2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

'தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்'

Thipaan   / 2016 மார்ச் 09 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக, நேற்றைய (09) தினம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது' என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்தோடு, 'கடந்த 15 நாட்களாக, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய பின்னர்,

சட்டமா அதிபர் ஊடாக அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றும் அவர் கூறினார்.

 ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ள கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,

'உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அதில் முக்கியமானது, எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில், தங்களை சிறையில் அடைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவதாக, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனழ்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர், மீண்டும் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளமை மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து, நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

கடந்த 15 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ள இந்த கைதிகள், நீரை மட்டுமே அருந்தி வருகின்றனர். நான் அவர்களைப் பார்க்கச் சென்ற போது, உடலில் பலமில்லாத நிலையில், பாய்களில் சுருண்டு படுத்திருந்தனர்' என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .