2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் சிக்கிய சிஇஓ (வீடியோ இணைப்பு)

Editorial   / 2025 ஜூலை 18 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரானும், அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பற்றித்தான் சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் பேச்சு.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பிரபல இசைக்குழுவான ‘கோல்ட்பிளே’ இசை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில், விளையாட்டுப் போட்டிகளில் ’கிஸ் கேம்’ என்ற கேமரா வைக்கப்படுவது வழக்கம்.

இதன் மூலம் போட்டியின் போது நெருக்கமாக இருக்கும் தம்பதிகளை இந்த கேமரா படம்பிடித்து பெரிய திரையில் காட்டும். அதை பார்க்கும் பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்துவர். ‘கிஸ் கேம்’ தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பிரபலம்.

இந்த சூழலில் ‘கோல்ட்பிளே’ இசை நிகழ்ச்சியின் நடுவே அங்கு வைக்கப்பட்டிருந்த ‘கிஸ் கேம்’ நடுத்தர வயது ஜோடி நெருக்கமாக நின்று கொண்டிருப்பதை பெரிய திரையில் காட்டியது. உடனடியாக இதை கவனித்த இருவரும் வெட்கப்பட்டு பிரிந்து சென்று கீழே குனிந்து கொண்டனர். இதனைக் கண்ட சுற்றி இருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி விட்டது. எங்கு திரும்பினாலும் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் இடம்பெற்ற அந்த நபர் ஆஸ்ட்ரோனமர் என்ற மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி பைரான் ஆவார். அவருடன் அந்த வீடியோவில் நெருக்கமாக இருந்த பெண் அதே நிறுவனத்தில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டின் கேபாட் என்று தெரியவந்துள்ளது.

ஆண்டி பைரானுக்கு மேகன் கெர்ரிகன் பைரான் என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், இந்த கிஸ் கேம் வீடியோ மூலம் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் ‘இணையத்தின் மிகப்பெரிய ஸ்கேண்டல்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஆஸ்ட்ரோனமர் என்பது 1.3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர மதிப்பு கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனம். உலகம் முழுவதுமுள்ள வங்கிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் சேவை வழங்குகிறது. ஆண்டி பைரான் - மேகன் பைரான் இருவரும் நியூயார்க் நகரத்தில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

பைரானின் தலைமையில் ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் கடந்த ஓராண்டில் மிகப்பெரிய அளவில் 100 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கிஸ் கேம் சர்ச்சைக்குப் பிறகு மேகன் தனது பேஸ்புக் பக்கத்தில் தன் பெயரில் இருந்த பைரானின் பெயரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் டீ-ஆக்டிவேட் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X