2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆட்சியை கவிழ்க்குமா ஆர்.கே.நகர் 2,000 ரூபாய் பட்டியல்?

Administrator   / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இரத்து; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; அ.தி.மு.க  அம்மா அணிக்குத் திடீரென்று ஆதரவு தெரிவித்த நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா வீடு, அலுவலகங்களில் சோதனை, இவ்வாறு  தமிழகம் மீண்டுமொரு ‘சோதனைக் களமாக’ மாற்றப்பட்டுள்ளது.   

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான பட்டியல் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை சில ஆவணங்களை கசியச் செய்தது.   

அவற்றுள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சரவையில் உள்ள அரை டசின் அமைச்சர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விவரங்கள் அடங்கிய பட்டியல் சிக்கியது. அ.தி.மு.க அம்மா அணியின் தலை விதியை நிர்ணயிக்கும் விதமாக இச்சம்பவம் அமைந்து விட்டது.  

சசிகலாவின் அ.தி.மு.க அம்மா அணிக்கும், ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணிக்கும் இடையிலான இடைத்தேர்தல் யுத்தம், ஓ. பன்னீர் செல்வத்துக்குச் சாதகமாகவே இருந்தது.   

களத்தில் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் ஏன் பொதுமக்களில் குறிப்பிட்ட பகுதியினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஆதரவு தெரிவித்தார்கள்.   

ஆகவே, இடைத் தேர்தல் என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குமான போட்டியாக மாறியது. இந்தத் தருணத்தில்தான் 89 கோடி ரூபாய் விநியோகம் வாக்காளர்களை நிலைகுலைய வைத்தது.   

ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்தவர்கள் மெதுவாக அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நகர ஆரம்பித்தார்கள். இதனால் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குப் பிறகு, போட்டி தி.மு.கவுக்கும் தினகரனுக்கும் என்று மாறியது. இந்த மாற்றத்தின் பின்னனியில் நடைபெற்ற வருமான வரித்துறைச் சோதனையில் ஆர்.கே. நகர்  இடைத் தேர்தலையே இரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது.  

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள் எதுவும் இரத்து செய்யப்பட்டதில்லை. தி.மு.க ஆட்சி காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களும் இரத்து செய்யப்பட்டதில்லை.  

ஆனால், இப்போது தினகரன், சசிகலா வழிகாட்டும் அ.தி.மு.க அம்மா அணியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில், இடைத் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனைதான் இந்த இடைத்தேர்தல் இரத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது என்றாலும், இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வாக்காளர் பண விநியோகம் ஆர்.கே நகரில் நடைபெற்றது.   

அ.தி.மு.க ஆட்சியில், ‘காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி போர்முலா’ என்று பணம் கொடுத்ததற்குரிய இடைத்தேர்தலைச் சொல்வார்கள். தி.மு.க ஆட்சியில் ‘திருமங்கலம் போர்முலா’ என்று கூறுவார்கள்.   

ஆனால், இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ‘ஆர்.கே. நகர் போர்முலா’. இந்திய தேர்தல் வரலாற்றில் இப்படியொரு பண விநியோகத் தேர்தலை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் ஆர். கே. நகர் தொகுதியில் தாராளமாக விநியோகிக்கப்பட்டன.   

இடைத் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தத் தேர்தல் ஆணையம் எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காரியத்தைச் செய்து முடித்தன. 

அதிலும் குறிப்பாகத் தேர்தலை இரத்துச் செய்து வெளியிட்ட இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவில், “அ.தி.மு.க அம்மா அணி, அ.தி.மு.க புரட்சி தலைவி அணி ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் பண விநியோகம், பரிசு பொருட்கள் விநியோகம்” பற்றிச் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இடைத் தேர்தல் இரத்து செய்யப்பட்ட பிறகு, வருமான வரித்துறை சோதனை, இப்போது 
அ.தி.மு.கவில் உள்ள அம்மா அணியை திணறடித்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து விட்டது.   

அமைச்சர்களில் பலர், “அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். முதல் முறையாக தினகரன் அணிக்குள் உள்ள அமைச்சர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு உருவாகியிருக்கிறது.   

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவோம் என்று இரு அணியிலுமே உள்ள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்திட்டம் இறுதி வடிவம் பெற்றால், தினகரன் அ.தி.மு.க அரசியலில் இருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் அடிபடத் தொடங்கி விட்டன.   

வருமான வரித்துறைச் சோதனையால் அ.தி.மு.க சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது புதிதல்ல. முன்பு 1996 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த நரசிம்மராவ், அ.தி.மு.க ஆட்சியிலிருக்கும் போதே சோதனை செய்தார்.   

அப்போது ஜெயலலிதா முதலமைச்சர்; அவர் கண் முன்பே சசிகலா, டிடிவி தினகரன், சசிகலா நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் பலரையும் கைது செய்தார். தினகரன் உள்ளிட்ட பலர் மீது ‘காபிபோசா’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அடைத்தார். ஆனால், அன்றைக்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததால், ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் அ.தி.மு.கவின் பக்கம் நின்றார்கள்.  

அது போன்றதொரு அனலை இப்போது 2017 இல் அ.தி.மு.க அம்மா அணி சந்திக்கிறது. ஒரு புறம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைத் தண்டனை பெற்று, சசிகலா பெங்களூர் சிறையில் இருக்கிறார். இன்னொரு பக்கம் பெரா வழக்கில் தினந்தோறும் விசாரணை என்று தினகரன் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எம். நடராஜனுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு, டிடிவி மகாதேவனின் திடீர் மறைவு எல்லாம் அ.தி.மு.க அம்மா அணியை திக்குமுக்காட வைத்துள்ளது.   

ஆனால், இந்த நேரத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் அ.தி.மு.க அம்மா அணி பின்னால் இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே தினகரன் அணி பக்கம் நிற்கிறார்கள். அதனால்தான் இப்போது ஒட்டுமொத்த அ.தி.மு.கவை காப்பாற்ற வேண்டும் என்ற புதிய முயற்சியில் ஒரு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.  

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் கொடி முடக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க இரு பிரிவுகளாக பிளவு பட்டு நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டால், மத்திய அரசின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பது அமைச்சர்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது.   

அதற்காக இப்போதைக்கு இரண்டு வழிமுறைகள் பற்றிப் பேசப்படுகின்றன. முதல் வழிமுறை என்பது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகத் தொடருவது என்றும் பொதுச் செயலாளராக ஓ. பன்னீர்செல்வம் இருப்பார் என்றும் ஒரு வழிமுறை பேசப்படுகிறது.   

இன்னொரு வழிமுறையின்படி, எடப்பாடி பழனிச்சாமி அப்படியே முதலமைச்சராக தொடருவது என்றும் அந்த அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பு ஏற்பது என்றும் பேசப்படுகிறது.   
இதில் எடப்பாடி தரப்புக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் ‘மீண்டும் ஒரு அதிரடிச்சோதனையில் சிக்கினால் முதலமைச்சராக தொடர முடியுமா’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததுதான்.   

ஏனென்றால், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பட்டியலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம். அந்த பட்டியலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் சோதனை நடக்காது என்பதற்கு ஏதும் உத்தரவாதம் இல்லை என்று அ.தி.மு.க அம்மா அணி கருதுவதாக தெரிகிறது.   

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி உறவினருக்கு வேண்டிய நபர்கள் கர்நாடக மாநிலத்தில் சோதனைக்குள்ளாகி இருப்பது வேறு புதிய சர்ச்சையை தமிழகத்தில் கிளப்பியிருக்கிறது.  

ஆனால், இரு நடவடிக்கைகளிலும் “ஓ.பன்னீர்செல்வத்தை” முன்னிறுத்தும் நடவடிக்கையை மட்டுமே மத்தியில் ஆட்சி செய்யும்; பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பது அ.தி.மு.கவினருக்கும் தெரிகிறது.   

அந்த ஆதரவு கிடைத்தால்தான் மாநிலத்தில் சுதந்திரமாக ஆட்சி செய்ய முடியும் என்பது மாநில அமைச்சர்களுக்கும் புரிகிறது. ஆகவே, முதலமைச்சராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் என்ற போர்முலாவை மட்டுமே பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும் என்ற சிந்தனை அ.தி.மு.க அம்மா அணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் (டி.டி.வி. தினகரன் தவிர) இருக்கிறது.   

பா.ஜ.கவோ இப்போதைக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும் தி.மு.க ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்றும், பா,ஜ.கவுக்கு சாதகமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 
அ.தி.மு.க திரும்பவும் வலுப்பெறுவது தமிழகத்தில் காலூன்ற உதவும் என்றும் கணக்குப் போடுகிறது. ஆகவே, ஆர்.கே.நகர் 2,000 ரூபாய் வாக்காளர் பட்டியல் மீண்டும் பரபரப்பான திசையில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.   
இதனால் வரும் வாரங்களில் புதிய முதலமைச்சர் வருவாரா? இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுமா? இந்தக் கேள்வி தமிழகத்தில் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X