Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் அதன் போக்கு மற்றும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைக் கருத்திற் கொண்டு அரச மேலிடம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகின்றது. இந்நிலையில், இப்போது அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இம்முறை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு பிரதியமைச்சுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே பிரதியமைச்சு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இன்னுமொரு முஸ்லிம் எம்.பிக்கும் அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது வரவேற்கத்தக்க விடயமாகும்.ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்.பி.பி. கட்சியின் முஸ்லிம் எம்.பிக்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்களைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
என்.பி.பி. அரசாங்கத்திற்குப் பெருமளவு ஆதரவை வழங்கியிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு இது ஒரு பெரும் மனக்கிடக்கையாக இருந்தது. அது இம்முறையும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் முஸ்லிம்கள் நம்பியிருந்து ஏமாறினர் என்றே சொல்ல வேண்டும்.
கிட்டிய எதிர்காலமொன்றில் அல்லது இன்னுமொரு முறை அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் போது, முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருந்தது. “இதோ முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படப் போகின்றார்” என்ற கதைகளும் வெளியாகியிருந்தன.
ஆயினும், அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் இன்னுமொரு பிரதியமைச்சு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட போதிலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கும் கொள்கையில் மட்டும் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என தெரிகின்றது.
எல்லோரும் சமமாகப் பார்க்கப்படுகின்ற நாடாக நமது நாடு இருக்குமென்றால், சமூகம் சார்ந்த அமைச்சர்கள் தேவையில்லை. அப்போதும் கூட அந்த சமூகத்தின் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதற்கு அதுபற்றி அறிந்த ஒருவர் வேண்டும் என்ற அடிப்படையிலாவது அமைச்சரவையில் அந்த இனக் குழுமத்தின் பிரதிநிதி இருந்தாக வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்து எதனைச் சாதித்தார்கள்? அமைச்சராக இருந்தால் மட்டுமா மக்களுக்குச் சேவை செய்ய முடியும்? பிரதியமைச்சர்களால் அதனைச் செய்ய முடியாதா? என்பதெல்லாம் விதண்டாவாதத் தனமான கேள்விகள்.
சிறுபான்மைச் சமூகங்களில் இருந்து அதிகமான எம்.பிக்களை அமைச்சர்களாக நியமித்து விட்டு, பௌத்த மக்களிடம் இப்படியான ஒரு விளக்கத்தை எந்த அரசாங்கத்தினாலும் கூற முடியுமா? இல்லை.
பிரதியமைச்சர்கள் அமைச்சரவை விட சில எம்.பிக்கள் வேலை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனை மறுக்கவில்லை. ஆனால், அமைச்சரவையில் அவர்களால் பங்கேற்க முடியாது. அங்கு முடிவுகளை எடுக்க முடியாது.
அமைச்சரவையில் அந்த சமூகத்தைப் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது, தம்முடைய அபிலாஷைகளை முன்வைப்பதற்கும், சமூகம் சார்ந்த நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.
தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் பிரதியமைச்சருக்கு அது சொல்லப்படுவதால் எந்தப் பலனும் கிடைக்காது.இந்த அடிப்படையிலேயே, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இலங்கையில் நிறுவப்பட்ட அமைச்சரவைகளில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இனவாதிகள் என சொல்லப்பட்ட ராஜபக்ஷக்களின் ஆட்சியிலும் கூட குறைந்தது ஒரு முஸ்லிமாவது அமைச்சராக இருந்துள்ளார்.
பல முஸ்லிம் எம்.பிக்கள் சம காலத்தில் பலமான அமைச்சுப் பதவிகளில் இருந்தனர். சிலர் சிறப்பாக சேவையாற்றினர். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீர்மானங்களை எதிர்த்து, தடுத்த முஸ்லிம் அமைச்சர்களும் இருந்தனர். அதேநேரம், ஆட்சியாளருக்கு ஒத்து ஊதிய முஸ்லிம் அமைச்சர்களையும் கண்டோம்.
இப்போது, இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் ஜே.வி.பி. மற்றும் என்.பி.பியின் கட்டுக்கோப்பு என்ற மாயை தகர்த்துக் கொண்டு, தமக்கு எம்.பி. பதவியையும் அமைச்சையும் அதிர்ஷ்டவசமாக வழங்கிய கட்சி விரும்பாத விதத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அந்த அமைச்சர் குரல் எழுப்புவாரா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.
தமது சமூகத்திற்கு ஒரு அமைச்சுப் பதவி கிடைக்காதததை ஆளும் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்கள் தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே உள்ளனர் என்றால், அமைச்சு வழங்கினால் மட்டும், சமூகத்திற்குச் சார்பான விடயங்களில் ஜே.வி.பியை பகைப்பார்கள் என்று எவ்விதம் நம்புவது என தெரியவில்லை.
எது எவ்வாறாயினும், சமத்துவம், அனைவருக்கும் சம உரிமை என்று பேசி ஆட்சிக்கு வந்த ஜே.வி.பியின் மறுவடிவமான என்.பி.பி. அரசாங்கத்தில் மட்டும் இதுவரை முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்பது, எந்தக் காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாத விடயமாகும்.
கோட்டபாய அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அமைச்சரவை விட, அனுர அரசில் உள்ள குறிப்பிட்ட முஸ்லிம் பிரதியமைச்சர் சமூக சிந்தனையுள்ளவராக இருக்கலாம், சாதித்துக் காட்டலாம் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டாலும், அமைச்சரவையில் அவருக்கு இடமில்லையே என்பதை மறுக்க முடியுமா?
முஸ்லிம் சமூகத்தின் சார்பில் என்.பி.பியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு, ஒரு அமைச்சராக இருப்பதற்காக அனுபவமும் தகுதியும் இன்னும் கிடைக்கவில்லையா?
முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருப்பதற்கு அல்லது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு பிரச்சினைகளோ, அபிலாஷைகளோ இல்லை என்று ஜே.வி.பி. கருதுகின்றதா?
அதை என்.பி.பி. ஏற்றுக் கொள்கின்றதா?இந்த நாட்டில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவான முஸ்லிம்கள் அனுரகுமார திசாநாயக்கவுக்கே வாக்களித்திருந்தனர். பாராளுமன்றத் தேர்தலிலும் என்.பி.பிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினார்.
எனவே, நன்றிக் கடனுக்காக அல்லது இந்தளவுக்கு இவ்விடயம் விமர்சிக்கப்படுவதால் அவற்றைச் சமாளிப்பதற்காகவேனும் ஒரு முஸ்லிம் எம்.பியை அரசாங்கம் இம்முறை அமைச்சராக நியமித்திருக்க வேண்டும். அதுதான் அரசியல் வியூகமாகவும் அமைந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு இந்த அமைச்சரவை மறுசீரமைப்பிலும் தவறவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். தனியொரு மதக் குழுமமாகவும் தனித் தேசிய இனமாகவும் உள்ளனர். எனவே, அமைச்சரவையில் அவர்களது பிரதிநிதியும் உள்ளடக்கப்படுவது என்பதுதான் சமத்துவமாகும் தர்மமாகும்.
ஜனாதிபதியும் பிரதமரும் இதுவெல்லாம் நன்கு தெரிந்தவர்கள். அப்படியென்றால் ஏன் இன்னும் இதனைச் செய்யாமல் இருக்கின்றார்கள்? இதனைத் தடுப்பது என்ன? அவர்கள் முன்சொன்னது போல முஸ்லிம் எம்.பி.க்களுக்கு ஒரு அமைச்சராவதற்கான கொள்திறன் இல்லையோ என்ற பல வினாக்கள் எழுகின்றன.
ஆனால் ஒன்று, எப்போது வேண்டுமென்றாலும் ஜனாதிபதி ஒரு முஸ்லிமை அமைச்சராக நியமிக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்காலத்தில் அப்படியான அபூர்வங்கள் நடக்க வாய்ப்பு இல்லாமலுமில்லை. ஆனால், இதுவரை நியமிக்காமல் விட்டதை அதன்மூலம் மூடிமறைக்க முடியாது.
அப்படியான நல்ல மாற்றங்கள் எதுவும் கடைசி வரையும் நடக்காமல் போகுமென்றால், கைக்குக் கிடைக்காத பழத்தைப் பார்த்து ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வதைப் போல, ‘இந்த அமைச்சு புளிக்கும்’ என்று முஸ்லிம்கள் ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago