Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல்கொய்தாவின் நிறுவுநர் ஒஸாமா பின் லாடனின் மகனான ஹம்ஸா பின் லாடன், வான் தாக்குதலொன்றில் இறந்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐக்கிய அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹம்ஸா பின் லாடன் எங்கு, எந்தத் திகதியில் இறந்தார் என்பது தெளிவில்லாத நிலையில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்டகன் கருத்தெதனையும் தெரிவித்திருக்கவில்லை.
30 வயதுகளை உடையவராகக் கருதப்படும் ஹம்ஸா பின் லாடன் முன்னதாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மீது தாக்குதல்களை நடாத்துமாறு ஒலி, ஒளிச் செய்திகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹம்ஸா பின் லாடனின் கைப்பற்றலுக்கு வழிவக்கும் தகவலுக்கு 1,000,000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அளிப்பதாக இவ்வாண்டு பெப்ரவரியில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது.
என்.பி.சி நியூஸ், த நியூ யோர்க் டைம்ஸ், சி.என்.என் உள்ளிட்ட ஐக்கிய அமெரிக்க ஊடகங்களில் பெயரிடப்படாத ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி பரவலாக ஹம்ஸா பின் லாடனின் இறப்புச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அல்-கொய்தாவின் வளர்ந்துவரும் தலைவரொருவராக ஹம்ஸா பின் லாடன் நோக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் பங்கெடுத்திருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையொன்றில் ஹம்ஸா பின் லாடன் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, செய்தியாளர்களால் நேற்று முன்தினம் வினவப்பட்டபோது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்த நிலையில், அல்-கொய்தாவிடமிருந்தும் எந்த உறுதிப்படுத்தலும் இருந்திருக்கவில்லை.
ஈரானில் வீட்டுக் காவலில் இருந்ததாக ஹம்ஸா பின் லாடன் நம்பப்படுகையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கருகில் அவர் தளத்தைக் கொண்டிருக்கலாம் என ஏனைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .