2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘இந்த மண் எங்கள் சொந்த மண்’

காரை துர்க்கா   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்றைய தினம் மாலை, நூலகத்துக்குச் சென்று, செய்தித் தாள்களைப் புரட்டினேன். செய்தித்தாள் ஒன்றின் தலைப்பு, பின்வருமாறு அமைந்திருந்தது.  

‘வடக்கில் பறிபோகும் மண்; பாரிய போராட்டத்துக்குத் தயாராகும் மக்கள்’ எனக் காணப்பட்டது.   
ஆட்சி மாற்றத்துடன், ஏதோ பாரிய சிங்களக் குடியேற்றம், தமிழர் பிரதேசத்தில் தொடங்கப்படுகின்றது என்ற உள்ளுணர்வுடன், தொடர்ந்து படித்த போதே, எங்கள் வளமாகிய மண் கொள்ளை போகும் சங்கதி விளங்கியது.  

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஒரு பகுதியான, கட்டட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான மணலைக் கொண்டு செல்வதற்கு, அனுமதி பெறும் நடைமுறையை, கடந்த நான்காம் திகதி கூடிய அமைச்சரவை நீக்கியது.  

நிர்மாணப் பணிகளுக்கான மணலை, விரைவாகப் பெறவும், நியாயமான விலையில் பெறவும் இது ஒரு புறத்தில் வரவேற்கத்தக்க முடிவை அளிப்பதாக அமைந்திருந்தாலும், மறுவிதத்தில், இயற்கையை அழிக்கும் செயற்பாட்டை அதிகரித்துள்ளது.  

“மணல் கொண்டு செல்வதற்கு அனுமதி தேவையில்லை” என்ற அறிவிப்பு வெளியானதுடன், வீதிகளில் பல டிப்பர்கள், உழவு இயந்திரங்கள், லொறிகள் மணலுடன் பவனி வருகின்றன. தனியார் காணிகள், அரச காணிகள், சரணாலயங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில், இரவு பகலாகக் கனரக வாகனங்கள் மூலம், மணற் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.  

மணல் வியாபாரிகள், ஏதோ அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்தது போல, பணம் சம்பாதிக்கக் கிளம்பி விட்டார்கள். கனரக வானக உரிமையாளர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது கடன்களை அடைக்க வேண்டும், பணத்தை மேலும் பெருக்க வேண்டும் எனக் கிளம்பி விட்டார்கள்.  

மீண்டும், வழித்தட அனுமதி கொண்டு வரப்படலாம் எனக் கருதும் பொதுமக்கள் பலரும், தங்களது வளவுகளுக்குள் மணலைப் பெருமளவில் பதுக்கி வருகின்றார்கள். அவர்களும், இந்த மணலை எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் எனத் திட்டம் இட்டுள்ளார்கள்.  

ஆனால், இவர்கள் அனைவரும் த(எ)ங்கள் தலையில் மணலை அள்ளிக் கொட்டுகின்றார்கள். மனிதனது குமுறல்களுக்கும் வேதனைகளுக்கும் காரணம், அதிக ஆசையும் அறியாமையுமே ஆகும்.    

அந்தவகையில், இவர்கள் அறியாமையால் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. மாறாகத் தங்களது பேராசையால், எங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்குச் சொந்தமான வளங்களை அழிக்கத் தொடங்கி உள்ளார்கள்.  

எதிர்காலத்தில், ஆல் போல தழைத்து, வாழ வேண்டிய தங்கள் வம்சத்துக்கும் தேசத்துக்கும் சேதம் விளைவிக்கின்றார்கள். பணம் மட்டுமே வாழ்வின் அடிப்படை என நினைத்து, அனைத்து அடிப்படைகளையும் ஆட்டம் காண வைக்கப் போகின்றார்கள்.  

இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்டவை; மனிதனது தேவைகள் வரையறை அற்றவை. இவ்வாறான, வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, வரையறுக்கப்படாத தேவைகளை உத்தமமாகச் செயற்படுத்துவதும் செய்து முடிப்பதுமே பொருளியல் ஆகும்.  

‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்ற தாரக மந்திரத்தை அறியாது, இயற்கையுடன் விளையாடுகின்றார்கள்; இயற்கையை வ(வீ)ம்புக்கு அழைக்கின்றார்கள். ஆனால், இதைச் சற்றும் கவனத்தில் கொள்ளாது, பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.  

மாவட்ட அடிப்படையில், யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, தீவுப்பகுதி, அரியாலை கரையோரப் பகுதிகள்; கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னங்கண்டி, திருவையாறு, அக்கராயன், கோணாவில், புதுமறிப்பு, கிளாலி, கண்டாவளை, பூநகரி, கௌதாரிமுனை, ஆனையிறவு, கல்லாறு என 47க்கும் மேற்பட்ட இடங்களில், மணல் கொள்ளை போகின்றது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதி, பறங்கியாறு, பாலியாறு, ஒட்டுசுட்டான், வவுனிக்குளம், பேராறு, கொண்டைமடு காட்டுப்பகுதி, நந்திக்கடலோரம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், தேவிபுரம் என 19 இடங்களில் பூமி துண்டாடப்பட்டு, மணல் அகழப்படுகின்றது.  

மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, கூராய், மடு, பெரிய பண்டிவிரிச்சான், அருவியாறு, மன்னார்நகர் கரையோரப்பகுதி போன்ற இடங்களில் அகழப்படுகின்றது.  

வவுனியா மாட்டத்தில் கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி எனப் பல இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு, ஏறாவூர்ப் பற்று, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, செங்கலடி, வாகரை, கிரான், வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை போன்ற இடங்களில் மணல் அகழப்படுகின்றது.  

இதேவேளை, பளை, முகமாலையில் இந்திராபுரம் என்ற கிராமத்தில், போர்க் காலத்தில் புதைத்த வெடிபொருள்கள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தால், மக்களது மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறாக, வெடி பொருள்கள் அகற்றப்படாத ஆபத்தான பகுதிகள் என அறிவிப்பு இடப்பட்டிருக்கும் பகுதிகளில் கூட, ஆபத்துகளையும் பொருட்படுத்தாது, மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.   

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக வெள்ளத்தால், மக்கள் ஒரு புறம் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையிலும் கூட, அதற்குள்ளும் மணல் அகழ்வுகள், தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.   

இவ்வாறாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மணல் அகழ்ந்து, நாட்டின் பிற பிரதேசங்களுக்குத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லப்படுகின்றது.  

இதனால், எதிர்காலத்தில் இந்தப் பிரதேசங்கள் பாரிய இயற்கை இடரினை எதிர்கொள்ள உள்ளன. ஏற்கெனவே, மிகப் பெரிய போர் அனர்த்தத்தை எதிர்கொண்டு, அதிலிருந்து மீள முடியாது திணறும் தமிழ் மக்கள் மீது, பிறிதோர் இயற்கை அனர்த்தத்துக்குப் பிள்ளையார் சுழி போடப்படுகின்றது.  

இதேவேளை, யாழ்ப்பாணம், நாவற்குழி தெற்கு கடற்கரையோரப் பகுதியில், இவ்வாறாக மணல் ஏற்றச் சென்றவேளை, உழவுஇயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி, 48 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் கூடப் பதிவாகி உள்ளது.  

நேற்றுவரை, பேரினவாத அரசாங்கங்களின் சிங்களக் குடியேற்றங்களால் சிதைந்த எமது மண், இன்று எம்மவர்களால் சிதைக்கப்படுகின்றது. இந்த மண் மீட்கத் தானே, பல்லாயிரம் உறவுகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள் என்பதை நாம், இலகுவாக மற(கட)ந்து செல்ல முடியாது.  

இயற்கையை நேசிப்பவர்களும் மணல் அகழ்வால் இயற்கை எதிர்கொள்ளக் கூடிய ஆபத்தை அறிந்தவர்களும் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளார்கள்.  

ஆனாலும், யாழ். தீவகம், மண்கும்பான் பகுதியில், பொது மக்களுக்கும் மணலை, உழவு இயந்திரத்தில் கொண்டு சென்றவர்களுக்கும் முறுகல் நிலை தோன்றி, இறுதியில் உழவு இயந்திரம் தீயிட்டுக் கொளுத்தி எரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று உள்ளது.  

இதனால், தேவையற்ற வன்முறைகள் உருவாகின்றன. எந்நாளும், எல்லாவற்றுக்கும் போராடி மக்களும் களைத்து விட்டார்கள்.   

ஆகவே, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, முதற்கட்டமாக இதைத் தடுக்க வேண்டும்.  

‘எங்கள் ஊர்; எங்கள் கிராமம்’ என்ற பற்று, ஒரு காலத்தில் எங்களிடையே உச்சமாக இருந்தது. இன்று, வேலியே பயிரை மேயும் நிலை ஏற்பட்டு விட்டது. பொருள் தேடும் பூமியில், அறம் தோற்று விட்டது போலும்.  

இன்று, களவாக மரம் தறித்தல், களவாகக் கால்நடைகள் அறுத்தல், வீட்டு திண்மக் கழிவுகளை வீதிகளிலும், நீர்நிலைகளிலும் எறிவதும், பொதுச் சொத்துகளைச் சேதமாக்குவதும் பகல் நேரத்தில் வீதியில் ஒளிரும் மின்குமிழைக் கூட அணைக்காது செல்லல் என்று பொறுப்பற்ற செயற்பாடுகள், எங்கள் மத்தியில் அதிகரித்து விட்டன. 

வீடுகள், தொழிற்சாலைகள், வேறு நிறுவனங்களில் அன்றாடம் சேருகின்ற கழிவுகள், ஒழுங்கான முறையில் அகற்றப்படாமையாலேயே டெங்கு நோய், பலரது உயிர்களைக் காவு கொண்டு வருகின்றது.  

இவற்றைச் சட்டத்தைக் கொண்டோ, கண்காணிப்புக் கமெராவைக் கொண்டோ ஒருபோதும் திருத்தவும் முடியாது; நிறுத்தவும் முடியாது. ஓரளவு தடுக்கலாம்; அல்லது, குறைக்கலாம். ஏனெனில், இந்த மணல் அனுமதி, தளர்த்தப்பட்டவுடன் எவ்வாறாக மக்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதை, இன்று கண்டுள்ளோம்.  

எங்கள் நகரத்தில், கிராமத்தில்  அடுக்குமாடித் தொடரில் குடியிருக்கலாம். ஆனால், ஊரை ஊடறுத்துக் கடல் நீர் உட்புகுந்தால்...... ஆகவே, நாங்களாகவே எங்கள் தாய் நாட்டின் வளங்களை, மரபுகளை, மதிப்புகளைப் பேணும் பண்பாடு வளர்க்கப்பட வேண்டும்.  

எங்கள் மனங்களில் மாற்றம் மலர வேண்டும்; அல்லது, மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மனமாற்றம் ஊடாக, எங்கள் நடத்தைகளில் மாற்றம் துளிர் விட வேண்டும். மக்களிடையே எளிதாகப் பரவுவன நோய்களும் தீய பழக்க வழக்கங்களும் மட்டும் அல்ல. நற்பண்புகள், உயர்ந்த எண்ணங்கள் கூடத் தொற்றிக் கொள்ளக் கூடியவைகளே.  ‘இந்த மண், எங்கள் சொந்த மண்’


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .