2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இணக்க வழியா, தனி வழியா?

Administrator   / 2017 ஜனவரி 30 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 77)

ஜே.ஆர் எனும் மாக்கியாவலியின் ‘இளவரசன்’  

ஜே.ஆரின் தந்திரோபாயங்களும் இராஜதந்திரங்களும் அவரது அரசியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் சிக்கலைத் தரக்கூடியதாக இருந்தது. 

ஒரு விடயம் தொடர்பில் அவரது உண்மையான நிலைப்பாடு எது என்பதைத் தெரிந்துகொள்வது மிகக் கடினமானதொன்றாகவே இருக்கிறது. 

1981ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்காது, இனவெறியைக் கக்கிக்கொண்டிருந்த அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது, அவர்களைத் தொடர்ந்து அந்த இனவாதக் கைங்கரியத்தைச் செய்ய அனுமதித்துக்கொண்டு, அதேவேளை வன்முறையில் ஈடுபட்டவர்களை “இவர்கள் என்ன வகையான மிருகங்கள்?” எனப் பகிரங்கமாக ஒரு மேடையில் பேசக் கூடிய ஒன்றுக்கொன்று முரணான நடவடிக்கைகளைச் செய்தவர் ஜே.ஆர்.   

1981 செப்டெம்பர் நான்காம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜே.ஆர், “நான் கோபத்தைவிட, கவலையில் பேசுகிறேன். அண்மையில் வடக்கு, மத்தி, தெற்கு என நாடெங்கிலும் நடைபெற்ற சம்பவங்களானவை நாம் பின்பற்றும் போதிக்கும் மதமானது, அநேக மக்களிடையே செல்வாக்குச் செலுத்தவில்லை போலவே தெரிகிறது.எனது கட்சியினர் சிலரே, நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும், இடம்பெற்ற வன்முறையையும் கொலைகளையும் வன்புணர்வுகளையும், எரியூட்டுதல்களையும் ஊக்குவிக்கும் வகையில் பேசியமை கவலைதருகிறது. நான், தலைமையேற்றுள்ள கட்சி பற்றி நான் பெருமை கொள்ளத் தக்கதாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நான் தலைமைப்பதவியிலிருந்து ஒதுங்கிவிடுவதுதான் சிறந்தது. அதன் பின்னர், பல இனங்கள், பல மதங்கள், பல சாதிகள் கொண்ட இந்த நாட்டின் பிரச்சினைகளை, அப்பாவி மக்கள் மீது வன்முறைகொண்டுதான் தீர்க்க முடியும் என்று நினைப்பவர்கள் தலைமைப்பதவியை ஏற்றுக்கொள்ளலாம்” என்று பேசினார். 

இந்தக் கோபமும் கவலையும் உண்மையாக இருந்திருக்குமானால், ஜே.ஆர் குறிப்பிட்ட அதே அப்பாவி மக்களுக்கெதிராக வன்முறையைப் பயன்படுத்தியவர்கள், அதைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அது நடக்காது போனதுதான், ஜே. ஆர் ஒரு வேஷதாரி என்பதை நிரூபிக்கிறது.

 குறைந்தபட்சம் வன்முறை வெறியையும் இனவாதத்தையும் தூண்டிக்கொண்டிருக்கும் சிறில் மத்யூ போன்ற அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்தாவது நீக்கியிருக்கலாம் அல்லவா.   

அடுத்து வரவிருந்த தேர்தல்களும் பேரினவாத வாக்குவங்கியும் அதனைச் செய்வதிலிருந்து ஜே.ஆரைத் தடுத்திருக்கும். ஜே.ஆரின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் முரணானவை மட்டுமல்ல, குழப்பகரமானவையும் கூட. 

ஆனால், அவற்றுக்கிடையில் ஒரு தங்க நூலிழைத் தொடர்பு இருக்கிறது. அதுதான் அதிகாரத்தைத் தக்கவைத்தல். தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக எதனையும் செய்யத் தக்க சூத்திரதாரியாக ஜே.ஆர் இருந்தார். 

சுருங்கக்கூறின் நிக்கொலோ மாக்கியாவலியின் இளவரசனைப் போலவே அவர் நடந்து கொண்டார்.   

சுதந்திரக் கட்சியின் யாழ். விஜயம்  

1981 யாழ். வன்முறைகள், கலவரங்களைத் தொடர்ந்து பலதரப்பினரும் களநிலைவரத்தைக் காண, யாழ். ஏகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.ஆர் அரசாங்கத்துக்கு எதிரான இந்த வாய்ப்பைத் தமக்குச் சாதகமாகத் திருப்ப 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தவறவில்லை. 

1977 பொதுத்தேர்தல் படுதோல்வியினால் துவண்டு போயிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எவ்வாறேனும் அத்தோல்வியிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைத் தேடிக்கொண்டிருந்தது.  

1981 நவம்பரில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.டீ. பண்டாரநாயக்கவும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மருமகனும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் கணவருமான இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். 

அவர்கள் யாழில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தினர். உண்மையில் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்குச் சற்றே ஆரவாரமான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பொங்கலும் தனித் தமிழீழப் பிரகடனமும்  

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. பேச்சளவில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைகளுக்கு ஜே.ஆர் அரசாங்கம் இணங்கும் சமிக்ஞைகளை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் பெரும் முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை. 

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதான விசனம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. 

இந்த நிலையில் கிருஷ்ணா வைகுந்தவாசன் என்ற தமிழர் விடுதலைச் செயற்பாட்டாளரின் தலைமையில், லண்டனில் இயங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று 1982 ஜனவரி 14ஆம் திகதி பொங்கலன்று, தமிழீழ தனிநாட்டுப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற பகிரங்க அழைப்பொன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   

ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் தனிநாட்டுப் பிரகடனத்துக்கான இந்த அழைப்பு பெரும் சங்கடத்தை உருவாக்கியது. 

அப்படியொரு காரியத்தைச் செய்வதற்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எந்த நிலையிலும் தயாராக இருக்கவில்லை.   

இந்நிலையில் குறித்த புலம்பெயர் அமைப்பின் அறிக்கையோடு தமக்கெந்தத் தொடர்புமில்லை என்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தெரிவித்தது. 

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் எம்.சிவசிதம்பரம் ஆகியோர் இணைந்து விடுத்த அறிக்கையில், “இலங்கை வாழ் தமிழர்களின் தலைவிதியை இலங்கை வாழ் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் சார்பாக முன்னெடுக்கும் அதிகாரம் எந்நபருக்கும் இல்லை” என்று குறிப்பிட்டதுடன், “இந்த, சிந்திக்காது எடுத்த முடிவானது, தமிழரின் பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் முன்னேற்றமானதொரு தீர்வைத் தரப்போவதில்லை” என்றும் கூறினார்கள்.   

மேலும், அந்த அறிக்கையில் இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், இதுபோன்ற அவசரகதியிலான தனிநாட்டுப் பிரகடனம் என்பது, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை பயக்கத்தக்க தீர்வல்ல என்பதை, தாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 பரபரப்பான நடவடிக்கைக்கு கிருஷ்ணா வைகுந்தவாசன் பெயர்போனவர். உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவமொன்றை, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க தன்னுடைய ‘போரும் அமைதியும்’ (ஆங்கிலம்)என்ற நூலில் குறிப்பிடுகிறார். 
1978 இல் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமொன்றில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீடாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றத் தொடங்கினார்.  

அவர், சில வரிகள் பேசிக்கொண்டிருந்த போதுதான், ஐ.நா காவலர்கள் நடைபெற்ற குழறுபடியை உணர்ந்துகொண்டு, அவரை உடனடியாக வெளியேற்றினார்கள்.

ஆகவே, இதுபோன்ற பரப்பான நடவடிக்கையைச் செய்தவர், தமிழீழ தனியரசுப் பிரகடனம் செய்ய விளைந்தமை பற்றி ஆச்சரியம் கொள்ள முடியாது. 

ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மற்றும் அதனது நேச சக்திகளின் அழுத்தம் காரணமாக, ஜனவரி 14 ஆம் திகதி பொங்கலன்று, அதனைச் செய்வதைத் தவிர்க்க தமது அமைப்பு முடிவெடுத்துள்ளதாக கிருஷ்ணா வைகுந்தவாசன், ஜனவரி 10 ஆம் திகதி அளவில் அறிவித்தார். 

எது எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்த சில தமிழ் செயற்பாட்டாளர்கள், 1982 ஜனவரி 14 ஆம் திகதி ‘சுதந்திர தமிழீழம் - 1982’ என்பதன் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழீழ தனியரசுப் பிரகடனமொன்றை ஐக்கிய நாடுகள் சபையில் கையளித்திருந்தனர். 

தமிழீழப் பிரகடனத்தை ஜனவரி 14 ஆம் திகதி செய்வதை கிருஷ்ணா வைகுந்தவாசன் கைவிட்டிருப்பினும், அதனைச் செய்வதிலும் இடைக்கால தமிழீழ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதிலும் முனைப்போடு செயற்பட்டார்.   

புலம்பெயர் குழுக்கள் சிலவும் இந்த வகையில் அக்கறையோடு செயற்பட்டன. ஆனால், இந்த விடயத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்த இளையோர் தரப்பொன்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகள் மீது கடும் விசனம்கொண்டு தனிவழி செல்லத் தீர்மானித்தது.   

1982 மே மாதம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் அவர்களது பத்திரிகையான சுதந்திரனில் இருந்து நீக்கப்பட்ட, அதனது ஆசிரியராக இருந்த கோவை மகேசன், அவரோடு எம்.கே.ஈழவேந்தன் உள்ளிட்ட சிலரும் சா.ஜே.வே.செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனின் தலைமையில் தமிழீழ விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றனர். 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவினைத் தராத நிலையில், தமிழீழ விடுதலை முன்னணியானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மீது கரிசனை கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்தது.   

பிரபாகரன் - உமாமகேஸ்வரன் நாடுகடத்தல் விவகாரம்  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலையைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிளவுபட்ட காலப்பகுதி இது. 

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்குமிடையேயான பிரிவின் காரணமாக உமா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) உருவாக்கியிருந்தார். 

இந்த இரு அமைப்பினரிடையேயும் வன்முறைத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து வந்தன. மே 19 ஆம் திகதி, தமிழ் நாட்டில் சென்னை, பாண்டி பஸாரில் உமா மகேஸ்வரன் மற்றும் பிரபாகரனிடையே துப்பாகிச் சூட்டுச் சமரொன்று நடந்தது.

 இதில் இருவரும் காயப்படவில்லையெனினும், இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே பிரபாகரன், தமிழகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட, அங்கிருந்து தப்பிய உமா மகேஸ்வரன், சில தினங்களின் பின்பு தமிழகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். 

இலங்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களாகக் கருதப்படும் பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் என ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தது.   

இந்தச் சூழ்நிலையில் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நாடு கடத்தப்பட்டு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்ற குரல் தமிழ்நாட்டில் வலுக்கத் தொடங்கியது. 

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான நெடுமாறன் உள்ளிட்டோர் இதற்காகக் கடுமையாகக் களத்திலிறங்கிப் போராடினார்கள். அன்று தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 

எம்.ஜி.ஆருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதும் போராளிகள் மீதும் பெரும் அனுதாபமும் அக்கறையும் இருந்ததாக 
எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி எழுதிய பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதேவேளை எம்.ஜி.ஆர் ஒரு வலிமையான தலைவரும் கூட. தான் நினைத்ததை யார் தடுத்தாலும், தயங்காது செய்யக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. 

இதேவேளை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதான அக்கறையாளராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். 

ஆகவே தமிழ்நாட்டு அரசியலின் இருபெரும் கட்சிகளும் குறித்த போராளிகள் இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் ஆணித்தரமாக எடுத்துரைத்திருந்தனர். 

இந்த அழுத்தங்களின் விளைவாக, இலங்கை அரசாங்கத்தின் நாடுகடத்தல் கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. தமிழகத் தலைமைகள் வலிமையாகவும் உறுதியாகவும் நடந்துகொண்டால் இந்திய மத்திய அரசாங்கத்தை இலங்கை விவகாரத்திலும் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. 

ஆனால், இந்த நிலையை நாம் இன்றைய காலத்திலிருந்து நோக்கும் போது, ‘ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன் - ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்” என்ற இரு வேறு களநிலைகளில் நோக்குதலும் அவசியமாகிறது.   

பிரபாகரன் - உமா மகேஸ்வரன் நாடு கடத்தல் விடயம் தொடர்பில், சந்திரஹாசன் தலைமையிலான தமிழீழ விடுதலை முன்னணியானது, அவர்கள் நாடுகடத்தப்படக் கூடாது என்று ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்தது. மறுபுறத்தில், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த விடயம் தொடர்பில் மௌனம் சாதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகிறது.  

(அடுத்த வாரம் தொடரும்)    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .