2025 மே 17, சனிக்கிழமை

இலத்தீன் அமெரிக்கா: வளங்களுக்கான போராட்டம்

Thipaan   / 2015 நவம்பர் 05 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

உலகைப் பற்றி எமக்குச் சொல்லப்படும் கதைகளை விட, சொல்லாமல் விடப்பட்ட கதைகள் அதிகம். நம் தெரிவுக்கான தெரிவை நாம் ஊடகங்களின் கைகளில் ஒப்படைத்ததால் விளைந்த பயன்களில் இதுவும் ஒன்றெனக் கொள்ளவும் முடியும். நமக்குச் சொல்லப்படாத ஆனால், சொல்லப்பட வேண்டிய பல கதைகள் உள்ளன, பல களங்களும் உள்ளன.

இன்று, இலத்தீன் அமெரிக்காவெங்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான இடையறாத போராட்டத்தில், மிகச் சாதாரணமான மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தாங்கள் வாழும் நிலத்தையும் அதன் வளத்தையும் காப்பதற்கும் தக்கவைப்பதற்குமான போராட்டங்கள் சிலி, குவாட்டமாலா, உருகுவே, பாரகுவே, கொலம்பியா, பிரேசில், மெக்ஸிக்கோ என தென்னமெரிக்கக் கண்டமெங்கும் விரிகிறது. தனியார் மயமாக்கலுக்கும் வளக்கொள்ளைக்கும் நிலப்பறிப்புக்கும் எதிரான போராட்டம் இப்போது புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. 

இலத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான எடுவார்டோ கலியானோவின் 'இலத்தீன் அமெரிக்காவின் திறந்திருக்கும் இரத்த நாளங்கள்:

ஐநூறு ஆண்டுகளாகச் சூறையாடப்பட்ட ஒரு கண்டத்தின் வரலாறு' என்ற புத்தகத்தின் தொடக்க வரிகள் இவைதான்:

'நாடுகளுக்கிடையே ஒரு வேலைப் பிரிவினை இருக்கிறது. சில நாடுகள் வெல்வதில் தேர்ச்சி பெற்றவை. வேறு சில தோற்பதில் தேர்ச்சி பெற்றவை. உலகத்தில் நாங்கள் வாழும் இலத்தீன் அமெரிக்காவின் மக்கள் தோற்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். மறுமலர்ச்சிக் கால ஐரோப்பியர்கள், கடல் கடந்து வந்து அமெரிக்க இந்தியரின் நாகரிகத்தின் குரல்வளையில் பற்களைப் பதித்த பழங்காலம் தொட்டு தோற்றுக்கொண்டே இருப்பவர்கள் நாங்கள்'.

உலக வரலாற்றில் தொடர்ச்சியாக, மிகக்கொடுமையான வளச்சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளான பகுதி இலத்தீன் அமெரிக்கா. 1496இல் கொலம்பஸ் தன் கால்களை பதிக்கத் தொடங்கிய நாள் முதல், தொடர்ச்சியாக இக்கண்டம் சுரண்டப்படுகிறது. காலம் செல்லச்செல்ல சுரண்டலின் வடிவங்கள் மாற்றமடைந்த 1940களின் பின்னர் இக்கண்டத்தில் உள்ள பல நாடுகள், தங்கள் நிலங்களை அமெரிக்கக் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்து வாழைத்தோட்டங்களை உருவாக்கி, அக்கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவையாக மாறின. இதனால் தான் 'வாழைப்பழக் குடியரசுகள்' என்ற சொற்பதம் பிரபலமாகியது.

இயற்கை வளங்களுக்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில், இலத்தீன் அமெரிக்காவில் சுரங்கங்களை அகழ்வது பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் சொல்லொனாத் துன்பங்களை எதிர்நோக்குகிறார்கள். சுரங்க அகழ்வானது நிலத்தடி நீரை இல்லாமலாக்குவதோடு, நன்னீர் நிலைகள் அசுத்தமாகின்றன.

அகழப்பட்டதும் அதைச் சூழ்ந்ததுமான நிலப்பரப்புக்கள் பாவனைக்குதவாதனவாய் மாறுகின்றன. அதேபோல, அகழ்வின் போது வெளியிடப்படும் கழிவுகள் வேதியப் பொருட்களைக் கொண்டுள்ளமையால் அதைச் சூழ்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் இப்போது இலத்தீன் அமெரிக்க மக்கள், சுரங்கங்களுக்கும் சுரங்க அகழ்வுகளுக்கும் எதிராகப் போராடுகிறார்கள்.

இப்போது சுரங்கங்களை அகழும் நிறுவனங்களுக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்துள்ளது. இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இப்போது 195 கூர்மையடைந்த முரண்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக பெரு மற்றும் சிலியில் தலா 34 மற்றும் 33 முரண்பாடுகளும் மெக்கசிக்கோ (26), ஆர்ஜென்டீனா (24), பிரேசில் (20) ஆகிய நாடுகளிலும் மக்கள் சுரங்கங்களுக்கு எதிராக மூர்க்கமாகப் போராடி வருகிறார்கள்.

இதைவிட கூர்மையடையாத ஆனால், சுரங்கங்களுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இலத்தீன் அமெரிக்காவெங்கும் நிகழ்கின்றன. பெருவின் மொத்த நிலப்பரப்பில் 25சதவீதம் நிலப்பகுதி சுரங்க அகழ்வு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்புகளின் விளைவால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சரவை மூன்று தடவைகள் மாற்றப்பட்டுள்ளன. சுரங்க அகழ்வு நிகழும் இடங்களில் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு, போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் அடிக்கடி யுத்தம் மூள்கிறது. இதுவரை பெருவில் மட்டும் 200க்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாரியளவிலான சுரங்க அகழ்வு இலத்தீனமெரிக்காவெங்கும் 290 சமூகங்களை மிகப் பாரியளவில் பாதித்துள்ளது. சூழலியலாளர்களுக்கான பரிசாக வழங்கப்படும் கோல்ட்மன் பரிசை 2012 இல் வென்றவரான ஆர்ஜென்டீனாவின் சோபியா கடிசா (ளுழகயை புயவiஉய) பின்வருமாறு சொல்கிறார்: '2005 இல் நாங்கள் வாழும் பகுதி மக்கள் வாழ்வதற்குரியதல்ல எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், 2002 இல் அரசாங்கம் இப்பகுதியில் மக்கள் எப்போதும் தொடர்ந்து வசிக்க முடியும் என்ற உறுதிமொழியை வழங்கியது. நான் பிரசவித்த என் குழந்தை மூன்றாவது நாளிலேயே சிறுநீரகப் பாதிப்பினால் இறந்தது. இதைத் தொடர்ந்து என் சமூகத்திலேயே, பல்தேசியக் கம்பெனிகளின் இலாபவெறிக்கு நாங்கள் பலியாவதை உணர்ந்து கொண்டேன். என் போன்ற பல்லாயிரக்கணக்கான சாதார இலத்தீன் அமெரிக்கர்கள், அமெரிக்க பல்தேசியக் கம்பெனியின் நுகர்வு வெறிக்குப் பலியாகிறார்கள்.

விருது கிடைத்தவுடன் எங்களை அழைத்து வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மக்களை அவர்களது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழவிடும்படியும் கேட்டுக்கொண்டேன். சில மாதங்கள் கழித்து வெள்ளை மாளிகையில் இருந்து கடிதமொன்று வந்தது. அதில் 'வியாபார செயற்பாடுகளில் அமெரிக்க அரசு தலையிடுவதில்லை' என்று எழுதப்பட்டிருந்தது'.

கனிம வளங்களுக்காக நிலங்களைத் தோண்டும் செயற்பாடு 2002ஆம் ஆண்டளவுடன் ஒப்பிடும் போது பத்துமடங்கு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய செப்பு ஏற்றுமதியாளராகிய சிலியில், செப்புச் சுரங்க அகழ்வுடன் தொடர்புடைய தொழில்துறையில் வேலைபார்ப்பவர்கள் மொத்த சிலியின் உழைக்கும் தொழிலாளர் அளவில் 1 சதவீதம் மட்டுமே. குறைவான தொழிலாளர்களைக் கொண்டு மோசமான நிலைமைகளின் கீழ் அவர்கள் வேலைக்கமர்த்

தப்பட்டுள்ளனர்.

சிலியின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதம், சுரங்க அகழ்வுகளுக்காக பல்தேசியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சிலியின் மொத்த மின்சாரத் தேவையில் 38 சதவீதம் சுரங்க அகழ்வுகளுக்காகவே வழங்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது 50சதவீதம் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மானிய அடிப்படையில் குறைந்த விலையில் மின்சாரத்தை சிலிய அரசாங்கம் வழங்குகிறது. ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதே கதைதான்.

தங்கள் வாழ்விடங்களை விட்டு பழங்குடி மக்கள் விரட்டப்படுகிறார்கள். ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்துவந்த நிலங்கள், அவர்கட்கு சொந்தமானவையல்ல என அரசுகள் அறிவிக்கின்றன. தனியார் கம்பெனிகளுக்கு பயிர்ச் செய்கைக்காகவும் நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளவும் இந்நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள், அதிகரித்துவரும் எண்ணெய் விலைகள், விரைவில் முடியக்கூடிய வளமாக எண்ணெய் இருக்கின்றமை, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எதிர்பாராத காலநிலை மாற்றங்களாலான வரட்சி, வெள்ளப்பெருக்கு என்பவற்றின் பாதிப்புக்கள் போன்ற காரணிகள் தவிர்க்கவியலாமல் நிலப்பறிப்புக்கு வழிகோலுகின்றன.

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, பல்தேசியக் கம்பெனிகளினது இலாபங்களைக் ஓரளவு குறைத்துள்ளது. எனவே, சர்வதேசச் சந்தையை நம்பியிராமல் பல்தேசியக் கம்பெனிகள் நேரடியாக விவசாய உற்பத்தியில் இறங்கியுள்ளன. அதனால் விவசாயத்துக்காக மூன்றாமுலக நாடுகளில் நிலங்களை குத்தகைக்கு எடுப்பது அவர்களின் புதிய தந்திரமாயுள்ளது. இதற்குப் பலியாவது இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்களே.

எண்ணெயின் முடிவுறும் தன்மையும் அதன் விலை அதிகரிப்பும், புதிய சக்தி மூலங்கட்கான தேவையை முன்னெப்போதுமில்லாதளவுக்கு முதன்மைப்படுத்தியுள்ளன. இதன் ஓர் அம்சமாக 'வேளாண் எரிபொருட்கள்' (யபசழகரநடள) மீது கவனம் திரும்பியுள்ளது. பாம் எண்ணெய், சோயா, கரும்பு போன்றவற்றிலிருந்து திரவ எரிபொருட்களை உருவாக்கி அதிலிருந்து போக்குவரத்துக்காகவும் கைத்தொழில் துறைக்கான எரிபொருட்தேவையை நிறைவுசெய்வது புதிய வழிமுறையாகவுள்ளது. இது சுத்தமான, வலுச்சிக்கனமான முறை என்று பிரசாரம் செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை, உலகநாடுகளெங்கும் அந்தத் தவறான கதையைப் பரப்புகின்றன. இதற்காக துரத்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களில் சோயா, கரும்பு போன்றன விளைவிப்பதற்கு இந்நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் 1980 இல் 1.37 மில்லியன் ஹெக்டேயரில் 1.58 மில்லியன் தொன் சோயா உற்பத்தி செய்யப்பட்டது. சோயா முக்கியமான பயிர்ச்செய்கையாக இருக்கவில்லை. இப்போது இந்நான்கு நாடுகளிலும் 45 மில்லியன் ஹெக்டேயரில் 130 மில்லியன் தொன்னுக்கும் அதிகமான சோயா உற்பத்தியாக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை வேளாண் எரிபொருள் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகிறது.

இன்று, இலத்தீன் அமெரிக்காவெங்கும் நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமான குறிகாட்டிகள். இவை மூன்றாமுலக நாடுகளில் இனி நடக்கக் கூடியவையை எமக்கு முன்கூட்டியே எடுத்தியம்புகின்றன. அரசுகள் எவ்வாறு தன் மக்களைச் சொந்த இடங்களில் இருந்து துரத்தி அவற்றை தனியார் பல்தேசியக் கம்பெனிகளுக்கு வழங்குகின்றன என்பதையும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களை எவ்வாறு இராணுவத்தின் உதவியுடன் வன்முறையாக அடக்குகின்றன என்பதை இன்றைய இலத்தீனமெரிக்கா எங்கும் காணலாம்.

மிக நீண்டகாலமாக அமெரிக்காவின் கொல்லைப்புறமாக இருந்து இலத்தீன் அமெரிக்கா  இப்போது அம்மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். அமெரிக்கா தன் கொல்லைப்புறத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. ஆனால், இலத்தீனமெரிக்காவோ வேகமாக மாறிவருகிறது.

ஐரோப்பியர்கள் ஆதிவாசிகளாகக் குகைகளுக்குள் இருந்த காலத்திலேயே நாகரிகத்தின் உச்சங்களைத் தொட்டவர்கள் மாய, இன்கா, அஸ்டெக் போன்ற இனக் குழுக்களைச் சேர்ந்த இலத்தீன் அமெரிக்கப் பூர்வகுடியினர். இன்று அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்கப் பழங்குடிகள் தங்கள் உரிமைகளை மெதுமெதுவாக வென்றெடுக்கிறார்கள்.    

இன்று முழு இலத்தீன் அமெரிக்காவிலும் மக்கள் தொடர்ச்சியாக போராடுகிறார்கள். பாதைகளை மறிக்கிறார்கள். சுரங்க தொழிலாளர்களுடன் ஜக்கிய முன்ணணியைக் கட்டியெழுப்புகிறார்கள். பல இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இராணுவ அடக்குமுறையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

நிலங்களும் வளங்களும் தொடர்ச்சியாகச் சூறையாடப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகியுள்ள ஒரு சசதவீதம்கம் வேறெதனைச் செய்ய இயலும். மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .