Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு சிரியாவின் இட்லிப்பில், ஷெல் தாக்குதல்களில் துருக்கிய இராணுவத்தினர் எண்மர் கொல்லப்பட்டதை அடுத்து டசின் கணக்கான சிரிய அரசாங்க இலக்குகளை தமது இராணுவம் தாக்கியதாக துருக்கி நேற்றுத் தெரிவித்துள்ளது.
பதிலடியாக இட்லிப்பில் 54 இலக்குகளை துருக்கிப் படைகள் தாக்கியதாகவும், 76 சிரிய அரசாங்கப் படையினரை இல்லாமற் செய்ததாகவும் துருக்கி பாதுகாப்பாமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்ததாக துருக்கி அரச ஊடகமான அனடொலு முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஷெல் தாக்குதலில் ஏழு துருக்கிப் படைவீரர்களும், துருக்கி இராணுவத்துக்காகப் பணியாற்றும் பொதுமகனொருவரும் இறந்ததாக பின்னர் துருக்கிய ஊடகங்களிடம் தெரிவித்த ஹுலுசி அகர், காயமடைந்த வேறு 13 பேர் நல்ல நிலையில் இருப்பதாக மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக, சிரிய எதிரணியின் இறுதிப் பலம்வாய்ந்த உடமான இட்லிப்பிலுள்ள தமது படைகள் மீதான தீவிர ஷெல் தாக்குதல்களுக்கு பதிலடியாக எஃப்-16 தாக்குதல் ஜெட்களின் பயன்பாடு உள்ளடங்கலான பதிலடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், துருக்கி ஷெல் தாக்குதல்களில் சிரிய அரசங்கப் படைகளைச் சேர்ந்த 13 அங்கத்தவர்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இதேவேளை, அரசாங்கப் படைகளிடையே எந்தவொரு இழப்பும் ஏற்படவில்லை என சிரிய அரச தொலைக்காட்சியின் செய்தியாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரிய அரசாங்கம் முழுக் கட்டுப்பாட்டையும் பெற விரும்புகின்ற இரண்டு பிரதான வீதிகளின் சந்தியிலுள்ள இட்லிப் நகரத்துக்கு கிழகாகவுள்ள சரகெப் நகரப் பகுதியிலேயே துருக்கிப் படைவீரர்களைக் கொன்ற ஷெல் தாக்குதல் இடம்பெற்றதாக துருக்கி பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு அறிவிக்காமல் நகர்ந்ததாலேயே துருக்கிப் பிரிவுகள் தாக்குதலுக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவுடன் தமது இராணுவ நகர்வுகளில் இணைந்து செயற்படுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .