Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எம். காசிநாதன் / 2018 ஜனவரி 15 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உச்சநீதிமன்றத்தின் 67 வருட வரலாற்றில், இதற்கு முன் சந்திக்காத ஒரு நெருக்கடியை இந்திய உச்சநீதிமன்றம் சந்தித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ‘கொலோஜியம்’ என்று சொல்லப்படுகின்ற ஐந்து நீதியரசர்களில் தலைமை நீதியரசர் தவிர, மற்றைய நான்கு நீதியரசர்கள், “உச்சநீதிமன்றத்தில் நடப்பது முறையாக இல்லை. தலைமை நீதியரசரிடம் எடுத்துக் கூறி, தீர்வு காண முயன்று தோற்று விட்டோம். ஆகவே, மக்களுக்குத் தெரிவிக்கவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகிறோம். எங்கள் கடமையை நாட்டுக்கு செய்து விட்டோம்” என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களான செல்லமேஸ்வர், மதன் லோகூர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் ஆகிய நான்கு பேரும் இணைந்து, உச்சநீதிமன்றத்தின் வளாகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, இந்திய அரசியலை உலுக்கியிருக்கிறது.
இந்த நால்வரில் நீதியரசர் ரஞ்சன் கோஹாய், இப்போதுள்ள தலைமை நீதியரசர் தீபக் மிஷ்ரா ஓய்வு பெற்ற பிறகு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசராகப் போகிறவர்.
‘சுதந்திரமான நீதித்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சு’ என்ற அடிப்படை தத்துவத்தின் படிதான் நீதித்துறையின் செயல்பாடுகள் இந்தியாவைப் பொறுத்தமட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கான பாதுகாப்புகளையும், அரசியல் சட்டம் அதன் அடிப்படையில்தான் வழங்கியிருக்கிறது.
ஆனால், அரசியல் வாதிகளின் மீதான ஊழல் வழக்குகளில், தயவு தாட்சயன்மின்றி தீர்ப்புகளை வழங்கி வரும் உச்சநீதிமன்றத்தின் மதிப்பின் மீது, இந்தப் ‘ ஊடகவியலாளர் சந்திப்பு’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு உள்ளேயே பனிப்போரா என்ற எண்ணம், பொதுமக்களுக்கு ஏற்பட்டு விட்டது.
நான்கு நீதியரசர்களும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் தீபக் மிஸ்ராவுக்கு எழுதியுள்ள கடிதம், பொதுமக்கள் மன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது; தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.
பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்டதாக தொடுக்கப்பட்ட, ‘சொராபுதீன் என்கவுன்டர்’ வழக்கை விசாரித்து வந்த, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி லோயாவின் திடீர் மரணம் தொடர்பான வழக்கு, இப்போதைய உச்சநீதிமன்றப் பிரச்சினைக்கு மூல காரணமாகவும் நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளில், மத்திய அரசாங்கத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் இன்னொரு காரணமாகவும் அமைந்துள்ளன.
“மும்பையில் இருக்கும் அமித் ஷா, ஏன் வழக்கில் ஆஜராக வரவில்லை” என்ற கேள்வியை விசாரணை நீதிபதி லோயா எழுப்பியதும், அதன் பின்னர், அவரது மரணமும் அவருக்குப் பின்னர் வந்த நீதிபதி, அமித் ஷாவை விடுவித்ததும் ஒரு புறம் என்றால், இந்த நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கு, குறிப்பிட்ட உச்சநீதிமன்ற அமர்விடம் விசாரணைக்குக் கொடுக்கப்பட்டது. இதுவே, இந்தச் சர்ச்சைக்கு மணி கட்டியிருக்கிறது என்று, வழக்கறிஞர்கள் விவாதித்து வருகிறார்கள்.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உச்சநீதிமன்ற நீதியரசர் ரஞ்சன் கோஹாய் இதைப் பத்திரிக்கையாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது, தெரிவித்துள்ளதை வழக்கறிஞர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.
அதேமாதிரி, நீதியரசர்களை நியமிக்கும் ‘தேசிய சட்ட ஆணைக்குழு’ 2015 இல் உருவாக்கப்பட்டது.
நீதியரசர்கள் நியமனத்தில் மத்திய அரசாங்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அதிகாரம்மிக்க ஆணைக்குழு அது. முன்பு தலைமை நீதியரசராக இருந்த ஹேகர் தலைமையிலான அமர்வு, அந்த ஆணைக்குழுவைச் செல்லாது என்று அறிவித்தது.
அதேநேரத்தில், நீதியரசர்கள் நியமனம் தொடர்பான ‘நடைமுறைகளை’ புதிதாக உருவாக்க, மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஐந்து நீதியரசர்கள் கொண்ட அந்த அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின்படி நடைமுறைகள் வகுக்கப்பட்டன.
ஆனால், அந்த அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை, மாற்றியமைக்கும் விதத்தில், இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு தலையிட்டுள்ளது என்பது, நான்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் முன்வைத்துள்ள இன்னொரு வாதமாக இருக்கிறது.
ஆகவே, குறிப்பிட்ட அமர்வுக்கு வழக்குகளை விசாரணைக்குக் கொடுப்பதும், நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய நடைமுறைகளை வகுப்பதும் இப்போதைய உச்சநீதிமன்ற குழப்பத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
உச்சநீதிமன்ற சர்ச்சை மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில், இரு பிரிவான வாதங்களுக்கு வித்திட்டிருப்பது போல், அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.
“இந்தச் சர்ச்சைக்கு உச்சநீதிமன்றத்துக்குள்ளேயே சுமூக தீர்வு காணப்பட வேண்டும்” என்று, ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் கூறி வருகிறார்கள். வேறு சில வழக்கறிஞர்களோ, “மத்திய அரசாங்கம் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகளோ, நீதித்துறையில் அரசியல் தலையீடு கவலையளிக்கிறது” என்று, கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்.
ஆளும் பா.ஜ.கவோ, “இது உச்சநீதிமன்றத்துக்குள் நடக்கும் நிர்வாக விவகாரம். அதில் அரசாங்கம் தலையிடாது. உச்சநீதிமன்றத்துக்குள்ளேயே தீர்வு காண்பார்கள்” என்று ஒதுங்கி நிற்கிறது.
குறிப்பாக, டொக்டர் சுப்ரமண்யம்சாமி இதில் மாறுபடுகிறார். “இது உச்சநீதிமன்ற உள் விவகாரம் அல்ல; அந்த நான்கு நீதியரசர்களும் மிக நேர்மையானவர்கள். ஆகவே, அவர்கள் கூறியிருப்பதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில், இந்தியாவின் தலைமை வழக்கறிஞர், “உச்சநீதிமன்றத்துக்குள்ளேயே இதற்குத் தீர்வு காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், நீதித்துறைக்குள் நடக்கும் இந்த மோதல், சாதாரண குடிமகன், நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கைக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது என்ற கருத்து வேகமாகப் பரவி வருகிறது.
நீதியரசர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டுவது என்று இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீதியரசர்கள் நியமனத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் தலைமையிலான கொலோஜியத்துக்கு முன்னுரிமை என்று அளிக்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகள், நீதித்துறையில் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையை, நேர்மையை நிலைநாட்டியிருக்கிறது. தேசிய நீதியரசர்கள் ஆணைக்குழுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது, அந்த அமர்வில் இருந்த நீதியரசர் செல்லமேஸ்வர் மட்டும் ஆணைக்குழுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.
“நீதியரசர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்“ என்ற அடிப்படையில், தீர்ப்பை அவர் மட்டும் அளித்தாலும், மற்ற நான்கு நீதியரசர்களும், “நீதியரசர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற அதிகாரத்தை, அரசாங்கத்திடம் விட்டுக் கொடுக்க முடியாது” என்று உறுதியாக நின்று, “தேசிய நீதியரசர்கள் ஆணைக்குழு அமைத்தது செல்லாது” என்று தீர்ப்பளித்தனர்.
ஆனால், இப்போது தலைமை நீதியரசராக இருக்கும் தீபக் மிஷ்ரா, பதவியேற்றவுடன் வரலாற்றில் முதல் முறையாக, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எப்படி தெரிவு செய்யப்பட்டனர். ஏன் ஒருவரை நிராகரித்தோம்” என்பது போன்ற தகவல்களை உச்சநீதிமன்றத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டார்.
நீதியரசர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்த அவரது பதவி காலத்தில், இந்த நான்கு நீதியரசர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, உச்சநீதிமன்றத்துக்குள் நடக்கும் பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டது. “ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று நான்கு நீதியரசர்களும் கூறியிருப்பது அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது. நீதியரசர்களின் இந்தக் குற்றச்சாட்டு, உச்சநீதிமன்றத்துக்குள் நடக்கும் நிர்வாக மோதல் என்பதையும் தாண்டி, நாட்டின் ஜனநாயகத்தின் மீது நீதியரசர்களுக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டியிருக்கிறது.
அது மட்டுமின்றி, இப்போது உருவாகியுள்ள பிரச்சினைக்குத் தீர்வு, உச்சநீதிமன்றத்துக்குள் மட்டும் இல்லை; வெளியிலும் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், “இது உச்சநீதிமன்றத்தின் உள்விவகாரம். அரசஅரசாங்கம் தலையிட வேண்டியதில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் முடிவு எடுத்திருந்தாலும், டொக்டர் சுப்ரமண்யசுவாமி போன்றோரின் கருத்துப்படி, மத்திய அரசாங்கம் குறிப்பாக பிரதமர் தலையிடாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதையும் மறுத்து விட முடியாது.
இன்றைக்கு உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கிறது. அதிக பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்திலேயே இந்த வருடம் அதிகமானோர் ஓய்வுபெற்றுச் செல்கின்றனர். ஆனால் இதற்கு எல்லாம் அடிப்படை முட்டுக்கட்டையாக இருப்பது, நீதிபதிகள் நியமனம் குறித்த புதிய நடைமுறைகள், நிலுவையில் இருப்பதுதான் என்பதும் அதுதான் அரசுக்கும் - நீதித்துறைக்கும் இடையே நடக்கும் பனிப்போர் என்றும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில்' உச்சநீதிமன்றத்துக்கு முன்னுரிமையா? மத்திய அரசாங்கத்துக்கு முன்னுரிமையா? என்ற அதிகார பிரச்சினைதான் 'புதிய நடைமுறையை' கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆகவே 'நீதிபதி லோயா மரணம்' 'உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்' இரண்டும் இன்றைக்கு உச்சநீதிமன்றத்துக்குள் நடக்கும் இந்த அசாதாரண மோதலுக்கு விதை போட்டு விட்டன. இது விருட்சமாகாமல் தடுக்கும் தீர்வு உச்சநீதிமன்றத்துக்குள் இருந்தே வரப் போகிறதா அல்லது பிரதமர் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப் போகிறதா என்பதே இன்றைக்கு அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago