2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

யார் இந்த சார்லி கிர்க்?

Editorial   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க் என்ற வலதுசாரி ஆதரவாளர், வர்ணனையாளர், ‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனர், அனைத்துக்கும் மேலாக ட்ரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அடங்கிய வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சார்லி கிர்க் கொலைக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, தனது ஆதரவாளரின் மரணத்தால் கடும் துன்பமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சுடப்பட்ட சார்லி கிர்க் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிகிறது. 

இந்தப் படுகொலை சம்பவத்தை அடுத்து உடா பல்கலைக்கழகத்துக்கு வரும் 15-ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்த பொலிஸார் அவரை விடுவித்துவிட்டனர். கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
யார் இந்த சார்லி கிர்க்? - 31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

சார்லிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. ஒரு முறை சார்லியை ட்ரம்ப் ‘ஒளியின் போராளி’ என்று புகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் (Make America Great Again - MAGA) என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ட்ரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார் சார்லி. சர்வசாதாரணமாக வெள்ளை மாளிக்கைக்குச் சென்று ட்ரம்ப்பை சந்திக்கக் கூடியவர். அண்மையில், ட்ரம்ப்புடன் அவர் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகின.

சார்லி கிர்க், கருக்கலைப்புக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தவர். அவர் எந்த அளவுக்கு பழமைவாதி என்றால், ஒருமுறை அவரிடம், “உங்களது 10 வயது மகள் பாலியல் வன்கொடுமையால் கருவுற்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, “அந்தக் குழந்தையை என் மகள் பெற்றெடுக்க வேண்டும் என்றே சொல்வேன்” என்று அதிர்ச்சியளிக்கும் பதிலைக் கொடுத்தார்.

அதேபோல், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வசீகரம் குறைந்துவிடும். கருத்தடை செய்வதால் பெண்கள் கோபாவேசம் நிறைந்தவர்களாக, கசப்பானவர்களாக மாறிவிடுவார்கள் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்.

அதேபோல் சார்லி கிர்க் துப்பாக்கி கலாச்சாரத்தையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். சில துப்பாக்கி வன்முறைகள் சரியே என்று கூறியிருக்கிறார்.

அப்படிப் பேசிய சார்லி கிர்க்கும் துப்பாக்கிச் சூட்டுக்கே பலியாகியிருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சார்லி 2021-ல், எரிகா ஃப்ராட்ஸ்வே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எரிகா, அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லி கிர்க் படுகொலையால் ஜனாதிபதி ட்ரம்ப் மிகுந்த வேதனையடைந்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்க இளைஞர்களின் மனதை சார்லியைவிட மிகச் சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் எவரும் இருக்க இயலாது. அவரை அனைவரும் நேசித்தனர். குறிப்பாக என்னால் அதிகமாக நேசிக்கப்பட்டவர். அவர் நம்முடன் இல்லை” என்று வேதனையைப் பகிர்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .