2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இல்மனைட் அகழ்வு: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு நடவடிக்கையை வலான ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று (09) சுற்றி வளைத்தது.

 பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் வலான ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த அரசாங்க காலப்பகுதியில் பிரபல அரசியல்வாதிகள் குழு இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்ததா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
 
வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள அருவக்காடு உணர்திறன் சுற்றுச்சூழல் அமைப்பில் முறையான அனுமதியின்றி இல்மனைட் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தை வலான ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை செய்து அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
 
இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 200 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
 
20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோத நடவடிக்கையால் பல வருடங்கள் பழமையான பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இது வில்பத்து தேசிய பூங்காவின் தூண்டுதல் மண்டலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுடன், இந்த இடத்திற்கான நீர்விநியோகம் லுணு ஓயாவிலிருந்து பெறப்பட்டுள்ளது. 

இந்த இடத்தில் நீர்த்தேக்கம் கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டாலும், அகழ்வு நடவடிக்கைகளுக்காக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், தொல்பொருள் பரிந்துரைகளை புறக்கணித்து, இரண்டு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் 20 அடிக்கு மேல் ஆழத்தில் இங்கு ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
 
இந்த மோசடிக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
அந்த இடத்தைப் பொறுப்பேற்ற வலான ஊழல் தடுப்புப் பிரிவு, பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், அந்த இடத்தைப் பாதுகாக்க வன்னாத்தவில்லு பொலிஸ் அதிகாரிகள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுத்தது.
 
இந்தத் திட்டம் தொடர்பான சமர்ப்பணங்கள் புத்தளம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X