Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டில், எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் அது வரை பிரதமராகவிருந்த டீ.எம். ஜயரத்னவை முன்னறிவித்தல் இல்லாமலே பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். அப்போது,
ஐ.தே.கவிடம் 54 எம்.பி ஆசனங்கள் மட்டுமே இருந்தன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றவுடன், அது வரை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, புதிய ஜனாதிபதி விரும்பிய ஒருவரைப் பிரதமராக நியமிக்க வசதி செய்துகொடுத்தார்.
அதன்படி, தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக, ஜனாதிபதி நியமித்தார். மஹிந்தவுக்கு, நாடாளுமன்றத்தில் சுமார் 105 எம்.பிக்களினது ஆதரவு மட்டுமே இருக்கிறது. நாடாளுமன்றத்தில், பெரும்பாலான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவரையே, பிரதமராக ஜனாதிபதி நியமிக்க வேண்டுமென்று, அரசமைப்பு கூறுகிறது. எனவே, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் அரசமைப்புக்கு முரணாகவே பிரதமர் நியமிக்கப்பட்டு, புதிய அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனினும், இது சட்டத்துக்கு முரணானதென்று எவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாலேயன்றி, பிரச்சினையாகப் போவதில்லை. 2015ஆம் ஆண்டில், 140க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தும், அவர்களது விருப்பத்துக்கு மாறாகப் பலாத்காரமாகவே, மைத்திரியும் ரணிலும் அரசாங்கத்தைப் பறித்துக்கொண்டனர். இருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரவில்லை.
இம்முறை, விரும்பியே பிரதமர் பதவியை ரணில் இராஜினாமாச் செய்து, மஹிந்தவுக்கு விட்டுக் கொடுத்தார். அதனால், ஐ.தே.கவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால், ஐ.தே.க அவ்வாறு அரசாங்கத்தை விட்டுக்கொடுக்க அவசியமும் இருக்கவில்லை.
தமக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்று அவர்கள் கூறியிருக்கலாம். ஐ.தே.க அவ்வாறு தாரைவார்த்த ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய அரசாங்கமும், இப்போது அந்த ஆட்சி அதிகாரங்களை, ஐ.தே.கவுக்கு எதிராகவே பாவித்து வருகின்றது.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவையும் ராஜித்த சேனாரத்னவையும் கைது செய்தமை, அதற்கு உதாரணமாகும். முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுப்படி, ஆள்கள் கடத்தப்பட்டு முதலைகளுக்கு போடப்பட்டதாகவும் தாமே அந்தக் கடத்தல் வாகனங்களை ஓட்டியதாகவும், கடந்த தேர்தல் காலத்தில், இரண்டு நபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காகவே, ராஜித கைது செய்யப்பட்டார்.
தாமே அவ்வாறு ஆள்களைக் கடத்தினோம் என்று கூறிய இருவரும், கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டனர். இப்போது, அந்தக் குற்றச்சாட்டுகள் திருத்தி அமைக்கப்படவிருக்கின்றன.
அவர்களுக்கு எதிரான முன்னைய குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ராஜிதவைக் கைதுசெய்யத் தேடப்பட்டார். அந்த இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியவை உண்மையெனப் பொலிஸார் நம்பியிருந்தால் மட்டுமே, அவர்களுக்கு எதிராக ஆட்கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியும். அவர்கள் கூறியது உண்மையாக இருந்தால், ராஜித அந்த உண்மையைக் கூற மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார். அவ்வளவு தான். ஆனால் இப்போது, குற்றச்சாட்டுகள் திருத்தப்படவிருக்கின்றன
மேற்படி இருவரும் கூறியது பொய்யென அறிந்திருந்தும், அவர்களுக்கு அதனைக் கூற ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே, ராஜிதவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு எதிராக அவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்வது, தேர்தல் சட்டப்படி பாரிய குற்றமாக அமையலாம்.
ஆனால், சம்பிக்கவின் கைது சற்று வித்தியாசமானதாகும். 2016ஆம் ஆண்டில், கொழும்பு இராஜகிரியவில் சம்பிக்க ஓட்டிச் சென்ற ஒரு வாகனத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்ததாகவும் ஆனால், காயமடைந்த இளைஞனை விட்டுவிட்டு, சம்பிக்க அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது ஏற்கெனவே நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்காகும். அந்த வழக்கின்படி, சம்பிக்கவின் சாரதியே அந்த வாகனத்தை ஓட்டியிருக்கிறார். எனினும், உண்மையிலேயே சம்பிக்கதான் அதனை ஓட்டினார் என்றும் விபத்து இடம்பெற்றதை அடுத்து, சம்பிக்க அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவரது சாரதி, தானே வாகனத்தை ஓட்டியதாக ஏற்றுக்கொண்டதாகவும், அக்காலத்திலும் கூறப்பட்டது. ஆயினும், வழக்கு விசாரணை வேறு விதமாக முடிவடைந்தது.
உண்மையிலேயே, சம்பிக்க தப்பிச்சென்று, பின்னர் விபத்துக்கான பொறுப்பை ஏற்குமாறு சாரதியை ஏவியிருக்கலாம். அவ்வாறாயின், அது பிழைதான். ஆனால், எவ்வித புதிய சாட்சியும் கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கொன்றை மீண்டும் விசாரிக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்தமை தொடர்பாகப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேபோன்றதோர் சம்பவம் தான், இரகசியப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராகவிருந்த ஷானி அபேசேகரவின் இடமாற்றமும். அவருக்கு எதிராகப் பொலிஸ் திணைக்களமோ தேசிய பொலிஸ் ஆணைக்குழுவோ எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தியிருக்காத நிலையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில், சாதாரண தொழில் ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எனவே, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை தொடர்பாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இவ்வாறு அதிகாரத்தை பறி கொடுத்தது மட்டுமல்லாது, ஐ.தே.க தலைவர்கள், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் தொடரந்தும் சண்டை பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். தாம் அமைப்புப் பணிகளை ஏற்றுக் கொண்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில், ஐ.தே.க வெற்றி பெற்றுள்ளது என, தேர்தல் முடிவடைந்தவுடன் ரணில் கூறினார். உண்மையிலேயே, வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், ரணிலின் பேச்சைக் கேட்டு சஜித்துக்கு வாக்களிக்கவில்லை என்பது சகலரும் அறிந்த விடயமாகும்.
அவ்வாறு ரணிலின் திறமையால் தான் ஐ.தே.க வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வெற்றிபெற்றதாக இருந்தால், கட்சித் தலைவர் என்ற வகையில் அவர் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் போலவே, ஏனைய பகுதிகளிலும் ஐ.தே.கவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் அல்லவா?
அதேவேளை, தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட நான்கு கருத்துக் கணிப்புகளில், ஐ.தே.க தோல்வியடைவதாகத் தெரிய வந்ததாகவும், தாம் வஜிர அபேவர்தனவுக்கு அதனைத் தெரிவித்ததாகவும் அதன்படி, காலியில் ஐ.தே.க வெற்றிபெறும் வகையில், வஜிரவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு கூட்டத்தில் ரணில் கூறியிருந்தார்.
கட்சித் தலைவராக இருந்தும், அவர் ஏன் வஜிரவிடம் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூற வேண்டும்? இது போன்ற சிறுபிள்ளைத் தனமான பேச்சுகளால் கட்சியைத் தட்டி எழுப்ப முடியாது. இப்போது, ஐ.தே.கவின் ஐக்கியம், அந்தக் கட்சிக்கு மிகவும் முக்கியமாகும்.
ஐ.தே.க சண்டை சிறுபான்மையினரையும் பாதிக்கும்
தேர்தலொன்றின் போது வேட்பாளர் தெரிவு தொடர்பாக, ஒரு கட்சியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றுவது சகஜம். ஆனால், வேட்பாளர் தெரிவு நடைபெற்ற பின்னர் அந்தக் கட்சி ஐக்கியப்படாவிட்டால், அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இது பொதுவானதாகும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடு தோன்றியது. இறுதியில், சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்த, கட்சி முடிவு செய்தது. ஆனால், தேர்தல் பிரசாரப் பணிகள் நடைபெறும் கால கட்டத்திலும், சஜித்தின் ஆதரவாளர்களுக்கும் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் வெளியே காணக்கூடியதாக இருந்தன.
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைய, இது தான் காரணமெனக் கூற முடியாது. ஆனால், இந்த முரண்பாடுகளும், சிறிதளவேனும் வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருப்பாரென, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொண்ட ஐ.தே.க செயற்குழுக் கூட்டத்தின் போது கூறப்பட்டது. அவ்வாறு இருந்தும், தேர்தல் பிரசாரத்தின் இடைநடுவில் தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், தமக்கு வேண்டிய ஒருவரையே பிரதமராக நியமிப்பதாக, சஜித் அறிவித்தார்.
அப்போது, தாமே தொடர்ந்தும் பிரதமராக இருக்கப் போவதாக, மற்றொரு மேடையில் ரணில் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள், கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாது என்று கூறமுடியாது.
தேர்தலுக்குப் பின்னர், யார் எதிர்க் கட்சித் தலைவர் என்ற சர்ச்சை ஐ.தே.கவுக்குள் உருவாகியது. ரணிலின் தலைமையை இப்போது ஐ.தே.கவில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. எனவே, தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் சண்டை பிடிப்பதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு இருக்க, எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் சஜித்தின் ஆதரவாளர்கள் போராடியே பெறவேண்டி ஏற்பட்டது.
அத்தோடு சண்டை ஓயவில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, யார் பிரதமர் வேட்பாளர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. சஜித்தின் ஆதரவாளர்கள், போராடி அதனையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில், கட்சித் தலைவர் யார் என்றதோர் சர்ச்சையும் தலைதூக்கியுள்ளது.
கட்சித் தலைமையைத் தம்மிடம் வழங்கினால் மட்டுமே, தாம் பொதுத் தேர்தல் களத்தில்
ஐ.தே.கவுக்குத் தலைமை தாங்க முடியுமென, சஜித் வாதிடுகிறார். அதேவேளை, தாம் தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்கப் போவதில்லை என்று கூறிக்கொண்டிருக்கும் ரணில், சஜித்திடம் கட்சித் தலைமையை வழங்கவும் மறுத்து வருகிறார்.
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகவும் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளத் தாம் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமை மாறாதிருக்கும் நிலையில், கட்சித் தலைமையைத் தொடர்ந்தும் தம்மால் வைத்திருக்க முடியாது என்பதும் ரணிலுக்குத் தெரியும். ஆனால், அவரும் அவரது ஆதரவாளர்களும், அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இது, சிலவேளை பொதுத் தேர்தலில் ஐ.தே.க மேலும் பின்னடையக் காரணமாகலாம்.
ரணிலை விட சஜித்தே கட்சித் தலைமைக்குச் சிறந்தவர் என்று கூறுவதற்கில்லை. சிலவேளை, சஜித்தைவிட ரணில் திறமையானவராக இருக்கலாம். ஆனால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இரண்டு பேருக்கும் இருக்கும் வரவேற்பைப் பார்த்தால், சஜித்தே முன்னணியில் இருக்கிறார். இந்த யதார்த்தத்தை, ரணிலின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளாமையே தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குப் பிரதான காரணமாக உள்ளது.
இந்த நிலைமை, சிறுபான்மைக் கட்சிகளையும் பாதிக்கும். சிறுபான்மைக் கட்சிகள், இரு பிரதான கட்சிகளில் ஐ.தே.கவையே தமது நேச சக்தியாகக் கருதுகின்றன. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற சில கட்சிகள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினக் கட்சிகள், ஐ.தே.கவுடன் இணைந்தே கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டன. தலைமைத்துவச் சண்டையில் ஈடுபட்டுள்ள தற்போதைய நிலையில், ஐ.தே.கவுடன் இம்முறையும் இணைந்துப் போட்டியிடுவதால், அந்தச் சண்டையின் தாக்கம், சிறுபான்மையினக் கட்சிகள் மீதும் ஏற்படலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago