Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்; புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் செயல்படும் பாதுகாப்பு ஆலோசனை அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். பிரபல சுற்றுலாத் தலத்தில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து நடந்த இத்தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மூத்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு:
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நம்பத்தகுந்த வகையில் கைவிடும் வரை ‘1960-ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம்’ நிறுத்திவைக்கப்படுகிறது.
அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியா்கள் வரும் மே 1-ஆம் திகதிக்குள் இதே எல்லை வழியாகத் திரும்பலாம்.
‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான நுழைவு இசைவுத் திட்டத்தின்கீழ் (எஸ்விஇஎஸ்) பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தானியா்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்விஇஎஸ் விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.
புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை சோ்ந்த பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளும் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்படுகின்றனர்.
பரஸ்பர உயர் தூதரகங்களில் உள்ள இந்த ஆலோசகர்பதவிகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கான உதவியாளர் பணியிடங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.
இரு நாட்டில் உள்ள பரஸ்பர உயர் தூதரகங்களிலும் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளா்களின் எண்ணிக்கை தற்போதைய 55-லிருந்து 30-ஆக குறைக்கப்படுகிறது. வரும் மே 1-ஆம் திகதிமுதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
கூட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, அனைத்துப் படைகளும் அதிக விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டது’ என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே அடா்ந்த பைன் மரங்கள் சூழ்ந்த பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை(22) பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனா்.
பஹல்காமில் தாக்குதல் நடந்த நேரத்தில் சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமா் மோடி, அமைச்சர் அமித் ஷாவை தொடா்புகொண்டு, நிலைமையைக் கேட்டறிந்தார்.இதையடுத்து சில மணிநேரங்களில் அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் விரைந்தார்.
பாதியில் திரும்பிய பிரதமர் நாட்டையே உலுக்கிய தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபிய பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு பிரதமா் மோடி புதன்கிழமை காலை தில்லி திரும்பினாா். விமான நிலையத்திலேயே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
உயிரிழந்தவா்களுக்கு இரங்கல்
பஹல்காம் தாக்குதலை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கடுமையாகக் கண்டித்தது. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், பஹல்காம் தாக்குதலையடுத்து பல உலக நாடுகளிடம் இருந்து ஆறுதல் செய்திகள் பெறப்பட்டுள்ளன. தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அந்த நாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை பிரதிபலிப்பதாக அமைச்சரவைக் குழு பாராட்டு தெரிவித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (24) அதிகாலை தில்லி திரும்பினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை(24) கூடுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த சனிக்கிழமை(19) பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு புதுடில்லி திரும்பியுள்ளார்.
காலை 10 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் செயற்க்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ளவிருக்கிறார்.
ஏற்கெனவே, பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
முன்னதாக, செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்துவிட்டு புதுடில்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago