2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தெமட்டகொட சமிந்தவின் தலை, நெஞ்சில் சூடு

Kanagaraj   / 2016 மார்ச் 02 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர் என அறியப்படும், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்ஸின் மீது, இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகங்களில், அவரும் மற்றுமொருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம், கொழும்பு-09 தெமட்டகொடை, சமந்தா திரையரங்குக்கு இடப்பக்க வீதியான, ஸ்ரீ சத்தர்ம மாவத்தையில் உள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு அண்மையில், நேற்றுப் புதன்கிழமை மாலை 3.40க்கு இடம்பெற்றது என்று, பொலிஸ் திணைக்கள ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர தொடர்பிலான வழக்குக்கான சந்தேகநபர்களை, வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிந்த சிறைச்சாலை பஸ்ஸின் மீதே, சரமாரியான துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேகநபர்களை ஏற்றிக்கொண்ட சிறைச்சாலை பஸ், அளுத்கடையிலிருந்து ஸ்ரீ சத்தர்ம மாவத்தையூடாக வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி பயணித்துள்ளது. அவ்வீதிக்கும் பேஸ்லைன் வீதிக்கும் இடையிலான சந்தியில், போக்குவரத்து சமிக்ஞைக்காக தரித்து நின்றபோதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில், அவ்விடத்துக்கு விரைந்த அல்லது தருணம் பார்த்து அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இரு இனந்தெரியாத நபர்களில் ஒருவரே, மோட்டார் சைக்கிளிலிருந்து கீழிறங்கி,  ஏ.கே-47 தன்னியக்க துப்பாக்கியினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்தருணத்தில், சிறைச்சாலை பஸ்ஸில், பொலிஸார் இருவரும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அந்த நால்வரும் பதில் துப்பாக்கிப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

இதேவேளை, மோட்டார் சைக்கிளுக்கு அண்மையிலேயே, கறுப்பு நிறத்திலான ஹைபிரிட் காரொன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் சாரதி உட்பட மூவர் இருந்துள்ளனர் என்றும், துப்பாக்கிதாரி வந்த மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்ற பாதையிலேயே அந்த காரும் தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விரு வாகனங்களும், களனிப் பக்கமாக தப்பிச்சென்றுவிட்டதாக அறியமுடிகின்றது. பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான சமந்த ரவி ஜயநாத்தின், தலை மற்றும் நெஞ்சுப்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ள என்று, சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஜெனரல் நிஷாந்த ரணசிங்க தெரிவித்தார்.

அவருடன் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளார் என்றும் அவ்விருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்;றும் நிஷாந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

அவ்விருவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் விபத்துச் சேவைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னியக்க துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் ஒன்று, ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் அவ்விடத்தில் கிடந்தது. துப்பாக்கிதாரி பயன்படுத்திய துப்பாக்கியில், ஒருசுற்று ரவைகள் நிறைவடைந்ததன் பின்னர், துப்பாக்கிதாரி மற்றுமொரு சுற்று ரவைகள் அடங்கிய மகஸினை பொருத்துவதற்கு முயன்றுள்ளார் என்றும் அந்த மகஸினே கீழே விழுந்துள்ளது என்றும் பொலிஸார் அனுமானிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகங்களை அடுத்து, அப்பகுதி அல்லோலகல்லோப்பட்டதுடன், பேஸ்லைன் உள்ளிட்ட பிரதான வீதிகளில், சில மணிநேரத்துக்கு, வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.  
சம்பவத்தையடுத்து விரைந்த பொலிஸார்,

பொலிஸ் மோப்பநாயைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த சமிந்த ரவி ஜயநாத், கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் வீதியில், அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .