Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வாரங்களுக்குள் நான்காவது தடவையாக, தனது கிழக்கு கரையோரத்திலுள்ள கடலுக்குள் ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா இன்று (06) தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் தலைநகர் பியொங்யொங்கிலிருந்து தென்மேற்காக 80 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தென் ஹவன்ஹயே மாகாணத்திலுள்ள கவைலுக்கு அருகிலிருந்து குறுந்தூர ஏவுகணைகள் போலத் தோற்றமளிக்கும் இரண்டு ஏவுகணைகள் நேற்று அதிகாலையில் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், குறித்த ஏவுகணைகள், கடந்த மாதம் 25ஆம் திகதிக்குப் பிறகு ஏவப்படும் நான்காவது தொகுதி ஏவுகணைகள் ஆகும்.
குறித்த ஏவுகணைகள் 450 கிலோ மீற்றரளவுக்கு பயணித்ததாகும், 37 கிலோ மீற்றர் வீச்சத்தையடைந்ததாகவும் பணியாட்தொகுதியின் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
அந்தவகையில், கடந்த மாதம் 25ஆம் திகதி வடகொரியாவால் ஏவப்பட்ட குறுந்தூர ஏவுகணைகள் போன்ற பயணப்பாதையை குறித்த ஏவுகணைகள் கொண்டிருந்ததாக ஐக்கிய அமெரிக்க, தென்கொரிய புலனாய்வு முகவரகங்கள் கருதுவதாக பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதியானது முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஏனெனில், குறித்த ஏவுகணைகள் 450 கிலோ மீற்றர் தூரம் சென்ற நிலையில், இவ்வகையான ஏவுகணைகளின் வீச்சத்துக்குள் முழு தென்கொரியாவும் காணப்படுகின்றது.
இதேவேளை, இராஜதந்திரத்தில் ஈடுபாட்டுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள வடகொரியா, தமது அணு ஆயுதங்கள், ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பிலான தடைகள் மற்றும் அரசியல் அழுத்தத்தை ஐக்கிய அமெரிக்கா தளர்த்துவதற்கு இவ்வாண்டின் இறுதியில் வரை காத்திருப்போம் எனக் கூறியுள்ளது.
எவ்வாறெனினும், வடகொரியாவின் மீண்டும் மீண்டுமான எச்சரிக்கைகளை ஐக்கிய அமெரிக்காவும், தென் கொரியாவும் சட்டை செய்யாமல் விட்டால் அவர்களை பாரியதொரு விலையைச் செலுத்தச் செய்வோம் என வடகொரியாவின் வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாக வடகொரியாவின் அரச செய்தி முகவரகமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .