2025 நவம்பர் 05, புதன்கிழமை

திருப்போரூர் கோவிலருகே குண்டு வெடித்து இருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி கங்கையம்மன் கோவில் அருகே நேற்று குண்டு வெடித்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கோவிலின் பின்புறத்திலுள்ள கோவில் குளமொன்றுக்கருகில் ஆறு பேர் கொண்ட நண்பர்கள் குழாமொன்று இருந்தபோதே பயங்கர சத்தத்துடன் நேற்று முன்தினம் மாலையில் குண்டு வெடித்துள்ளது.

இந்நிலையில், காயமடைந்த அறுவரும் உடனடியாக செங்கல்பட்டு அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த ஒருவர் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்தார்.

அந்தவகையில், படுகாயமடைந்த இரண்டு பேர் உட்பட ஐவர் செங்கல்பட்டு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த மற்றையவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவர் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள ராஜிவ் காந்தி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய மூவரும் செங்கல்பட்டு அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாக கடந்த ஒரு வாரமாக பரபரப்பு நிலவி வருகிறது. கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பொலிஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குண்டு வெடிப்பு நடைபெற்ற மானாம்பதி கங்கையம்மன் கோவிலில் காஞ்சிபுரம் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சசம்பவம் தொடர்பாக மானாம்பதி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு வெடித்தது எப்படி என்பது பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X