2021 மே 13, வியாழக்கிழமை

மூன்றாவது குழந்தைக்கான கொடுப்பனவு எவருக்கும் கிடைக்கவில்லை: ஜே.வி.பி.

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

படை வீரர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும்போது 100,000 ரூபா வழங்குவதாக 2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும்,இந்த வருடத்தில் படை வீரர்கள் எவரும் இந்த பணத்தை பெறவில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதாக கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இருப்பினும் இதையும் அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியென்றே கருத வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜித்த ஹேரத் கூறினார்.

இந்த கொடுப்பனவுக்காக 2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் படை வீரர்களின் குடும்பங்களுக்கு 1,200 மில்லியன் ரூபா ஒதுக்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

'படை வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 100,000 ரூபா வழங்கப்பட்டதெனின், 12,000 குடும்பங்களுக்கு இந்த பணம் கிடைத்திருக்கும். ஆனால் எந்தவொரு படை வீரர் குடும்பமும்; இந்த சலுகையைப் பெறவில்லையென்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த வருடம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கும் இவ்வாறான சலுகைத்திட்டம் வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். ஆனால் இது வெறும் வாய்ப்பேச்சு மற்றும் கண்துடைப்பாகும்' என விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை தொடர்பாக கூறுகையில் ஜனாதிபதி முரண்பட்ட கருத்தைக்; கூறினார். 2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரையில் வறுமை நிலையானது 15 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக குறைவடைந்ததாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரையில் வறுமை நிலை 8.9சதவீதமாக தொடர்ந்தும் இருப்பதாக  ஜனாதிபதி அறிவித்தார்.

இதேவேளை, 'திவிநெகும' திட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டில் உணவுப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டதென்று சுட்டிக்காட்டியதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

'எதை நம்புவதென்று எங்களுக்குத் தெரியவில்லை'  எனவும் அவர் கூறினார். (Kelum Bandara)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .