Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முகம்மது தம்பி மரைக்கார்
நேர்மையான உழைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப்படாத எதுவும் நமக்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. ஆனால், பணத்தைத் தேடிக்கொள்வதற்காக நம்மில் அதிகமானோர் நேர்மையினை இழந்து விடுகிறோம்.
அதனால், எங்கும் ஊழல் மலிந்து போய்க்கிடக்கிறது. பொதுச் சொத்துகளை அபகரித்தல், பொதுப் பணத்தை முறைகேடு செய்தல் மற்றும் அதிகாரத்தினைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றினை ஊழல் என அடையாளப்படுத்த முடியும். ஊழல்களில் அதிகமானவை, அரச துறையில் நிகழ்கின்றன என்பதுதான் அருவருப்பான உண்மையாகும்.
உலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இன்டர்நெஷனல் ட்ரான்ஸ்பேரன்சி இதனை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் 2016ஆம் ஆண்டுக்குரியதாகும். 176 நாடுகளைக்கொண்ட இந்தப் பட்டியலில், இலங்கைக்கு 95ஆவது இடம் கிடைத்துள்ளது. இது கவலைக்குரியதொரு தகவலாகும். அதுவும் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவ்வாறானதொரு நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருப்பது முரண் நகையானதொரு விடயமாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நிலவிய 2014ஆம் ஆண்டு, ஊழல் பட்டியலில் 85ஆவது இடத்திலிருந்த இலங்கை, நல்லாட்சியில் 95ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில், நல்லாட்சியாளர்களை மஹிந்த தரப்பு கேலி செய்கிறது. ஆட்சி மாற்றத்துக்குத் தோள் கொடுத்த அனைவரின் முகத்திலும் இந்தத் தகவல் கரியைப் பூசியிருக்கிறது.
ஊழல் எங்குமிருக்கிறது. ஊழல் இருக்குமிடத்தில் நேர்மை இருக்காது. நேர்மை இல்லாத இடத்தில் கீழ்மைத்தனங்கள் எல்லாம் குடிகொண்டிருக்கும்.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு, அரசாங்கம் நிதியினை வழங்குகின்றது. மாணவரொருவருக்கு 25 ரூபாய் பெறுமதியான உணவு வழங்கப்படுதல் வேண்டும்.
இன்றைய நிலையில், மாணவர்களின் மதிய போசனத்தில், மிக மோசமான ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாடசாலை மாணவர்களுக்கு மேற்படி மதிய உணவினை வழங்கும் பொறுப்பு - அந்தப் பகுதியிலுள்ள சமுர்த்தி உதவி பெறும் நபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறானவர்களில் கணிசமானோர் உரிய தொகைக்குப் பெறுமதியான உணவினை வழங்குவதில்லை. இன்னொருபுறம், உணவு விநியோகிப்பவர்களிடம் சில பாடசாலைகளின் அதிபர்கள் ஒவ்வொரு மாதமும் பெருந் தொகைப் பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொள்கின்றனர்.
இதனாலும், குறிக்கப்பட்ட தொகைக்குரிய உணவு - மாணவர்களைச் சென்றடைவதில்லை. மாணவர்களின் மதிய போசனத்தில் இவ்வாறு சுரண்டப்படும் தொகையானது கல்வி அதிகாரிகளையும் சென்றடைகின்றன.
இதனால், இவ்விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் பெரும்பாலும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
சில மாணவர்களுக்கு பாடசாலைகளில் இவ்வாறு வழங்கப்படும் உணவுதான் காலை ஆகாரமாகும். வீட்டில் காலையுணவாக உண்பதற்கு எதுவுமற்ற நிலையில் - பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு, அங்கு வழங்கப்படும் உணவு - பெரும் ஆறுதலாகும். ஆனால், அவ்வாறு வழங்கப்படும் உணவிலேயே கை வைக்கும் அயோக்கியத்தனத்தினை மன்னிக்க முடியாது.
ஆனாலும், கணிசமான பாடசாலைகளில், இந்த மதிய உணவு மோசடி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சில பாடசாலைகளில், வருகை தராத மாணவர்களையும், பாடசாலைக்கு வந்ததாக வரவுக் குறிப்பேட்டில் பதிகின்றார்கள்.
வருகை தராத மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கியதாகக் குறித்துக் கொள்கிறார்கள். அதற்காகப் பெறுகின்ற பணத்தினை, பாடசாலை அதிபர்கள் சுருட்டிக் கொள்கின்றார்கள்.
இன்ரநெஷனல் ட்ரான்ஸ்பேரன்சி வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான மேற்படி பட்டியலில், ஊழல் மலிந்துள்ள மிக மோசமான நாடாக சோமாலியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் வட சூடானும் அதற்கடுத்த நிலையில் வட கொரியாவும் உள்ளது. இலங்கை பெற்றுள்ள 95ஆவது இடத்தினை, மேலும் 5 நாடுகளும் பெற்றுள்ளன. ஆஜன்டீனா, பெனின், எல் சல்வடேர், கொசோவோ மற்றும் மாலைதீவு ஆகியவைதான் அந்த ஐந்து நாடுகளுமாகும்.
ஊழல் நடைபெறுவதற்கு, இலஞ்சம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. இலங்கையில், இலஞ்சம் மிக அதிகமாகப் புழக்கத்திலுள்ள அரச துறைகளில், பொலிஸ் திணைக்களம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் பொறுப்பாகவுள்ள பொலிஸார்தான், இலஞ்சம் பெற்றுக் கொள்கின்றவர்களில் முன்னிலையில் உள்ளார்கள் என்பது, எவ்வளவு வெட்கக்கேடானது. இலஞ்சம் பெற்றுக் கொள்கின்றவர்களிடத்தில் வெட்கம், சுயமரியாதை ஆகியவற்றினை எதிர்பார்க்க முடியாது.
எவ்வாறாயினும், பொலிஸாரை விடவும் கல்வித்துறையினரே இலஞ்சம் பெறுவதில் முன்னிலையில் உள்ளதாக, கடந்த வருடம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது, இலங்கையில் கல்வியோடு தொடர்புபட்டவர்களும் குற்றங்களைத் தடுப்பதற்குப் பொறுப்பாக உள்ளவர்களும்தான், இலஞ்சம் என்கிற குற்றச்செயலை அதிகம் புரிகின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இது மிக மோசமான நிலைவரமாகும்.
அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வது, சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றாமை ஆகியவற்றினூடாகவும் ஊழல்கள் இடம்பெறுகின்றன. அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வினை இந்த இடத்தில் பதிவு செய்தல் பொருத்தமாகும்.
குறித்த பாடசாலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆங்கில மொழி மூலம் கற்பதற்கு, வரையறுக்கப்பட்ட மாணவர்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், ஒரு தகுதிகாண் பரீட்சை மூலம் ஆங்கில மொழி மூலம் கற்பதற்கான மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வேறு பாடசாலையொன்றில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், சம்பந்தப்பட்ட பாடசாலையில், ஆங்கில மொழி மூலம் கற்பதற்காகச் சென்றார். பாடசாலை அனுமதிக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒரு பரீட்சை நடத்தப்பட்டது.
அந்தப் பரீட்சையில் குறிப்பிட்ட மாணவர், 84 புள்ளிகளைப் பெற்று 9 ஆவது இடத்துக்கு வந்தார். அந்த மாணவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், 74 புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 74 புள்ளிகளைப் பெற்ற மாணவன், அதிபருடைய நண்பரின் உறவினர் எனக் கூறப்படுகிறது.
இப்போது, இந்த விவகாரம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் முறையிடவுள்ளதாக அறிய முடிகிறது. ஊழல்கள் இவ்வாறு பல வடிவங்களில் இடம்பெறுகின்றன.
இன்ரநெஷனல் ட்ரான்ஸ்பேரன்சி வெளியிட்டுள்ள பட்டியலில், 2016ஆம் ஆண்டு ஊழல்களற்ற அல்லது மிகக் குறைந்த முதல் நாடு என்கிற அந்தஸ்தை, டென்மார்க் பெற்றுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, இந்த இடம் டென்மார்க் நாட்டுக்குக் கிடைத்து வருகிறது. இதனால்தானோ என்னவோ, உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் 2016ஆம் ஆண்டு டென்மார்க் முதலிடத்தைப் பிடித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் ‘நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலையமைப்பு’ நடத்திய ஆய்வொன்றினூடாக, மேற்படி தகவல் வெளியிடப்பட்டது. ஊழல் மிகுந்த இடத்தில் நேர்மை இருக்காது என்று, மேலே ஒரு பந்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அப்படியாயின் நேர்மையிருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது எனப் புரிந்துகொள்ள முடியும். நேர்மையிருக்கும் இடத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும் என்பதற்கு, டென்மார்க் ஓர் உதாரணமாகும். உலகில், அமைதியான நாடுகளின் பட்டியலிலும் டென்மார்க் நாட்டுக்கு பிரதான இடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றமை குறித்து நாம் அறிவோம். உதவிகளைப் பெறுகின்ற அமைப்புகள், எந்தத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ, அந்த திணைக்களக் காரியாலயங்களினூடாக, மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கிய பணத்துக்குரிய உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படும். இந்த நடைமுறையினூடாகவும், கணிசமானளவு ஊழல் நடைபெற்று வருகின்றமை தொடர்பில் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மக்கள் பிரதிநிதியொருவரால் பாடசாலையொன்றுக்கு போட்டோ கொப்பி இயந்திரமொன்றினை வழங்குமாறு ஒரு தொகை நிதி ஒதுக்கப்பட்டது. பாடசாலை அமைந்துள்ள பகுதிக்குரிய பிரதேச செயலகத்தினூடாக, குறித்த போட்டோ கொப்பி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட பணத்துக்குரிய பெறுமதிக்கும் குறைவான சந்தைப் பெறுமதியுடையதாக மேற்படி போட்டோ கொப்பி இயந்திரம் இருந்தது. இது குறித்து, குறித்த இயந்திரத்தினை வழங்கிய வியாபார நிறுவனத்தினரிடம் வினவினோம். பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஒரு தொகைப் பணம் வழங்க வேண்டியிருந்ததால், பெறுமதி குறைந்த இயந்திரத்தினை வழங்க வேண்டியேற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறான செயற்பாடுகள் அநேகமான பிரதேச செயலகங்களிலும், திணைக்கள அலுவலகங்களிலும் இடம்பெறுகின்றன. மக்கள் பிரதிநிதிகளின் நிதியொதுக்கீட்டில் உதவிகள் வழங்கப்படும் போது, பிரதேச செயலக மட்டங்களிலுள்ள அதிகாரிகள், கணிசமானளவு கொமிஷன் பெற்றுக்கொண்டு, தங்கள் சட்டைப் பைகளை நிறைத்துக் கொள்கின்றனர்.
அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலுள்ளவர்களில் கணிசமானோர் இவ்வாறான ஊழல்களை அதிகம் மேற்கொள்வதால், யார் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்கிற குழப்பம் உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 வாகனங்களை, கடந்த ஆட்சியில் அமைச்சராகவிருந்த விமல் வீரசன்ச - தனது உறவினர்களுக்கும், கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கினார் எனக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றின் அனுமதி பெற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்திருந்தார். அதன்போது அவர் உரையாற்றுகையில், பலரின் பெயரைக் கூறி, அவர்கள் ஊழல்களை மேற்கொண்டதாகவும் அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்றும், சபையில் தெரிவித்தார்.
அதனைப் பார்த்தபோது, குழப்பமாக இருந்தது. ஊழல் என்பது ஒரு தொற்று நோய்போல் எங்கும் பரவிக் கிடப்பதனை அதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
இன்னொருபுறம், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்களும், மோசடிகளும் மிக அதிகமாக நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ராஜபக்ஷவினரை ஊழல் செய்தமைக்காகத் தண்டிப்போம் என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் அப்போது கூறினார்கள்.
ஆட்சியும் மாறியது. ஆனால், ஊழல் செய்ததாகக் கூறப்பட்ட ராஜபக்ஷவினர் தண்டிக்கப்படவில்லை. ராஜபக்ஷவினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனை ஆட்சியாளர்களில் சிலர்தான் தடுக்கின்றார்கள் என்கிற கதையும் பரவலாக உலவுகின்றது. இந்தக் கதை உண்மையாக இருக்குமானால், ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுகின்ற நடவடிக்கைதான் எல்லாவற்றிலும் மிகப்பெரும் ஊழலாக அமையும்.
பஸ் வண்டியில் பயணிப்பவர்களுக்கு அதன் நடத்துநர்கள் வழங்காமல் போகும் 50 சதம் 1 ரூபாயிலிருந்தே ஊழல் தொடங்குகிறது. அந்நியன் திரைப்படத்தில் சொல்லப்படுவது போல், ஊழல் மற்றும் இலஞ்சம் போன்றவற்றில் பெரியது - சிறியது என்றெல்லாம் அளவுகோல்கள் இருக்க முடியாது.
ஊழல்களைப் புரிகின்றவர்கள், கருணையின்றித் தண்டிக்கப்பட வேண்டும். நேர்மை அற்றவர்களுக்குக் காட்டப்படும் கருணை ஆபத்தானதாகும். நேர்மையை விடவும், ஊழலால் வெற்றிபெற முடியாது என்றார் வில்லியம் சேக்ஸ்பியர். அப்படிப்பார்த்தால், நாம் நேர்மையினை இழந்து கொண்டிருக்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .