2021 மே 08, சனிக்கிழமை

இன்னொரு பிரபாகரனின் தோற்றம்?

Thipaan   / 2016 மே 21 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு பிரபாகரனின் உருவாக்கம் பற்றி எதிரெதிர் முனைகளில் இருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக கடந்தவாரம் கொழும்பில் நடந்த பொதுநிகழ்வு ஒன்றில் சி.வி.விக்னேஸ்வரன், உரையாற்றியிருந்தார்.  ஊடகவியலாளர் குசல் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவையடுத்து நடந்த கருத்தரங்கிலேயே, அவர் உரையாற்றியிருந்தார்.

அவரது உரையின் ஒரு கட்டத்தில் தான், வடக்கில் தற்போதைய இராணுவ நெருக்குவாரங்கள் உள்ள சூழல் தொடர்ந்தும் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். தனது உரையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதனை, நேரடியான எச்சரிக்கை போன்று வெளிப்படுத்தாமல், நாசூக்காகவே குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இன்னொரு பிரபாகரன் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும் போர் அழிவுகளை அனுபவித்த வடக்கிலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாராக இல்லை என்றும், அரசியல்வாதிகள் தான், அதனை விரும்புகிறார்கள் என்றும் நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். மற்றொரு பக்கத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், பிரபாகரனை உயிர்ப்பிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக கூறியிருந்தார். பிரபாகரனை உயிர்ப்பித்தல், இன்னொரு பிரபாகரன் உருவெடுத்தல் என்பன பற்றிய விவாதங்கள் அரசியல் களத்தில் தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டு வரும் ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமை தான்.

பிரபாகரனை உயிர்ப்பித்தல் என்று இங்கு உரையாடும் போது, பிரபாகரனின் மரணத்தை பகிரங்க களத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் தரப்பினர் அதனை வெறுப்போடு பார்க்கக் கூடும். அதேவேளை, இன்னொரு பிரபாகரனின் தோற்றம் என்பதை, வெறும் ஆயுதப் போராட்டத்தின் சின்னமாகவே சிங்கள அரசியல் தலைமைகள் பார்க்க முனைகின்றன. இன்னொரு பிரபாகரனின் தோற்றத்தை இன்னொரு போரின் ஆரம்பமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், இங்கு பிரபாகரன் ஒரு குறியீடாகவே பார்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் மறக்கப்பட்ட போது, அதனை அடைவதற்கான போராட்டத்துக்குத் தலைமையேற்ற ஒருவரின் ஆளுமையாகவே அதனைப் பார்க்க வேண்டும். தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவே பார்த்துப் பழகிப்போன சிங்களத் தலைமைகளுக்கு, பிரபாகரனின் உண்மை வடிவம் தெரியாதிருப்பதில் ஆச்சரியமில்லை.

இன்னொரு பிரபாகரனின் தோற்றம் என்பது, தமிழர்களின் உரிமைக்காக போராடும் ஒருவரின் தோற்றத்தையே குறித்து நிற்கிறது. அவ்வாறாகத் தோற்றம் பெறுகின்ற ஒருவர், தமிழரின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தை, ஆயுதவழியில் தான் முன்னெடுப்பார் என்றோ, முன்னெடுக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. அறவழியில் கூட அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம்.

அவ்வாறாயின், இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லையா என்ற கேள்வி பலருக்கும் எழக் கூடும். நிச்சயமாக இல்லை என்பதே அதற்கான பதில். இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல் செய்கிறார்களே தவிர, உரிமைக்கான போராட்டம் நடத்தவில்லை. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுடன், முடிவுக்கு வந்த தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், நீறுபூத்த நெருப்பாகவே மாறிவிட்டது. தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்களின், முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரத் தவறும் போது, தமிழர்களின் உரிமைகளையும் தமிழர்களுக்கான அதிகாரங்களையும் உறுதிப்படுத்தத் தவறும் போது, இன்னொரு பிரபாகரனின் தோற்றம் தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க முடியாததாகி விடலாம்.

அதனைத் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேவேளை, இன்னொரு பிரபாகரனின் தோற்றத்தை தமிழ்ச் சமூகம் விரும்பாது என்பது போன்ற, ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் கருத்தும், கவனத்துக்குரியது. அதாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொரு போராட்டத்தை விரும்பமாட்டார்கள் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது. இது நிச்சயம் உண்மையான கருத்தும் கூட. ஆனால் இதனை அவர்கள் விளங்கிக் கொள்ளும் முறை தவறானது. தமிழர்கள், மீண்டுமோர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கமாட்டார்கள், முன்னெடுக்கவும் முடியாது என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா, ஏற்கெனவே போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள், போரினால் ஏற்பட்ட அழிவுகள், தமிழ் மக்களை இன்னொரு போருக்குத் தூண்டாது என்ற நிலையில் இருந்தே அந்தக் கருத்தை வெளியிட்டனர்.  அதைவிட, இன்னொரு போராட்டத்தை ஆரம்பிக்க முடியாதளவுக்கு இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தியிருப்பதாக இறுமாப்பிலும், அவர்கள் அதனைக் கூறியிருந்தனர்.

தமிழ் மக்கள், போரை, அழிவுகளை விரும்பவில்லை என்பது உண்மையே. ஆனால், போரை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழர்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல என்பதும் உண்மை. அதுபோலவே, பிரபாகரனும், வன்முறைகளின் மீது கொண்ட தாகத்தினால் உருவாகவில்லை. தமிழர்கள் நசுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட போது தான், பிரபாகரனின் போராட்டம் ஆரம்பமானது.

கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றும் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'டட்லி - செல்வா,

பண்டா - செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த இரண்டு உடன்பாடுகளையும் கிழித்தெறிந்தது சிங்களத் தலைமைகள் தான்.  சிங்களத் தலைமைகளின் தவறுகளும், சிங்களப் பேரினவாதத்தின் வன்முறைகளும் தான், பிரபாகரனை உருவாக்கியது. இதனை ஜனாதிபதியே பகிரங்கமாக, நாட்டின் உயர் சபையான நாடாளுமன்றத்தில் வைத்தே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது தவறுகளைச் சரிசெய்வதற்காக தருணம் வாய்த்திருக்கிறது என்பதை, சிங்கள அரசியல் தலைவர்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை.

போருக்குப் பின்னர், தனக்குக் கிடைத்த ஐந்தாண்டு வாய்ப்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்னொரு போராட்டத்தைத் தமிழர்களால் நடத்த முடியாதளவுக்கு முடக்கிவிட்டதான இறுமாப்பு அவரைச் சூழ்ந்திருந்தது. அதனால், தமிழர்களுக்கென உரிமைகள் எதையும் வழங்க வேண்டியதில்லை என்ற நினைப்பில் காலத்தைக் கடத்தினார். அவருக்குப் பின்னர், தமிழர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தற்போதைய அரசாங்கமும் கூட, இந்த விடயத்தில் எதையும் உருப்படியாகச் சாதிக்கவில்லை.

இந்த அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தளவுக்கு முன்னகர்ந்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது. அரசியல் கைதிகள், இராணுவ மயச்சூழல், காணிகள் அபகரிப்பு, உயர் பாதுகாப்பு வலயம் போன்ற பிரச்சினைகளும் நிலையான அமைதியை ஏற்படுத்தும், அரசியல் தீர்வு போன்ற  அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலை தொடரும் போது, தமிழர்கள் மத்தியில் வெறுப்பும் கோபமும் ஏற்படுவது இயல்பு. அது தமிழர்களுக்கு மட்டுதமன்றி, எந்தவொரு இனத்துக்குமே ஏற்படும் இயல்பான குணம் தான்.

அத்தகையதொரு நிலைக்குத் தமிழரை இட்டுச் செல்லாதிருப்பதை சிங்கள அரசியல் தலைமைகள் தான், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எந்த வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்காமல், தமிழர் பிரச்சினைகளை அலட்சியப் போக்குடன் அணுகுகின்றவர்களாகவே பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் இருக்கின்றனர். தமிழர்கள், இன்னொரு போராட்டத்துக்கு முன்வரமாட்டார்கள் என்ற நிலையை, இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். இந்த விடயத்தை அவர்கள் தமிழர்களின் பலவீனமாக பார்க்க முனைகிறார்கள். இந்தக் கோணத்தில் இவர்கள் சிந்திக்கத் தலைப்படுவதால் தான், இன்னொரு பிரபாகரனின் தோற்றம் அல்லது உருவாக்கம் பற்றிப் பேசினாலே எரிச்சல் வந்து விடுகிறது.

தமிழர்களின் போராட்டத்தை, முன்நோக்கிக் கொண்டு செல்வதில், அதற்குத் தலைமை வகித்ததில் பிரபாகரனின் பங்கு அளப்பரியது. அதுபோன்ற ஆற்றலுடைய இன்னொருவர் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்புக் கூட மிகையானது. ஆனால், தமிழர்கள் காலம் காலமாகவே, அடக்கியாளப்படுகின்ற நிலை ஒன்று தொடருமேயானால், அதற்கு எதிராக ஏதோ ஒரு வழிமுறையில் போராடுகின்ற ஒரு தலைமை உருவாகியே தீரும்.

தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பது யாரோ ஒரு கனவானின் பொன்மொழி.

தமிழர்களின் போராட்டம் தவிர்க்க முடியாத கட்டத்தை அடையும் போது, அத்தகையதொரு ஒரு தலைமை நிச்சயம் உருவெடுக்கும். அப்படியொரு கட்டத்தை உருவாக்குவதும், உருவாகாகாமல் தடுப்பதும் சிங்கள அரசியல் தலைமைகளின் கையில் தான் இருக்கிறது. இதனை, இடதுசாரிச் சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களான வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X