுகின்றனர்.   

சீனத் தயாரிப்பு விமானம், தெற்கு நகரான மையிக்கிலிருந்து, வர்த்தக நகரான யங்கூனுக்கான தனது வழமையான பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது காணாமல் போன நிலையில், நேற்று முன்தினம் பிற்பகலிலிருந்து கடற்படைக் கப்பல்களும் விமானப் படை விமானங்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன.   

இன்று காலையில், கடற்படைத் தேடுதல் கப்பலொன்று, குழந்தையொன்று, பெண்ணொருவர், ஆணொருவரின் உடல்களையும், பொதிகளையும், உயிர்காப்பு அங்கிகளையும், விமானத்தினுடைய சில்லினுடையது என நம்பப்படும் டயரொன்றையும் கண்டுபிடித்திருந்தது.   

ஷான்ஸி வை8 விமானம் காணாமல் போனபோது, எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என மாறுபட்ட தகவல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் இறுதி இற்றைப்படுத்தலின்படி, மொத்தமாக 122 பேரை விமானம் காவிச் சென்றிருந்தது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.   

விமானத்திலிருந்த பயணிகளில், 15 சிறுவர்கள் உட்பட அரைவாசிக்கும் மேற்பட்டோர், இராணுவத்தினரின் குடும்பத்தினர் என்பதுடன், 35 படைவீரர்களும், 14 விமானப் பணியாளர்களும், விமானத்தில் சென்றதாக, இராணுவத் தளபதியின் அலுவலகம், அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்தோரில் சிலர், மருத்துவ சோதனைகளுக்காகவும், யங்கூனில் பாடசாலைகளுக்குச் செல்வதற்காகவும் சென்றுள்ளனர்.   

மியான்மாரில், தற்போது பருவக்காற்று என்றபோதும், விமானத்தின் பயணப்பாதையில், எந்தவொரு பாரிய புயலும் காணப்பட்டிருக்கவில்லை.

இது தவிர,  விமானத்தைச் செலுத்திய விமானி, 3,000க்கு மேற்பட்ட மணித்தியால பறப்பு அனுபவத்தைக் கொண்ட லெப்டினட் நைன் சான் என இராணுவம் பெயரிட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .