Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சின் மரணச்சடங்கு சனிக்கிழமை (26) அன்று நடைபெற்றது. இந்தியாவின் காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. காசாவில் யுத்தம் ஓயவில்லை. ரஷ்ய- உக்ரைன் மோதல் தொடர்கிறது. இவ்வாறான நிலையில், இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
தேர்தல் என்பது கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசும் ஒரு இடமாகவே இருக்கின்றது. ஆனால், மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றனவா என்றால், அது முழுமையாக இல்லை. உலகின் பல நாடுகளில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவையே நிறைவேற்றப்படும். அவ்வாறு இல்லையானால், அரசாங்கமே பதவி விலகுவதும், ஜனாதிபதிகள், அமைச்சர்கள் விலகுவதும், நடைபெறுகின்றன.
ஆனால், இலங்கையில் அவ்வாறு நடைபெறுவதில்லை.
வாக்குறுதிகள் வீசப்படுவதும் பின்னர், அதற்கு வேறு ஒரு காரணம் சொல்லி இழுத்தடிக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. அரசியல் என்று கூறி விட்டுக் கடந்து போகின்ற போக்கு ஆரோக்கியமானதல்ல.
அரசியலில் மாத்திரமல்ல, சாதாரண நடவடிக்கைகளிலும் சில வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றினை நிறைவேற்றமுடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்பட்டாலும், இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலால் அரசியல் குழப்பம் உருவாகி, மாற்றம் ஏற்பட்டு பதவிக்கு வந்த அரசாங்கம் அதற்கான காரணத்தினை இவ்வருடத்தின் நினைவு தினத்துக்கு முன்னர் வெளிப்படுத்துவதாக அறிவித்திருந்த போதும் நடைபெறவில்லை.
இதனை எமது நாட்டு அரசாங்கத்தின் இயலாமையாகவே கொள்ள வேண்டும்.
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா, ஏனைய அமைச்சர்கள், என அரசின் அனைத்து மட்டங்களும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அதே போன்றே ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களுக்கான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் வெளிப்படுத்தப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமா என்பது சந்தேகமானதுதான். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியைத் ( ஜே.வி.பி.) தலைமையாகக் கொண்டு, நாட்டின் ஆட்சியைப் பிடித்துக் கொண்ட தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா என்று சந்தேகங்கள் உருவாகிவருன்றன.
அரசியலில் சாணக்கியத் தனமாக இருப்பதாகக் கூறிக்கொண்டு கடந்த அரசாங்கங்கள் அனைத்துமே, முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருமே, அமைச்சர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்ற தோரணையில் முன்னெடுக்கப்படும் வேலைப்பாடுகள், ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற விசாரணைகள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தேர்தல் பிரசாரங்களில் வெளிவரும் கருத்துக்கள் என நீண்டு கொண்டே செல்கிறது.
காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவுக்கு சாதாரணமானவை அல்ல. இருந்தாலும் அவற்றை செய்துவிடுவோம், செய்கிறோம் என்ற தோரணையில் நடைபெறும் சில விடயங்களாக இவற்றினைப் பார்க்கலாம்.
உள்ளூராட்சித் தேர்தல் என்பது தேசிய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்த தேர்தல்களுக்கான நாடிபிடிப்புகளாக இருப்பது வழக்கம். 2023ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்தத் தேர்தலை அறிவித்து விட்டு அதனை பொருளாதாரக் காரணங்களைக் கூறி கைவிட்டிருந்தார். பின்னர் அந்த வேட்பு மனுக்கள் கைவிடப்பட்டு மீண்டும் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை அவர் நடத்தியிருந்தால் சிலவேளைகளில் தேசிய அரசியல் வேறு விதமாக இருந்திருக்கலாம்.
இப்போது, ஜனாதிபதியாக ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார இருக்கிறார். அரசாங்கத்தினை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வைத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை யார் கைப்பற்றுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகவும் இருக்கிறது. தமிழர் பகுதி வேறு விதமாகவும் தெற்கு, மலையகம் வேறு விதமாகவும் இருக்குமா என்பது சற்று உறுதியற்றே இருக்கிறது. ஆனாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வீழ்ச்சியை சந்திக்கும் என்று ஆரூடம் கூறி வருகின்றனர். வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதும், பின்னர் தங்கள் தவறுகளைப் பற்றிச் சிந்திக்காதவர்களாகவும் இருக்கின்ற இலங்கை மக்களிடம் இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது வேறுகதை.
மாகாண சபைத் தேர்தல் இதுவரை ஏன் நடத்தப்படவில்லை. அதற்கான காரணம் என்ன? ஆளும் கட்சியின் தேர்தல் தோல்வியில் பயமா? இல்லை அதற்கிடையில் ஏற்பட்ட சட்டச் சிக்கலா? அப்படியாயின், அச் சட்டச்சிக்கல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? அதற்கு யார் காரணம்? ஏன்பது பற்றியெல்லாம் பல கேள்விகள் கடந்த காலங்களில் கேட்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவற்றுக்கு அப்போதைய அரசாங்கங்கள் பதில் வழங்கவில்லை. இருந்தாலும், 2024 ஒக்ரோபரில் புதிய ஜனாதிபதி தெரிவானதுமுதல் நடைபெறத் தொடங்கிய மாற்றம் அத் தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்தும் என்று நம்பலாம். கடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பாக நாட்டின் எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வெகுசன ஊடகங்களும் காட்டிய அக்கறையில் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஒரு துளியேனும் காட்டவில்லை என்பது இப்போதும் ஒரு குற்றச்சாட்டாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான், இந்த உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இருந்தாலும், இப்போது அவசர அவசரமாக உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் அடுத்த மாகாண சபைக் கனவும் காரணமே.
உள்ளூராட்சித் சபைகள் தங்களது பிரதேசத்திற்குள்ளே இருப்பவர்களைக் கொண்டு பிரதேசக் கிராமங்களின் வீதி அபிவிருத்தி, நலமேம்பாடு, வீதி அபிவிருத்தி என நகர்வதாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் வேறு வேறு இலக்குகளுடன் நகர்வது தான் வழமையாகும். தற்போதைய அரசியல் களத்தில் இரண்டு விடயங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்று, வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழர்களின் அரசியலில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நடந்த தேசிய கட்சியொன்றுக்குப் பெரும்பான்மை வழங்கிய நிலையை மாற்றியமைத்தல், தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காகத் தீர்வுகளைக் கண்டடைவதற்கான வழியைத் தேடுதல் போன்றவையாகும். தேசிய அளவில் இதற்கு மாற்றான விடயங்களே காணப்படுகின்றன.
நடைபெறுகின்ற உள்ளூராட்சித் தேர்தல்களுக்கும் இனப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும்
தேசியக் கட்சிகளை விமர்சிப்பதும் அக் கட்சிகளின் தமிழ் மக்கள் விவகாரம் குறித்திருக்கின்ற கொள்கைகளை ஆராய்வதும் நடைபெறுகின்றன.
அதே நேரத்தில் தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி போன்ற கட்சிகள் தமக்குள் அரசியல் போட்டியுடனேயே நகர்கின்றன.
இருந்தாலும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் காலச்சூழலுக்கும் இப்போது நடைபெறுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் களக் காலச்சூழலுக்கும் பெரியளவான வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பகாலம் மிகவும் வெளிப்படையான, பரஸ்பர ஒற்றுமையான மக்கள் சமூகங்கள் இருந்தன. அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக உருவான அரசியல் குழப்பங்கள் மக்களின் மனோநிலைகளில் மாறுபாடுகள் ஏற்பட்டன.
போராட்டங்கள் வெடித்தன. வடக்கு கிழக்கில் யுத்தம் நடைபெற்றிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பின்னர், ஊழல் தலைதூக்கியது. பொருளாதாரச் சிக்கல் வந்து சேர்ந்தது. பின்னர் ஆட்சி அதிகார மாற்றங்கள் ஏற்பட்டு இப்போது நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் ஒரு தேசிய அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கிறது.
இவ்வாறான நிலையில், 1948 சுதந்திரத்திற்குப் பின்னரான எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் நோக்கக்கூடிய விசேட அம்சமாக நடைபெறுகின்ற இந்த உள்ளூராட்சித் தேர்தல் ஆளும் கட்சி எத்தகைய திட்டங்களை, அது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களாக இருக்கிறதா, ஏனைய கட்சிகள் எவ்வாறான திட்டங்களை முன்வைக்கின்றன.
அது பயன்பாடானதா? என்ற கேள்விகளுக்கிடையில் மக்கள் தங்களுக்கான வியாக்கியானங்கள் குறித்துச் சிந்திப்பார்களா என்பது தேர்தல் முடிவுவரைக்குமானதாகத்தான் தெரிகிறது.
எவ்வாறானாலும், அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் மக்களின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதாக இருக்கின்ற போதுதான் தேர்தல் வாக்குறுதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். காலங்காலமாக ஏமாற்றும் நகர்வுகளுடனேயே நகரும் கட்சிகள் அது பற்றிச் சிந்திப்பதற்கான சூழல் இந்த உள்ளூராட்சித் தேர்தலிலேனும் நடைபெற வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
29 minute ago
2 hours ago