Freelancer / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேசில் மாணவர்கள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதலில், 14 பொலிஸார் உட்பட 92 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
பங்களாதேசில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 'பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற பெயரில், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். முதலில் பொலிஸாரும், பிறகும் இராணுவமும் இந்தப் போராட்டங்களை தடுக்க முயற்சி செய்தன.
தற்போது இந்த போராட்டம் அரசியலாக மாறியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான, பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டதாக, ஆளும் அவாமி லீக் குற்றஞ்சாட்டியது.
இதைத் தொடர்ந்து, அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறங்கினர். இதனால், ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையேயான மோதலாக இந்தப் போராட்டம் உருமாறி உள்ளது.
இந்நிலையில், டாக்கா உட்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நேற்று மிகத் தீவிரமானது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இதை எதிர்த்து, ஆளுங் கட்சியின் மாணவர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகள், சொத்துகளுக்கு தீ வைப்பது, கல்வீசி தாக்குவது என, வன்முறை சம்பவங்கள் நடந்தன. மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவமும் களமிறங்கியது. இதனால் நேற்று ஒரு நாளில், 14 பொலிஸார் உட்பட, 92 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல், காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின.
இதற்கிடையே சட்டோகிராமில், கல்வி அமைச்சர் போஹிபுல் ஹாசன் சவுத்ரி நோபெல், மேயர் கரீம் சவுத்ரி, உள்ளூர் எம்.பி., உள்ளிட்டோரின் வீடுகளை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதற்கு பதிலடியாக, பி.என்.பி., கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில், அவாமி லீக் கட்சியினர் சேதப்படுத்தினர்.
முன்னதாக டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜீப் மருத்துவப் பல்கலைக்குள் அடையாளம் தெரியாத சிலர் நுழைந்து உள்ளனர்.
கைகளில் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த அவர்கள், அங்கிருந்த கார்கள், ஆம்புலன்ஸ்கள், பைக்குகளை சேதப்படுத்தினர்.
இதனால், பல்கலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது. போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமைதி பேச்சுக்கு அரசு அழைப்பு விடுத்தது.
ஆனால், அதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நிராகரித்துள்ளனர். பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மதரசாக்களில் உள்ள மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி, போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, 'வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில், மிகப் பெரிய பாதிப்பும், பதற்றமும் ஏற்படும்' என, பங்களாதேசின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.S
16 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
58 minute ago
1 hours ago