2025 நவம்பர் 19, புதன்கிழமை

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்

R.Tharaniya   / 2025 ஜூலை 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (13)அன்று கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர்  ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்ததாவது,கடின பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யும் போது கிராமத்தில் கஷ்ட நிலை  அல்லது பரிச்சயத்தின் அடிப்படையில் அல்லாமல், மாவட்ட அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் உரிய முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்.

அத்தோடு, புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலை முடித்து வெளியாகும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு அல்லது பட்டப்படிப்பு தொடர வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது எல்லா மாணவர்களுக்கும்  கிடைக்கும் வரலாற்றுப் பெரும் வாய்ப்பாகும். சர்வதேசத்துடன் பொருந்தக்கூடிய தரமான கல்வியை வழங்குவதற்கு இந்த சீர்திருத்தம் உதவும். பாடசாலையை கல்வியை விட்டு வெளியேறும்   போதே வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாகவும் அல்லது உயர்கல்விக்கு செல்லத் தகுதியான வர்களாகவும் மாணவர்களை உருவாக்குவதே நோக்கமாகும்.

மாணவர்களுக்கு தேசிய தொழிற் தகைமை (NVQ ) சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்புக்குத் தயாராக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திறன்கள் (soft skills) முன்பு பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொடுக்கப்பட்டன,

ஆனால் அவை பாடசாலை மட்டத்திலேயே வழங்கப்படும். 9ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்கள் எதிர்கால தொழிலைத் தேர்வு செய்யும் அனுபவத்தைப் பெறும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

11 அல்லது 13 ஆண்டுகள் கல்வி முடித்த பிறகு வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவும், பட்டப்படிப்பு தொடரவும் அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

சீர்திருத்தத்தின் போது பாடத்திட்டம் மட்டுமல்லாமல், பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது,ஆசிரியர்களை பயிற்றுவிப்பது,மக்களிடையே ஆராய்ச்சி மற்றும் கலந்துரையாடல் ஏற்படுத்துவதும் செய்யப்படும்.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.கஷ்ட பிரதேச  பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிராமத்தின் நெருக்கடி அல்லது நண்பர்கள் காரணமாகத் தேர்வு செய்யக் கூடாது.

உறுதியான நடைமுறைப்படி,மாவட்ட அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் தேர்வு செய்ய வேண்டும்.கஷ்ட  பாடசாலைகளில் உள்ள மாணவர்களை அந்தந்த கிராமங்களுக்குள் வைத்து  தரமான கல்வி வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு, மாகாண சபைகள், மாகாண கல்வி திணைக்களம், வலய மற்றும் பிரதேச கல்வி அலுவலகங்கள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் வலியுறுத்தினார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர,பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, சண்முகம் குகநாதன்,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ,மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,பிரதம செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், மாகாண கல்வி திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அபு அலா , ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X