R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை.
நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு பற்றி மட்டுமன்றி, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பற்றியெல்லாம் உலக அரங்கில் பேசப்படுகின்றது.
ஆயினும்; கூட, 1990ஆம் ஆண்டு, ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ் நிலத்தில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அங்த மக்களுக்குத் தீர்வு கிடைக்கவும் இல்லை.
முஸ்லிம் மக்கள் மொழியால் மட்டுமன்றி, வேறு பல விடயங்களாலும் தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்ததாக வாழ்ந்தார்கள். இன்றும் இதன் சாயல்கள் உள்ளன. குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் எந்தளவுக்கு பெருந்தேசியக் கட்சிகளைச் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளையும் சார்ந்திருந்தது.
எம்.எச்.எம்.அஷ்ரப் வரை பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து அரசியலில் பயணித்தனர். இப்போதுள்ள சிறிதரன் போன்ற ஒரு சில அரசியல்வாதிகளைப் போலல்லாமல், மூத்த தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் தனியொரு இனம் என்பதையும், இனப் பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவும் இல்லை, அவர்கள் போராடவும் இல்லை. ஆனால், தமிழர்களின் தாகத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களில் இணைந்து போராடிய வரலாற்றைத் தமிழ்த் தேசியம் என்று மறக்கக் கூடாது.
புலிகளும் ஏனைய பல ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கிய பிறகு, தமிழ்க் கட்சிகளைப் புலிகள் இயக்கம் கட்டுப்படுத்த தொடங்கிய பிறகு, முஸ்லிம்கள் இந்த போக்கில் இருந்து விலகினர்.
விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்களை வெறுப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள் தமிழர் அரசியலோடுடனான உறவைத் துண்டிப்பதற்கும் தமிழ்
ஆயுதக் குழுக்கள் செய்த அட்டூழியங்களும் தமிழ் அரசியல்வாதிகளின் மௌனமும் முக்கிய காரணமானது.
அப்படியான சம்பவங்களில் மிக முக்கியமானதுதான் வடக்கில்
வாழையடி வாழையாக வாழ்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் உடுத்த
துணியோடு அங்கிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட கறைபடிந்த நிகழ்வாகும்.
மேற்படி ஆயுதக் குழுக்கள் கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், குருக்கள்மடம் படுகொலை, வயல்வெளிகளிலான பலியெடுப்புக்களை நடத்தியது போல, வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கடத்துதல், கப்பம் கோருதல், சொத்துக்களைப் பறித்தல் என, ஒரு விடுதலை இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு மாற்றமான பல அட்டூழியங்களை அரங்கேற்றியதை மறக்க முடியாது.
இந்தப் பின்னணியில்தான், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி, வடக்கின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் வெளியேற்றினர்.
தங்களது சொத்துக்களையோ, நகைகளையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்ல விடாமல், சில மணிநேர அவகாசத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இத்தனை காலமும் உழைத்த சொத்துக்களை, வீடுவாசல்களை மட்டுமன்றி பூர்வீக நிலத்தையே விட்டு, துரத்தியடிக்கப்படுவது எவ்வளவு கொடுமை?
90 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு தமது வாழிடங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படவில்லை.
முஸ்லிம்கள் வெளியேறும் போது, புலிகள் அவர்களைச் சோதனையிட்டு, பணம், நகை மட்டுமன்றி மேலதிக ஆடைகள் போன்ற உடமைககளையும் பறித்தெடுத்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சொல்லியிருக்கின்றனர்.
ஒரு இனத்தின் நில உரிமைக்காக, விடுதலைக்காக போhடிய ஆயுத இயக்கம், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்று கூறிவந்த சமூகத்தின் விடுதலை வீரர்கள்தான் இந்த இந்த செயலைச் செய்திருந்தனர்.
உலகில் வேறு எந்த மக்களும் இப்படி வெளியேற்றப்பட்டிருப்பார்களோ தெரியாது.
உண்மையில் இது ஒரு இனச் சுத்திகரிப்பாகும். ஏனெனில் வடகிழக்கு இணைந்த அவர்களது தனியீழ கனவில் வடக்கு என்பது மையப் புள்ளியாகும்.
அங்கு இன்னுமொரு இனத்தை வைத்திருப்பது தமது கோட்பாட்டை வென்றெடுப்பதற்குத் தடையாக அமையும் என்பதைப் புலிகளின் தலைமை அறிந்திருக்கும்.
மறுபுறத்தில், முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும் வடக்கில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வேறு பல கதைகளும் சொல்லப்பட்டன.
காட்டிக் கொடுப்பவர்களை வெளியேற்றுவதாயின் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தெரிவு செய்து வெளியேற்றியிருக்கலாம். அதுமட்டுமன்றி, காட்டிக் கொடுப்பவர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டும்தானா? தமிழர்களில் இருந்த காட்டிக் கொடுப்பவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை?
வடக்கில் இராணுவத்தினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை விரட்டியடிக்குமளவுக்கு பலம் பெற்றிருந்த புலிகளுக்கு அச்சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையா?
வடக்கில் முஸ்லிம்களை விட அதிகமான தமிழர்களுக்குப்
பாதுகாப்பு வழங்க முடியுமாக இருந்தால், அதே பாதுகாப்பை ஏன் முஸ்லிம்களுக்கு வழங்க முடியாமல் போனது? இதுவெல்லாம் வெறும் கற்பிதங்களே ஆகும்.
உண்மையில், இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய கறைபடிந்த சம்பவம் ஆகும். தார்மீகமாகப் பார்த்தால் புலிகள் இயக்கத்தின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இது என்றும் சொல்ல முடியும்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தீவிர போக்கற்ற தமிழ் மக்கள் இந்த செயலை மனதால் வெறுக்கவே செய்தனர். அதனையும் மீறி பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தமிழ் செயற்பாட்டாளர்கள் புலிகளை இது விடயத்தில் பகிரங்கமாக எதிர்த்தார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
முதலாவது விடயம் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது மிகப் பெரும் தவறும் அநியாயம் இழைப்புமாகும். அவர்கள் நல்ல நோக்கத்தில் வெளியேற்றியிருந்தால், முஸ்லிம்களின் நகைகள், வாகனங்கள், வீடுகள், சொத்துக்களைப் பாதுகாத்து பத்திரமாக மீள ஒப்படைத்திருக்க வேண்டும்.
அத்துடன், இதற்கான விளக்கத்தைத் தெளிவாகக் கூறி பகிரங்கமான மன்னிப்பொன்றைக் கேட்டிருக்க வேண்டும். மட்டுமன்றி, அந்த மக்களை மிக விரைவாக மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கையை தம்பக்கத்தில் இருந்து புலிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இது எதுவுமே இன்று வரை நடக்கவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டாலும் வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.
யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வதிவிட உரிமை எடுத்தவர்கள் இப்போது சிறப்பான சூழலில் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்களது பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கான மறுதலிக்க முடியாது.
அதுபோலத்தான் வடக்கு முஸ்லிம்களும் பார்க்கப்பட வேண்டும். புலிகள் துரத்திய போது உழவு இயந்திரங்களிலும், வள்ளங்களிலும், கால்நடையாகவும் வந்த முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களில் குடியேறினர். புத்தளத்திலேயே பெருமளவானோர் தஞ்சம் புகுந்தனர்.
இன்று அவர்கள் சனத்தொகை பல்கிப் பெருகிவிட்டாலும் மீள் குடியேற்றப்படவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களும் இதுவிடயத்தில் வினைத்திறனாக செயற்படவில்லை.
எனவே, அரசாங்கமும் முஸ்லிம் எம்.பிக்களும் இது விடயத்தில் விரைந்து செயற்படுவதுடன், வடக்கு தமிழர்களை மீள் குடியேற்றுவதில் காட்டுகின்ற அக்கறையை வடபுல தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் விடயத்திலும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் புலிகளின் தவறை நியாயப்படுத்துபவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago