2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

குழம்பிய குட்டைக்கு ‘வெளியே’ மீன் பிடித்தல்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குழம்பிய குட்டைக்கு ‘வெளியே’ மீன் பிடித்தல்


 

 

குறைந்து செல்லும் மீன்வளத்தை பகிர்தல் தொடர்பாக தமது சகோதர மீனவர்களுடன் பேச்சு முடிந்து இலங்கை மீனவர்களின் தூதுக்குழு நாடு திரும்பியுள்ளது. இலங்கை - இந்திய அரசாங்க அதிகாரிகளும் முதல் தடவையாக பங்குபற்றிய இந்த கலந்துரையாடல் சில ஆலோசனைகளை முன் வைத்துள்ளது. இந்த ஆலோசனைகளை செயற்படுத்துவதானால் அந்தந்த அரசாங்கங்களின் அனுமதி தேவைப்படும்.

அதே சமயம் புதுடில்லி சென்றிருந்த பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சர் பஸில் ராஜபக்ஷ புதுடில்லியில் முக்கியமான விடயமொன்றை முன்வைத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உட்பட இந்திய தலைவர்களுடன் பேசிய பின் அவர் “இரண்டு நாடுகளின் மீனவர்களும் பேசி, அந்த பேச்சின் அடிப்படையில் வரும் தீர்வையே இலங்கை அரசாங்கம் விரும்புகிறது’’ என்றார். மஹிந்த ராஜபக்ஷ முன்பு மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர். இதனால் இரு நாட்டு மீனவர்களினதும் பிரச்சினையை விளங்கியிருப்பதுடன் அவர்கள் துன்பத்தை தானும் உணர்கிறார். தான் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் “மூவர்” குழுவுக்கு தலைமை தாங்கி 2008இல் வந்தபோது தனது அரசாங்கம் எழுத்து மூலம் கொடுத்த உறுதி இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது என அவர் மேலும் கூறினார்.

மீனவர் சம்மேளனங்களாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் அனுசரணை செய்த அரச சாரா நிறுவனங்களாலும் விடுக்கப்பட்ட “சென்னை பிரகடனம்” குறிப்பிட்ட நல்ல விடயங்களை தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடலில் வருடத்தில் 70 நாட்கள் மீன்பிடிக்கலாம் என்பதுடன் ஒவ்வொரு மாதமும் மீன் பிடிக்கக்கூடிய திகதிகளையும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு மீன்பிடிப்பதை புதன்கிழமை, சனிக்கிழமை நாட்களில் மாலை 4 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிவரை என அவர்கள் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் பிரதேசங்களிலிருந்து சென்ற இலங்கை மீனவர்கள் இயந்திர படகுகள், ரோலர்களை பயன்படுத்த வேண்டாமென இந்திய மீனவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அவர்கள் நெருக்கமாக பின்னப்பட்ட இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை பயன்படுத்தலாகாது என்பதையும் எடுத்துரைத்தனர். மீன்முட்டைகளையும் மீன்குஞ்சுகளையும் கடலடியிலிருந்து அழித்து இயற்கையின் மீளுருவாக்கும் இனப்பெருக்கம் செய்யும் தொடர் செயலைக் கெடுப்பதாக இந்திய மீனவர்கள் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படாது போகுமாயின் எல்லோருக்குமே சில வருடங்களில் பிடிப்பதற்கோ அல்லது பிடிப்பதையிட்டு சண்டையிடவோ மீன் இல்லாது போய்விடும் எனவும் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை மீறிவந்தாலும் இலங்கை கடற்படை அவர்களை தாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அவர்களை கைதுசெய்து, உரிய சட்ட வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதுபோன்ற மீறல்களின்போது இலங்கை மீனவர்கள் உள்நாட்டு அதிகாரிகளினால் நடத்தப்படும் விதம்பற்றி இந்திய மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இணக்கப்பாடான ஏற்கக் கூடிய தீர்வுகளை சொல்வது சுலபம், செய்வதுதான் கஷ்டம். இலங்கை மீனவர்கள் முன்வைத்த மீன்பிடி வழிவகை, காலம் என்பவை தொடர்பான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பலர் இந்திய பக்கத்தில் இல்லாது போகலாம். இது இந்த பேச்சுவார்த்தையின் உற்சாகத்தை இல்லாது போகச் செய்யலாம். தெரிந்தோ தெரியாமலோ இலங்கையின் கடற்பரப்புக்குள் வரும் இந்திய மீனவர்களை துன்புறுத்தக் கூடாது என்ற அரசியல் அதிகாரங்களின் தீர்மானங்களுக்கு அமைய இலங்கை கடற்படை நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது.

பெருமளவு மீன்பிடிக்கலங்களுடன் கலந்திருந்து தம்மைக் குறிவைக்கும் கடற்புலிகள், கருங்கடல் புலிகளின் இருப்பினால் இலங்கை கடற்படையினால் சுதந்திரமாக இயங்க முடியாத காலம் ஒன்று இருந்தது. இரு நாடுகளுக்கும் பொதுவான கடற்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்தபோது இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பிலும் தனியாதிக்கம் காணப்பட்டது. அவர்களிடையே பதுங்கியிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ. இனரும் உளவுப் படகுகளும் அந்த நேரத்தில் இலங்கை கடற்படைக்கு பெரும் பிரச்சினையாக இருந்தன. சண்டை முடிந்த நிலையில் எல்.ரீ.ரீ.ஈ. யின் கடற்பிரிவு முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட நிலைமையில் இந்தியர்களின் எல்லை மீறல்களை இருபக்க சிவில் அதிகாரிகளினாலும் கையாளப்படவேண்டிய மீன்பிடிப் பிரச்சினையாக இலங்கை கடற்படை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இப்போது உள்ளது.

இனப்போர் முடிந்தப்பின் இப்போது இலங்கை மீனவர்கள் கடலுக்கு திரும்பியுள்ள நிலைமையில் இலங்கையின் கடற்பரப்பு அவர்களுக்கு உரித்தான மீன்வளம் என்பவற்றின் மீது தம்மால் முன்னர்போல் ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதை தமிழ்நாட்டு மீனவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு முந்திய காலத்தில் நடந்தது போன்று மீன்பிடி தொடர்பான தகராறுகள் இனிவரும் காலங்களில் இரண்டு நாட்டு மீனவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கமுடியும். கால கதியில் இப்படியான தகராறுகளை தணிப்பதற்கு இப்படியான கலந்துரையாடல்கள் உதவும்.

தமிழ்நாட்டில், அரசியலோடு தொடர்பில்லாத மீனவர் பிரச்சினையும் அரசியல் ஆக்கப்பட்டது. இப்போது கடற்புலிகள் இல்லாத சூழலில் இலங்கை கடற்படை முடியுமானபோது இதனை சாதாரண மக்கள் பிரச்சினையாகவும் அவசியமான போது பாதுகாப்புப் பிரச்சினையாகவும் கையாள ஊக்குவிக்கப்பட வேண்டும். கடற்புலி போன்று நாடுகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் குறிப்பான காரணங்கள் இருந்தாலன்றி தொழில் அல்லது வேறு காரணங்களால் நாட்டு எல்லைகள் மீறப்படும்போது, அந்த பிரச்சினைகள் மனிதாபிமான பிரச்சினையாகவே கையாளப்படுகின்றன.

இது அரசியல் பிரச்சினையாக எப்போதும் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், நடுத்தர கால, நீண்ட கால அடிப்படையில் தமது விடயங்கள் பிரச்சினையின்றி நடைபெறுவதற்கு, சண்டை முடிந்துவிட்டதை கருத்தில் கொண்டு தமது பங்கிற்கு மாறுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையுண்டு என இந்திய மீனவர்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது போன்று மீன்பிடி தீவிரமாக நடைபெறின் பொதுவான கடற்பரப்பில் காணப்படும் மீன்வளம் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்காது என்பதும் இப்போதும் உணரப்படுகிறது. கரைகளுக்கு அண்மையில் உள்ள பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்கு அப்பால் பொதுவான கடற்பரப்பில் புதிய மீன்பிடித் தளங்களை இனங்கண்டு இருபகுதியினரும் இணைந்து மீன்பிடித்தல் இதற்கான ஒரு தீர்வாக அமையும்.

எமது பகுதிகளில் இன்னும் பிரபலமாகாத “தாய்க்கப்பல்” என்ற எண்ணக்கருவை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பல சந்ததிகளாக கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய மீன்பிடி முறைகள், மனப்பாங்குகளிலிருந்து அதிகமானோரை பிரித்தெடுக்க முடியாது. இந்த கலந்துரையாடலில் பங்குப்பற்றிய ஒருவர் இவ்வாறு கூறினார். கட்டுமரத்திலிருந்து இயந்திரப்படகு, ரோலருக்கும் தூண்டில், சிறுவலையிலிருந்து இரண்டு அடுக்கு வலைக்கும் மாற முடிந்ததென்றால், எமது மீன் அறுவடையை அதிகரிப்பதற்காக வேறு முறைகளை பரிசோதித்துப் பார்க்க நாம் தவறக்கூடாது. 

-என்.சத்தியமூர்த்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .