2021 ஜூலை 26, திங்கட்கிழமை

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Super User   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் இலங்கை அரசியலில் ஜனாதிபதியின் குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  வெளியிடப்பட்டது.

'ஜனாதிபதியின் சகோதரர்களில் இருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என முக்கிய நிறைவேற்றதிகார பதவிகளை வகிக்கின்றனர். மற்றொரு சகோதரர் சபாநாயகராக விளங்குகிறார்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் கூட்டணியினரும் பதவிக்கு வந்த தேர்தல்கள் சர்ச்சைக்குரியவை என சுயாதீன அவதானிப்பாளர்களை மேற்கோள்காட்டி அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கமும் அதன் முகவர்களும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் நீதிக்குப் புறம்பான கொலைகளை மேற்கொண்டனர். காணாமல் போதல் தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாக இருந்தது. எனத் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, எனினும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

10,000 பேருக்கான சிறைச்சாலைகளில் சுமார் 26,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 1400 பேர் பெண்கள். மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் சிலவேளை உடல், வார்த்தை ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகினர்.

தண்டனைகளிலிருந்து தப்புவதற்கான உத்தியோகபூர்வ மன்னிப்பு ஒரு பிரச்சினையாக இருந்தது. மனித உரிமை மீறல்களுக்காக எந்த இராணுவ அல்லது பொலிஸ் அங்கத்தவரும் சிவில் அல்லது இராணுவ நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டாக தகவல்கள் இல்லை.

நீதித்துறை சுதந்திரத்தின் சீரழிவு மற்றொரு தீவிர கரிசனையாக உள்ளது எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

'நீதித்துறை நிறைவேற்றதிகார செல்வாக்கிற்கு உட்பட்டதாகவுள்ளது. பிரஜைகளின் அந்தரங்க உரிமைகளில் அரசாங்கம் அத்துமீறியுள்ளது.'

'ஓய்வுபெற்ற நீதிபதி மஹானாம  திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குவுக்கான ஆணை மார்ச் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த போதிலும் அந்த ஆணைக்குழு தனது அறிக்கையை கையளிக்கவில்லை.

'சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை. ஜுலை 30 ஆம் திகதி சியத்த தொலைக்காட்சி மீதான தாக்குதல் தீ வைப்பு மற்றும் இரு ஊழியர்கள் காயமடைந்தமை தொடர்பான  விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.'

'இத்தாக்குதலுக்கும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி எம்.ரி.வி. எம்.பி.சி. கலையகம் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்குமான ஒற்றுமைகளை சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விமான்கள் சுயதணிக்கையை மேற்கொள்வதற்கு பணியவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. '; சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஐ.நா. நிகழ்ச்சியொன்றை நடத்துவதை கொழும்பிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் நிர்வாகம் தடுத்ததாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொள்வனவுகள் தொடர்பான அரசாங்க ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் அவ்வறிக்கை விமர்சித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .