Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாகும் வரை எனக் கூறி, உண்ணாவிரதம் இருந்து, கடந்த வாரம், ஒன்பது நாட்களில் அதனை முடித்துக் கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் கோரிக்கைகள் அந்த உண்ணாவிரதத்தின் காரணமாக நிறைவேறும் என நினைத்தவர்கள் உண்டா?
அதேபோல் தமது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, உயிரை விடுவார் என உலகில் எவராவது நினைத்தனரா?
இது, சாகும் வரை உண்ணாவிரதம் எனக் கூறப்பட்டாலும் எவரும் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு வழியில், தமது சாகும் வரை உண்ணாவிரதத்தை சாகா உண்ணாவிரதமாக மாற்றிக் கொள்வார் என்பதைச் சகலரும் அறிந்திருந்தனர்.
அவர்கள் நினைத்ததைப் போலவே, வீரவன்சவுக்கு நெருக்கமான சில முக்கிய பிக்குகள், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அவரும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு இணங்கத் தாம் உண்ணவிரதத்தை கைவிடுவதாகக் கூறி, சாகும் வரை எனக் கூறப்பட்ட உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, 45 வாகனங்களைத் தமது அரசியல் சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியதன் மூலம், பொதுச் சொத்தைத் தவறாகக் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒன்பது கோடியே 10 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட வீரவன்ச, நீதிமன்ற உத்தரவினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர், தமக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கேட்ட போதிலும், இது அரச சொத்து சம்பந்தமான வழக்கு என்பதால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பின்னர், அவரது மகளும் மகனும் தந்தைக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முற்பட்டனர். ஆனால், பிரசித்தியின்றியே அவர்கள் அதனைக் கைவிட்டனர் போலும்!
பின்னர், தாம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதனால், தமது மகள் வெகுவாக மானசீகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி, மேல் நீதிமன்றத்தில் அவருக்காக பிணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அது, கடந்த 21 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்தே அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தம்மை விடுதலைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகவே அப்போது சகல ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டு இருந்தன. இது நீதிமன்ற உத்தரவைக் கொச்சைப்படுத்தும் செயலென பலர் அப்போது கூறினர்.
உண்ணாவிரதத்தின் காரணமாக வீரவன்சவுக்கு பிணை வழங்குவதாயின், ஏனைய கைதிகளும் அவ்வாறு உண்ணாவிரதம் இருந்தால், அவர்களுக்கும் பிணை வழங்க வேண்டுமா எனப் பலர் கேள்வி எழுப்பினர்.
மற்றக் கைதிகளினது பிள்ளைகளும் மானசீகமாகப் பாதிக்கப்பட்டால் அக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமா எனவும் அவர்கள் மேலும் கேள்வி எழுப்பினர்.
வீரவன்ச சுமார் இரண்டு மாதங்களாக விளக்க மறியலில் இருக்கிறார். அவருக்கு வீட்டில் இருந்தே உணவு வழங்கப்படுகிறது. வீட்டிலிருந்து மெத்தை மற்றும் தலையணையும் தருவித்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வசதிகள் ஏனைய கைதிகளுக்கு இல்லை.
இதேவேளை, இவ்வளவு நீண்ட காலமாக ஒருவரை விளக்க மறியலில் வைத்திருப்பது நியாயமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி மூலம் அழைத்துக் கூறியுள்ளதாகச் சில செய்திகள் கூறின.
அவ்வாறு கூற அவருக்கு உரிமை இருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பத்து வருடத்துக்கு மேலாக, வழக்கின்றியே பல தமிழர்கள் இன்னமும் தடுப்புக் காவலில் இருக்கிறார்கள் என்பதையும் அக்கைதிகள் தமது ஆட்சிக் காலம் முழுவதிலும் சிறையிலேயே இருந்தார்கள் என்பதையும் மஹிந்த மறந்துவிட்டார் போலும்.
தமக்குப் பிணை வழங்காததை ஆட்சேபித்து வீரவன்ச உண்ணாவிரதம் இருந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும், பின்னர் அவரது அரசியல் சகாக்களான ‘பொது எதிரணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர், உண்ணாவிரதத்துக்கான காரணத்தை மாற்றிக் கூற ஆரம்பித்தனர்.
வீரவன்ச தமக்குப் பிணை வழங்காமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றும் நாட்டில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காகவே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் என்றும் அவர்கள் கூறலாயினர்.
இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பது சாகும் வரை உண்ணாவிரதம். அவ்வாறாயின் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
பிணை மறுப்புத்தான் உண்ணாவிரதத்துக்கு காரணம் என்றால், அவரது கோரிக்கை தெளிவாக இருக்கிறது. அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழியில்லாவிட்டால், அரசாங்கம் சட்டமா அதிபர் மூலம், அவருக்குப் பிணை வழங்க ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், உண்ணாவிரதத்தைக் கைவிட அரசியல் பழிவாங்கல்களை நிறுத்த வேண்டும் என்றால் அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது துல்லியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் அதனை நிறைவேற்ற முடியும்.தெளிவில்லாமையினால் அரசாங்கம் எதனையும் செய்யாதிருந்தால் அவர் சாக வேண்டி வரும். இவ்வாறு பொது எதிரணியினர் சிந்தித்திருக்க வேண்டும்.
உண்மையிலேயே பிணை மறுப்புக்கு எதிராகவே வீரவன்ச உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால், நீதிமன்ற கட்டளையை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதப்படலாம் என்பதால், அவரது சகாக்கள் பின்னர் கதையை மாற்றினர்.
இறுதியில் அந்த உண்ணாவிரதத்தினால் குறைந்த பட்சம் அவரது கட்சிக்குள்ளேயாவது ஏதாவது தாக்கம் ஏற்பட்டதா என்பது தெளிவில்லை.
வீரவன்ச இதற்கு முன்னரும் 2010 ஆம் ஆண்டு, இதேபோல் நிறைவேறாத கோரிக்கையொன்றை முன்வைத்து ‘சாகும் வரை’ உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்து, இறுதியில் எந்தப் பயனும் காணாது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து இளநீர் கோப்பையொன்றைப் பெற்றுக் குடித்துவிட்டு அதனை முடித்துக் கொண்டார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்து, ஒரு வாரத்துக்குள் அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் போது, போரின்போது, இடம்பெற்ற சம்பவங்கள் விடயத்தில் பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்றை உருவாக்குவதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார்.
ஆனால், ஒரு வருடமாகியும் அது நிறைவேறாத நிலையில், பான் கீ மூன் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.
அதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இலங்கையில் ஓர் அமைச்சரும் போராட்டத்தில் குதிக்கப் போகிறார் என்றும் வீரவன்ச பகிரங்கமாக பான் கீ மூனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதனை பான் கீ மூன் புறக்கணிக்கவே, அந்தக் குழுவை வாபஸ் பெற வேண்டும் என வற்புறுத்தி, 2010 ஆம் ஆண்டு வீரவன்ச கொழும்பு ஐ.நா அலுவலகத்துக்கு முன் உண்ணாவிரதம் இருந்தார்.
இறுதியில், இந்த முறை போலவே, அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியவர்கள், அவரது அன்றைய உண்ணாவிரதத்தையும் பொருட்படுத்தவில்லை. ஆனால், தமது உண்ணாவிரதத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ந்து போவார்கள் என்றும் அதனால் அவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் வீரவன்ச அன்றும் இன்றும் நினைத்தார்.
அதனால்தான், அவர் அன்று பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, “பான் கீ மூன் அவர்களே! இதோ இலங்கையில் ஓர் அமைச்சரும் போராட்டத்தில் குதிக்கப் போகிறார் என ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்”.
அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்த இலங்கையில் அமைச்சர்கள் என்ன ஒபாமாக்களா? அதேவேளை, வீரவன்சவின் உண்ணாவிரதத்தால் நாட்டுக்குள்ளாவது பதற்ற நிலைமை ஏற்படாது என்பது ஐ.நா தலைவர்களுக்குத் தெரியும்.
இந்த முறையும் அவர் தமது உண்ணாவிரதத்தால், நீதிமன்றம் வளைந்து கொடுக்கும் என நினைத்தார் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவே தேவையில்லை.
உண்ணாவிரதம் இருப்பதென்பது இலகுவான காரியமல்ல. வீரவன்ச தண்ணீரை மட்டும் குடித்ததாகவே கூறப்படுகிறது. அந்தத் தண்ணீரில் சத்துணவு கரைக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் லால் காந்த கூறியிருந்தார்.
அவ்வாறாக இருந்தாலும், ஒன்பது நாட்கள் திரவ உணவில் மட்டும் வாழ்வது என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். அதற்கும் பெரும் துணிவு வேண்டும். அது வீரவன்சவிடம் இருக்கிறது. ஆனால், இலட்சியமொன்றை அல்லது ஒரு கோரிக்கையை முன்வைத்து அதற்காக உயிரை விடுவதென்றால் அதற்கு இதைப் போல் பன்மடங்கு துணிவும் தியாகமும் வேண்டும். எல்லாவற்றையும் விட ஒரு மகத்தான இலட்சியம் இருக்க வேண்டும். அவை தான் வீரசன்சவின் உண்ணா விரதங்களோடு சம்பந்தப்பட வில்லை.
உண்ணாவிரதத்தை ஒரு வெற்றிகரமான அரசியல் ஆயுதமாக பாவித்தவர்கள் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இருந்துள்ளனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி திலீபன், மட்டக்களப்பில் அன்னையர் முன்னணியின் முக்கிய உறுப்பினரான அன்னை பூபதி, இந்தியாவில் மகாத்மா காந்தி, பகத் சிங், பொட்டி சிறிராமுலு தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, வட அயர்லாந்தில் பொபி சான்ட்ஸ் கியூபாவில் பெட்ரோ லுயிஸ் போயிடெல் மற்றும் ஓர்லாண்டோ சபடா டமாயோ ஆகியோர் உண்ணாவிரதங்களால் அந்தந்த நாட்டில் அரசியல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாவர்.
அவர்களில் மகாத்மா காந்தி மற்றும் மண்டேலா போன்றவர்கள் உண்ணாவிரதத்தால் உயிரிழக்காவிட்டாலும் அவர்களது அப் போராட்டங்கள் ஆட்சியாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு சில வாரங்களில்தான், திலீபன் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
சிங்களப்படை, தமிழ் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும்; இடைக்காலத் தமிழ் அரசாங்கமொன்றை உருவாக்கும் வரை சகல புனர்வாழ்வு வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்; தமிழ்த் தாயகத்தில் தொடரும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்; தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட பொலிஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்த வேண்டும்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள சகல கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி, நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்தார்.
இவை, அன்று புலிகளின் கோரிக்கைகளாகவும் இருந்தன. இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசாங்கமோ அவற்றை நிறைவேற்றப் போவதில்லை என்பதை திலீபனும் புலிகளும் அறிந்திருந்தனர்.
எனவே, திலீபன் உயிரை விட வேண்டி வரும் அல்லது நகைப்புக்குரிய விதத்தில் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டிவரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே சாவு என்பதைத் தேர்ந்தெடுத்தே திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
தமது போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அவர் அந்த வழியைத் தேர்ந்தெடுத்தார். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 திகதி முதல் 26 ஆம் திகதி வரை உண்ணாவிரதம் இருந்த அவர், அதனாலேயே உயிரிழந்தார்.
இது பிழையான முடிவாகவும் சிலர் கருதியிருக்கலாம். சாவதை விட, போராடுவதற்காக வாழ வேண்டும் என்ற வாதத்தை முன்வைப்போர் அவ்வாறு நினைக்கலாம்.
ஆனால் அரசியல் நோக்கங்கள் எவையாக இருந்தாலும், அந்த மரணத்தில் காணப்பட்ட மாபெரும் தியாகத்தை எவராலும் மறைக்க முடியவில்லை. திலீபனின் மரணம் புலிகளின் போராட்டத்துக்கு பெரும் வலுச் சேர்த்தது என்பதை பின்னர் சகலரும் உணர்ந்தனர்.
இதேபோல், இந்திய படைக்கும் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தமது இரண்டு ஆண் பிள்ளைகளை இழந்து, மற்றொருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் முக்கிய உறுப்பினரான பூபதி கணபதிபிள்ளை 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோயில் வளவில் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார்.
புலிகளுடன் இந்திய படையினர் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை செய்துகொள்ள வேண்டும்; இந்திய அரசாங்கம், புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கைகளாயின.
திலீபனின் கோரிக்கைகள் போலன்றி, இக்கோரிக்கைளை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் முன்வரும் எனச் சிலவேளை பூபதி அம்மா நினைத்திருக்கவும் கூடும். ஆனால், அது நிறைவேறவில்லை. அவரும் உறுதியாக இருந்தார். இறுதியில் சரியாக ஒரு மாதத்தின் பின்னர், 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி அவர் உயிரை விட்டார்.
திலீபனோ, அன்னை பூபதியோ ஏதாவது காரணத்தை கூறி, தமது உண்ணாவிரதத்தை கைவிடுவர் என எவரும் நினைக்கவில்லை. அவர்களது மன உறுதியை அவர்களது மரணங்கள் உறுதி செய்ததை அடுத்து, மக்கள் மத்தியில் ஆக்ரோஷம் அதிகரித்தது. எனவேதான், அவர்களது உண்ணாவிரதங்கள் தியாகங்களாகக் கருதப்பட்டன. அவை அவர்களது போராட்டத்துக்கு வலுவூட்டின.
உலகை உலுக்கிய ஓர் உண்ணாவிரதம்தான் 1981 ஆம் ஆண்டு மேஸ் எனப்படும் பிரிட்டிஷ் சிறையில், வட அயர்லாந்துப் போராளியான பொபி சான்ட்ஸ் உள்ளிட்ட 10 பேர் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதம் ஆகும்.
தமது அமைப்பைச் சேர்ந்த கைதிகளை அரசியல் கைதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும். உப்புக் கலந்த நீரை மட்டும் உணவாகக் கொண்டு, இவர்கள் போராடினர்; அவர்களில் முதலாமவராக பொபி சான்ட்ஸ் 46 நாட்களில் உயிரை விட்டார். அவ்வாறு ஒவ்வொருவராக உயிரிழந்து, அக்குழுவில் இருந்த இறுதியானவர் 73 நாட்கள் போராடி உயிரிழந்தார். இவர்களும் ஏதாவது காரணத்தைக் கூறித் தமது உண்ணாவிரதத்தை கைவிடுவர் என எவருமே நினைக்கவில்லை.
அவர்களது போராட்டங்களின் நோக்கம் சரியோ பிழையோ, அப்போராட்டங்களின் போது, அவர்கள் காட்டிய மன உறுதியும் நேர்மையும்தான் மக்களை விழிப்புறச் செய்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago