2026 மார்ச் 16, திங்கட்கிழமை

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனம்

Editorial   / 2026 மார்ச் 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாறுக் ஷிஹான்

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12) இரவு, மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியிலிருந்து அம்பாறை - நிந்தவூர் பகுதிக்கு 24 மாடுகளுடன் பயணித்த கனரக வாகனம் ஒன்றைக் கல்முனை தலைமையக பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது, முறையான அனுமதிப்பத்திரம் இருந்தபோதிலும், வாகனத்தில் மாடுகள் மிகவும் நெருக்கமாகவும், மிருகவதை சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்றி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸாரால் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கல்முனை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதவான், வாகனத்தைப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனத்தில் இருந்த மாடுகளில், இடநெருக்கடி காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகள் கல்முனை மாநகர சபையின் உதவியுடன் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்டத்தின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X