Editorial / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

“10 சிறுகதைகள் கொண்ட “எச்.மெத்தியேஸ் சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் பல்வேறு விதமான கதை மாந்தர்களையும், கதை சூழல்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது.
79ஆவது வயது தாண்டிய நிலையில் தன்னுடைய முதல் நூலினை வெளியிடும் எங்கள் பிரதேசத்தின் மூத்த எழுத்தாளர் எச்.மெத்தியேஸ் மூன்று தலைமுறைக்கும் பொதுவான எழுத்தாளராக விளங்குகிறார்.
1966 இல் எழுதத் தொடங்கிய இவர் 2024 வரை எழுதியுள்ளார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக எழுத்துலகில் பயணிக்கும் இந்த எழுத்தாளரின் படைப்புகள் இன்றைய தலைமுறையினரும் படித்து தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளமை இவரது படைப்பின் சிறப்புகளாக உள்ளன.
வாழைச்சேனையில் வாழ்ந்து வருகின்ற எழுத்தாளர் எச். மெத்தியேஸ், கிரானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலையில் கற்கும் காலத்தில் இவரது தமிழ் ஆசிரியராக விளங்கிய சீனித்தம்பி ஆறுமுகம் என்பவரை பாடசாலையே மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கொண்டிருக்கிறது.
அப்போது தமிழகத்தில் “கல்கி” இதழ் நடத்திய ஈழத்துச் சிறுகதைகள் போட்டியில் “நவம்” எனும் புனைபெயரில் இவர் எழுதிய “நந்தாவதி” எனும் சிறுகதை முதலிடத்தைப் பெற்றதுடன், கல்கி இதழில் பிரசுரமாகி இருந்தது. அதற்காகத் தான் இத்தனை பாராட்டுக்களும் இதனைக் காண்கின்ற நமது மெத்தியேஸ் அவர்களுக்கு “தானும் தன் ஆசிரியரைப் போல் எழுத்தாளனாகி, இது போல் தனக்கும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டுத் தான் தானும் எழுத ஆரம்பித்ததாக கூறுகிறார்.
அன்று எந்த ஆசிரியரைப் பார்த்து தானும் எழுத வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டாரோ! அவரைப் பற்றி இவரே அறியாத ஒரு தகவலைக் கூறுகின்றேன். ஆரையம்பதி நவம் அவர்கள் எழுதிய “கூத்து” எனும் சிறுகதை இப்போது க.பொ.த. உயர்தர தமிழ் பாட விதானத்தில் இடம்பெற்றுள்ளது. நம் அண்மையில் வசிக்கின்ற ஓட்டமாவடி அறபாத் அவர்களின் ”மூத்தம்மா” சிறுகதை பாடத்திட்டத்தில் உள்ளது. அதேபோல், அவரது ஆசிரியர் கதையும் இப்போது தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க பட்டுள்ளது. அதுபோல நவம் அவர்களின் மாணவரான எழுத்தாளர். எச்.மெத்தியேஸ் அவர்களின் சிறுகதையும் என்றோ ஒருநாள் பாடத்திட்டத்தில் வரும்! வரும்!....” என அரங்கு நிறைந்த கைதட்டலுடன் தனது நூல் நயவுரையில் தெரிவித்தார் கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும், பிரதேசத்தினுடைய பிரபல தமிழ்ப் பாட ஆசிரியரும், எழுத்தாளருமான திரு.எ.த.ஜெயரஞ்சித் அவர்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசியப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற “எச்.மெத்தியேஸ் சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழாவிலேயே மேற்படி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் எ.த.ஜெயரஞ்சித் அவர்கள்.
கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டிலக்சினி சசிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, திரு.யோ.றொஷ்மன் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதேசத்தின் எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளரின் குடும்பத்தினர், வாசகர்கள் எனப் பலர் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமான விழாவில், அதனையடுத்து, மங்கல ஒளியேற்றும் விழா சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அண்மையில் மறைந்த வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் அதிபர் அமரர். அந்தோனி ஜெயஜீவன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர். அமரர்.மு. தவராஜா மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தின் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சிக்காய் பங்களிப்பு செய்த அமரர்களுக்கு மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து செல்வி. பிரணவாஸனா சுஜிதலால் அவர்களின் தமிழ் மொழி வாழ்த்தும், செல்வி. கிறிஸ்மிதா சுஜீக்காந் அவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. வரவேற்புரையை கவிஞர். தமிழ்க்கீரன் த.கி.ஷர்மிதன் நிகழ்த்தினார். தலைமையுரையினை யோ.றொஷ்மன் வழங்கினார். நூலினையும் நூல் ஆசிரியரையும் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார் தமிழூராள் அனுஸ்திக்கா.
அதனைத் தொடர்ந்து, நூல் வெளியீடு இடம்பெற்றது. அதிதிகள் முன்னிலையில், எழுத்தாளர் எச்.மெத்தியேஸ் அவர்கள் தனது கரங்களால் நூலின் முதல் பிரதியை பிரதம அதிதி திருமதி. டிலக்சினி சசிதரன் அவர்களுக்கு வழங்கி நூலை வெளியிட்டு வைத்தார்.
சிறப்புப் பிரதிகளை வாழைச்சேனை தங்க மஹால் ஜூவல்லரி உரிமையாளரும் சமூக சேவகருமான இரா.மணி அவர்களும், சமூக சேவகரான ஆ.பன்னீர் அவர்களும் பெற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவருக்கும் எழுத்தாளரும், பிரதம அதிதியும் இணைந்து நூல் பிரதிகளை வழங்கி வைத்தனர்.
இரா.மணி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். கவிஞர்.வில்சன் சுதாகர் அவர்கள் எழுத்தாளரையும் நூலையும் வாழ்த்தினார். பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டிலக்சினி சசிதரன் அவர்கள் “அழகாகவும் அற்புதமாகவும் நிகழ்ந்த இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக தனது மகிழ்ச்சியையும், 79 வயது தாண்டிய நிலையில் தனது 50 ஆண்டு கால எழுத்துலக வாழ்வின் அறுவடையாய் இந்த நூலினை இன்று வெளியிடுகின்ற எழுத்தாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இறுதியாக, எழுத்தாளர் எச்.மெத்தியேஸ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். “விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு, தனது கலை, இலக்கியப் பயணத்தில் தன்னை ஊக்குவித்து வளர்த்து விட்டவர்களுக்கும், இந்த புத்தக வெளியீட்டினை நடத்துகின்ற விழாக் குழுவினருக்கும் தனக்கு பக்கபலமாய் விளங்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு “பாரதி சமூக, கலை, இலக்கிய மேம்பாட்டுக் கழகத்தினரும், பேத்தாழை “விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றத்தினரும் இணைந்து எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். கவிதாயினி சுஜி பொற்செல்வி அவர்கள் எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கவிதை பாடி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, எழுத்தாளரின் குடும்பத்தினர் சார்பாக பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் தனது கரங்களால் விழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இறுதியாக, எழுத்தாளரின் பேத்தியினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. விழா நிகழ்வுகளை கவிதாயினி ஜெ.அனு சதுர்த்திகா தொகுத்து வழங்கினார்.
1946இல் கிரானில் பிறந்த ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் அவர்கள் தன்னுடைய 20 வயது முதல் கலை, இலக்கிய துறையில் இயங்கி வருகிறார். சிறுவயதில் இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு கால் நடக்க முடியாது போனாலும், தனது தன்னம்பிக்கை விடாமுயற்சியினால் பிரதேசத்தில் மாபெரும் கலைஞராக உயர்ந்து நிற்கிறார். கவிதை, ஓவியம், மேடை நாடகம், பேச்சு, சிறுகதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ள இவருக்கு 2010ஆம் வருடம் இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான “கலாபூஷணம்” விருது வழங்கப்பட்டது. பேத்தாழை பொது நூலகமும் விபுலானந்தர் கலை இலக்கிய மன்றமும் இணைந்து இவருக்கு “முத்தமிழ் கலைஞர்” எனும் விருதினை அண்மையில் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.















3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago