2021 மே 14, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2017 ஜூன் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாகப் பேசப்படுகின்றது.   

சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார்?, மக்கள் ஏன் கொந்தளித்தார்கள்?, குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன.  

ஆனால், எழுதப்படுகின்ற பதில்கள் எல்லாமே ஒரேயிடத்தில் வந்து முட்டி நிற்கின்றன. அவை, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். மக்களின் விமர்சனங்களுக்குப் பயந்து, சம்பந்தன் முள்ளிவாய்க்காலுக்கு வரவேண்டி ஏற்பட்டிருக்கின்றது’ என்பது மாதிரியான ஒத்த நிலையைக் கொண்டிருக்கின்றன.   

இந்தப் பதில்கள் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியல் சூழலுக்கு புதியவை அல்ல; இப்படியான பதிலைக் குறைந்தது பத்து வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அந்த விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்ற தரப்பு மாத்திரமே தமிழ் மக்களின் ஆணை பெற்ற தரப்பாக மீண்டும் மீண்டும் அடையாளம் பெற்று வருகின்றது. அது ஏன்?  

மஹிந்த ராஜபக்ஷவை அகற்றுவதன் மூலம் கிடைக்கும் சிறிய இடைவெளியைக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சற்றேனும் முன்னோக்கி முன்நகர்த்த முடியும் என்று நம்பியோர் பலர்.   

ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளை, எந்தவித முன்னேற்றமும் இன்றி, வெறுமனே கடந்து வந்திருக்கின்றோம். செல்லரித்துப் போயுள்ள அடிப்படைகளைச் சரிசெய்து, சூழலைப் பலப்படுத்துவது சார்ந்த ஏற்பாடுகளுக்கு எந்தத் தரப்பும் முனையவில்லை.   

 அப்படியான முனைப்புகள் என்று நம்பப்பட்டவைகளும் கூட ‘சோடா நுரை’ மாதிரியே எழுந்து அடங்கிவிட்டன. அல்லது, அப்படியான யோசனைகளைக் கொண்டிருந்த ஒரு சிலரையும் அடையாளச் சாயங்கள் பூசி விடயங்களைக் கோட்டை விட வைத்திருக்கின்றோம்.  

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான வெற்றிடத்தைக் குறைநிரம்பும் தரப்பாகவே இந்தப் பத்தியாளர் இன்னமும் கொள்கின்றார்.   

ஆனால், அக - புற மாற்றங்கள் மற்றும் சரியான தயார்படுத்தல்கள் இன்றி குறை நிரப்புத் தரப்பே, தவிர்க்க முடியாத தரப்பாக (இறுதித் தெரிவாக) நிலைபெறுவது என்பது உண்மையிலேயே ஏமாற்றமானது. அது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

கூட்டமைப்பினையும் அதன் தலைவர்களையும் நோக்கிய மக்களின் கோபத்தையும் விமர்சனத்தையும் ஆக்கபூர்வமான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பக்கத்துக்குத் திருப்ப முடியாமல் போனதன் விளைவு அது.  

கடந்த இரண்டு வாரங்களாக வெளியான அரசியல் பத்திகளும் ஊடகக் குறிப்புகளும் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களை மீண்டும் அடுக்கிச் செல்வதோடு முடிந்து போனது.  

இன்னொரு ஆக்கபூர்வமான தரப்பொன்றை அடையாளப்படுத்தி, அடுத்த கட்டத்தை வடிவமைப்பது தொடர்பில் எந்தக் கட்டமும் ஆற்றப்படவில்லை. அதற்குக் காரணம், யாரை மாற்று என்று ஆரம்பத்தில் அடையாளப்படுத்த முனைந்தார்களோ அந்தத் தரப்புகள் எல்லாமும் சிறிய அலைகளுக்குள்ளேயே கவிழ்ந்து போய்விட்டன. அல்லது அதற்கு ஒப்பான காட்சிகளை அரங்கேற்றியிருக்கின்றன.   

இன்றைக்கு எந்தவொரு அரசியல் ஆய்வாளரினாலும் மாற்றுத் தலைமை என்று எந்தவொரு தலைவரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. மாறாக, இவர் ஏன் மாற்றுத் தலைமைக்கான வாய்ப்பினைத் தொலைத்தார் என்று தங்களின் எரிச்சலைக் காட்டுவதற்காக மட்டும் பெயர் சுட்டப்படுகின்றார்கள்.   

அப்படிப் பயன்படும் பெயர்களில் விக்னேஸ்வரனின் பெயர் பிரதானமானது. மற்றப்படி, கடந்த காலத்தில் மாற்றுத் தலைமைகள் என்று உரையாடப்பட்ட பெயர்களில் ஒன்றுகூட இன்றைக்கு எந்த உரையாடலிலும் வருவதில்லை. அப்படியென்றால், உண்மையில் அவர்களின் நிலை எப்படியானது என்பது அனைவருக்கும் புரியும்; அதாவது, மக்களுக்கும் புரியும்.  

கூட்டமைப்பு மீதான மக்களின் கோபத்தில் நிறையவே நியாயமிருக்கின்றது. தங்களின் ஏமாற்றத்தின் அனைத்துக்குமான பொறுப்பை கூட்டமைப்பின் மீதே மக்கள் சுமத்துவார்கள்; அது, சரியானது.   

ஏனெனில், தேர்தல் காலமும் அது சார் வாக்குறுதிகளையும் மக்கள் மறந்துவிட வேண்டியதில்லை. ஆக, அதற்கான பொறுப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அத்தோடு, வேறு வழியில்லையே மீண்டும் மீண்டும் கூட்டமைப்பு மீதே சார்ந்திருக்கின்ற நிலை வந்திருக்கின்றது என்கிற விடயமும் மக்களின் கோபத்தின் அளவை அதிகரித்து விட்டிருக்கின்றது.   

உண்மையிலேயே அந்தக் கோபம் கூட்டமைப்புக்கானது அல்ல. அது, மாற்றுத் தலைமையையோ, சரியான அடிப்படைகளையோ கட்டமைக்கத் தவறிய தமிழ்த் தேசியத் தரப்புகள் மீதானது.   

ஏமாற்றத்தின் உச்சத்தில் மக்கள் இருக்கின்றார்கள் என்று சொல்ல முடிகின்றவர்களினால், இன்னொரு நம்பிக்கையான தரப்பைக் கட்டமைக்க முடியாமல் இருப்பது என்பதுதான் உண்மையான தோல்வி. ஆனால், அந்தத் தோல்வியை உணர்ந்து கொள்ளாமல் அல்லாடிக் கொண்டிருப்பதுதான் எரிச்சலின் உச்சம்.  

சம்பந்தனுக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் விளைவிக்கப்பட்ட குழப்பத்தை, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கில இணைய ஊடகமொன்று வெளியிட்டது. அதைப் பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.  

“...முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களின் உணர்ச்சிபூர்வமான களம். அங்கு கூட்டுணர்வு முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால், இந்தக் காணொளியைப் பார்க்கின்றபோது வேதனையாக இருக்கின்றது. எதை, எங்கு தொலைத்தோமோ அதை, அங்குதான் தேட வேண்டும். அல்லது, அதற்கு ஒப்பான ஒன்றை அங்கிருந்து கண்டுபிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலை தமிழ் மக்கள் அப்படித்தான் அணுக வேண்டும். மக்களின் உணர்ச்சிகளைச் சரியான திசையில் திருப்பிச் செல்ல வேண்டியது அரசியல் தலைவர்களினதும் செயற்பாட்டாளர்களினதும் ஊடகங்களினதும் பொறுப்பு. ஆனால், இந்தக் காணொளி அதில் ஒன்றைக்கூடப் பிரதிபலிக்கவில்லை. பாருங்கள், இந்தக் காணொளியைப் பகர்ந்திருப்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியான மனநிலையில் பகர்ந்திருக்கின்றார்கள் என்று? இங்கு நினைவேந்தல் முக்கியத்துவம் இழந்து, குழப்பம் முனைப்பு பெறுகின்றது. இது, அதீத உணர்ச்சிவசப்படுதலை அரசியலாகக் கொள்ள நினைப்பது. இது, பலன்களுக்குப் பதில் பாதகங்களையே அதிகம் தரும்...” என்றார்.  

தமிழ் மக்களைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியலில் முனைப்புப் பெற நினைப்போரும் அதுசார் செயற்பாட்டாளர்களும் அதீதமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். அத்துடன், அவர்களின் அந்த நிலையை எதிர்த்தரப்பு மிக இலகுவாகக் கையாண்டு வருகின்றது என்பதும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.   

இந்தக் குற்றச்சாட்டோடு இந்தப் பத்தியாளரும் நூறு வீதம் உடன்படுகின்றார். அத்தோடு, தன்முனைப்பு (ஈகோ) மனநிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

விடயங்களின் தன்மை, அதற்கான எதிர்கால வடிவம் பற்றிய எல்லா உரையாடல்களையும் உணர்ச்சிவசப்பட மற்றும் தன்முனைப்பு மனநிலை ஆட்கொள்கின்றபோது, அங்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையும் நிகழ்வதில்லை. மாறாக, ஆத்திரமும் அதுசார் அலைக்கழிவுமே மிஞ்சுகின்றன.  

இந்த நிலையை மிகவும் தெளிவாக உணர்ந்து வைத்துக் கொண்டு, தங்களுடைய திட்டங்களையும் செயற்பாடுகளையும் மிகவும் வெற்றிகரமாக நிகழ்த்துபவர்களில் சம்பந்தனும் சுமந்திரனும் முக்கியமானவர்கள்.   

அவர்கள் இருவரும், தமிழ்த் தேசியத் தரப்புக்குள் இருக்கின்ற மாற்றுத் தலைமைக்கான நம்பிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை பதற்றத்தோடே வைத்துக் கொள்ள நினைக்கின்றார்கள். அது, நிதானமான சிந்தனைகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்யும் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள். அதன்போக்கில், இந்தத் தரப்புகளை நோக்கிச் சரியான கால இடைவெளியில் உணர்ச்சிவசப்படக் கூடிய விடயங்கள் சிலவற்றை வைக்கின்றார்கள்.   

அதற்குள் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்க, தமது தளத்தை இன்னும் இன்னும் பலப்படுத்துவதில் சம்பந்தனும் சுமந்திரனும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அதில், முக்கியமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற நிலையிலிருந்து தமிழரசுக் கட்சி என்கிற ஏகநிலைக்கான பயணத்தில் பாரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றமை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் என்பது கூட்டுத் தலைமைகளுக்கிடையில் பகரப்பட வேண்டும் என்கிற குரல்கள் இன்றைக்கும் எழுப்பப்படுகின்றன. ஆனால், அந்தக் குரல்களின் தொனி, வெகு பலவீனமானது. மாறாக, சம்பந்தனும் சுமந்திரனும் அவர்கள் சார் தமிழரசுக் கட்சியுமே இறுதி முடிவுகளை எடுக்கும் என்கிற நிலை எல்லோர் மனதிலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.   

அதனை மக்கள் மாத்திரமல்ல, அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும்கூட நம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலைதான், இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலுக்குள், ஆரோக்கியமான உரையாடல் என்பதை, வெறுமனே கூட்டமைப்பு மீதான விமர்சனங்களோடு, முடிந்துபோக வைத்திருக்கின்றது.  

“...தமிழ்த் தேசிய அரசியலில், கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு என்று கொள்ள முடியும்) போட்டியாக யாரும் இல்லை. உண்மையில் இது சுவாரசியமற்ற நிலை; வருத்தமானது...” என்கிற தொனிபட தமிழரசுக் கட்சியின் ஆதரவு சட்டத்தரணியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.   

அவர் அந்தக் கூற்றை, தமது எதிர்த்தரப்பைக் கேலி செய்வதற்காகவே பயன்படுத்தினார். ஆனால், அந்தக் கூற்றுக்குள் இருக்கின்ற உண்மை என்பதுதான் நிகழ்கால அரசியலாகத் தமிழ்த் தேசியச் சூழலில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. மிகவும் வேதனையான கட்டம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .