Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
காரை துர்க்கா / 2017 ஜூன் 14 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தெற்குப் பகுதியின்மீது, சமீபத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய பாரிய இழப்புகளின் அதிர்வு அலைகளும் கவலைகளும் இன்னமும் தொடர்ந்தவாறே உள்ளன.
பொதுவாக அனர்த்தங்கள் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவது, இயற்கையாக நிகழ்வது; இயற்கையின் நியதி. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.
இரண்டாவது மனிதனால் ஏற்படுத்தப்படுவது. மனித சக்தியினால் ஓட்டு மொத்தமாகத் தடுத்து நிறுத்தக் கூடியது. நம் நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகிய தமிழ் இனம், கடந்த காலங்களில் இரண்டாவது வகையான அனர்த்தத்தில் சிக்கிச் சிதறி பல ஆயிரம் மேன்மையான உயிர்களைக் காவு கொடுத்து விட்டது.
மேலும், அந்த அழிவைத் தடுத்து நிறுத்தக் கூடிய பூரண சர்வ வல்லமை, தெற்கு உறவுகளுக்கு இருந்தது. ஆனாலும், பயங்கரவாதம் ஒழிந்து சமாதானப் பிறப்பு என்ற பெரும் வார்த்தை ஜாலங்களினால் அந்த மரணங்கள் மலிவாகக் கருதப்பட்டு விட்டன போலும்.
அந்த வகையில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் காண, நூறு நாட்களைக் கடந்து, தமிழர் பிரதேசங்களில், தெருவில் இருந்து போராடி வருகின்றார்கள்.
பெற்றோர் மற்றும் உறவுகளின் முன்னால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன், “அம்மா! அம்மா!” என்று அன்பாக ஆசையாகக் கூவி அழைத்தபடி வருவானா? அவனை அணைத்து அன்பு முத்தம் கொடுக்கலாமா? என ஏங்கித் தவிக்கின்றனர் அவர்களின் உறவுகள். அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்ற பெரும் ஏக்கத்தில் பசி மறந்து போனார்கள். தூக்கத்தை துறந்து விட்டு துக்கத்தை மட்டுமே அணிந்து கொண்டுள்ளார்கள்.
அவர்கள் எண்ணம், சிந்தனை, நினைவுகள் எல்லாமே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியதாகவே இருக்கின்றது. தற்போதைய இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தில் காணாமல் போனவர்கள் என சிலரது எண்ணிக்கைகள் செய்திகளாக ஊடகங்களில் வெளிவருகின்றன.
தமிழர் பிரதேசங்களிலும் ஏன் தலைநகரிலும் ஆயிரம் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். மேலும் நந்திக்கடல், வட்டுவாகல், ஓமந்தை என பல இடங்களில் படையினரிடம் பத்திரமாக கையளிக்கப்பட்டவர்கள். அந்த உறவுகளையே மீளக் கையளிக்குமாறு, கையளித்தவர்கள் தொடர்ச்சியாகக் கேட்டுப் போராடுகின்றனர்.
தற்போது அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் போட்டி போட்டவாறு பல பொருட்களைத் தங்களது பெரும் போர்க் கப்பல்களில் அனுப்பி வைக்கின்றன. தங்கள் நாட்டு மருத்துவ அணிகளை அனுப்பி வைக்கின்றன.
ஆனால், வடக்கு - கிழக்கு பகுதிகளில் பெரும் அழிவு யுத்தம் நடைபெற்ற போது, அதே நாடுகள் பல கப்பல்களில் அழிவைத் தரும் ஆயுதங்களை அல்லவா அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவிக்கின்றது. அதே ஐக்கிய நாடுகள் சபை முள்ளிவாய்க்காலில் ஏதுமறியா பல அப்பாவிகள் மூச்சு திணறிய போது, மூச்சு அடங்கிய போது மௌனம் ஆகி விட்டார்களே? மேலும் யுத்தம் நடைபெற்ற போது, ஐக்கிய நாடுகள் சபை தூங்காமல் விழித்திருந்தால் பல ஆயிரம் உறவுகள் நிரந்தரமாகத் துயில் கொள்வதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறிவிட்டார்கள்.
பாரிய பொறுப்புகளைத் தாங்கிய இவர்கள், பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்தாமல், தாம் மட்டும் யுத்த வலயத்தை விட்டுப் பத்திரமாக 2008 இல் உடமைகளுடன் சென்று விட்டார்கள். செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைபட்டு வெளியேறுவது தடைப்பட்டு இருந்தபோது கூட ஆகாயத்தில் இருந்தவாறே பார்த்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே எனத் தெரியாது என கூறுகின்றார் வடக்கு ஆளுநர். யாருடன் கதைத்தாலும் இதுதான் பதிலாம். அவை தொடர்பாக அரசாங்கத்திடம் மட்டும் கேள்வி கேட்பது நியாயம் அற்றதாம். அரசாங்க படையினரிடம் ஒப்படைத்த மகனை அரசாங்கத்திடம் தானே கேட்க வேண்டும்; கேட்க முடியும். வேறு யாரிடம் கேட்பது? கொடிய வலியில் வாடுவோருக்கும் வதைபடுவோருக்கும் மட்டுமே வலியின் கோர முகங்கள் அதன் பக்கங்கள் தெரியும்; புரியும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையோடு ஆளுநர் காரியாலத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தினார். அவர் அதில் இன்னொரு விடயத்தையும் கூறினார்.
வடக்கு மாதிரி இல்லாமல் தெற்கில் யாரும் தாங்கள் விரும்பியபடி விகாரையோ கோவிலோ பள்ளிவாசலோ கட்டலாமாம். அங்கே எந்தத் தடையும் இல்லையாம். ஒரு பௌத்தரும் இல்லாத மாங்குளம் சந்தியில் ஏன் பெரிய விகாரை? கனகராயன் குளத்தில் தமிழ் மகனின் குடியிருப்பு வளவில் ஏன் விகாரை.? ஒரு சிங்களவரும் முன்னர் வசிக்காத நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபை காணியில் அவர்களுக்கு வீடு. இப்போது பல கோடி ரூபாவில் பௌத்த தாது கோபுரம். இப்படியான விகாரைகள் ஏன் முளைக்கின்றன என்று கேட்டுத் தானே தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். கன்னியா வெந்நீர் ஊற்று வரலாற்றையே மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுடன் தமிழ் மொழியில் பேசும் சிங்கள அரசாங்க அதிகாரியாக ஆளுநர் இத்தருணத்தில் இவ்வாறு பேசுவது பனையால் விழுந்தவனை மாடு மிதித்தது போல அல்லவா உள்ளது.
அரசாங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட சுற்றறிக்கையைக் கூட கருத்தில் கொள்ளாமல் பணியாற்றுமாறு அரச தலைவர் பணித்துள்ளார். மேலும் தற்போது வீடுகளை இழந்த மக்களுக்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு கிடைக்க இருக்கின்றது. வடக்கு - கிழக்கு வீட்டுத்திட்டத்தில் 5 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம். 8 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம். மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடு என்ற பொருந்தாத வீடு என்ற பல்வேறு குழப்பங்கள். தமிழ் மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் அவர்களது வீட்டுத் திட்ட நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில் இரு தடவைகள் பதவி வகித்த முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா அம்மையார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றார். பெண்களின் மனதை பெண்களால் மட்டுமே சிறப்பாக அறியலாம் எனக் கூறுவது உண்டு. ஆனால் என்னவோ தெரியவில்லை, அந்த அம்மா கூட இப்படிக் கூறுகின்றார். சில அமைச்சர்களும் தாம் விரும்பியவாறு கருத்துக் கூறுகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் பெரும் பொறுப்புள்ள ஒரு நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு இதுவரை பொறுப்பாக நடக்கவில்லை. ஆகையால் யாரும் பொறுப்பற்ற விதத்தில் கதைக்கலாம் என ஆகிவிட்டது.
கடந்த அரசாங்கம் நடப்பு அரசாங்கம் இனி வரும் அரசாங்கம் என அனைவருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையை காணாமல் ஆக்கவே முயற்சி செய்வார்களோ எனப் பாதிக்கப்பட்டவர்கள் பயப்படுகின்றனர். இது அவர்கள் கடந்து வந்த பல தசாப்த கால கசப்பான அரசியல் பாதை.
சில அம்மாக்கள், தமது மூன்று ஆண் மக்களில் இரண்டு ஆண் மகன்மாரைப் பறி கொடுத்து விட்டுப் பரிதவிக்கின்றனர். அவர்களது வேதனை தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார் எனக் கருதக் கூடாது. மாறாக அவர்களது இந்த அவல ஓலத்தை ஒட்டு மொத்த தேசமும் கேட்க வேண்டும். ஏன் அவர்களுக்கு இவ்வாறான அவலம் ஏற்பட்டது எனச் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தோற்றுப் போன சமூகம் எனத் தொடர்ந்தும் பார்க்கக் கூடாது. போரால் நொந்து போனவர்களைத் தேற்றக் கூடிய ஆக்கபூர்வமான பயனுறுதிமிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
கடும் கோடை மற்றும் வரட்சிக் காலங்களில் நீரேந்து பிரதேசங்களில் நீர் நிலைகளில் நீர் வற்றுவது இயற்கை. வடக்கு- கிழக்கு பிரதேசங்களிலும் உண்மையான காலநிலை நிலைவரமும் அவ்வாறே உள்ளது. அது போலவே, தமிழ் மக்களது கண்களிலும் அழுது அழுது கண்ணீர் வற்றி விட்டது. கண்ணீரின் (கை) இருப்புக் கூட கரைந்து விட்டது. கண்கள் இதயம் என அனைத்தும் வரண்டு விட்டன. உயிர் இருந்தும் நடைப்பிணமாக வாழ்கின்றனர்; அலைகின்றனர்.
தம் பிள்ளைகளை உறவுகளை அரசாங்கத்தின் படைகளிடம் ஒப்படைத்தவர்கள். அது மாதிரி தாங்கள் வாழ்வதையும் மடிவதையும் நல்லாட்சி அரசின் கரங்களில் ஒப்படைத்துள்ளார்கள். இது மறுக்க மறைக்க முடியாத உண்மை.
ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுக்கு ஓடி ஓடி இரவு பகல் பாராமல் உதவி செய்கின்றது அரசாங்கம். ஆனால் அந்த அரசாங்கம், பாதிக்கப்பட்ட இன்னொரு பகுதி மக்களை நூறு நாட்கள் கடந்தும் துயர் துடைக்க அவர்களை நாடி வரவில்லை. இதனால் அவர்கள் ஆற்றொனாத் துயர் அடைகின்றார்கள்; அழுது புலம்புகின்றார்கள். யாரும் அற்ற ஏதிலிகள் ஆக்கப்பட்டுள்ளோம் என உணர்கின்றார்கள்.
ஆகவே, அந்த நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். ஜனாதிபதியின் யாழ். வருகை அதற்கு அடித்தளம் இட வேண்டும். வெறும் சந்திப்பாகப் பத்தோடு பதினொன்றாக அமையக“ கூடாது. தொடர்ந்து வெறுமையிலும் வறுமையிலும் கொடுமையிலும் வாடுபவர்கள் வாழ்வில் பெருமை சேர்க்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
சாதுரியமாகவும் மிகத் துணிச்சலோடும் இயங்க வேண்டும். அப்படிச் செயற்படும்போதே குறித்த தரப்பு மக்களைக் காப்பாற்ற முடியும். அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
தற்போதைய நிலையில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மிகப் பகிரங்கமாக சிங்களச் சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஏனைய இனங்களின் மீது விரிவடைவதற்கு காலம் செல்லாது. உரிய காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வும், பல்லினத்தன்மைக்கான இடமும் ஜனநாயக மறுசீரமைப்பும் பொருளாதார மேம்பாடும் ஏற்படவில்லை என்றால் மிகக் கடிமான ஒரு நிலைக்கு அனைத்துத் தரப்பினரும் உள்ளாக வேண்டியிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago