Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. சமூகப் பெறுமானத்தை உடைய நிகழ்வுகளே கொண்டாடத் தகுந்தன.
தமிழர் வரலாற்றிலும் வாழ்வியலிலும் அந்தப் பெறுமானத்தைக் கொண்டது தைப்பொங்கல். அதனாலேயே அது இன்னமும் உயிர்ப்புடனும் உணர்வுடனும் கொண்டாடப்படுகிறது.
நினைவுகூர்வது என்பது கொஞ்சம் சிக்கலானது. அதன் சமூகப் பெறுமானத்தின் தன்மை குறித்தொதுக்க இயலாதது. ஆனால், யாரும் யாரையும் நினைவுகூர்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டியது, நம் அனைவரினதும் கடமை.
அடுத்த வாரம் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை, இலங்கையர்கள் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை இங்கு கேட்டுவைக்க விரும்புகிறேன். ‘இலங்கையின் சுதந்திரம் என்ன செய்தது’ என்ற கேள்விக்கு, வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக, உள்ளூர் முதலாளிகளை ஆட்சியில் இருத்தியதற்கு அப்பால், எதையும் செய்யவில்லை.
மூன்றாமுலக நாடுகள் பலவற்றின் சுதந்திர தினம், நினைவெழுச்சியோடு கொண்டாடப்படுகின்றது. அந்நாடுகளில் சுதந்திரம், கொலனியாதிக்கத்துக்கு எதிராக, வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களின் விளைவுகளால் சாத்தியமானது. எனவே, அம்மக்களின் உயிர்த்தியாகங்களினதும் போராட்டங்களினதும் குறியீடாக, சுதந்திர தினம் இருக்கிறது.
இலங்கையில் அவ்வாறான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெறவில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கியதைத் தொடர்ந்து, இந்தக் குட்டித் தீவைத் தொடர்ந்து வைத்திருப்பதில் பாரிய இலாபம் எதுவுமில்லை என்பதை பிரித்தானிய கொலனியாதிக்கவாதிகள் நன்கறிந்திருந்தார்கள். நம்பிக்கையான உள்ளுர் அடியாள்களிடம் ஆட்சியைக் கொடுத்தால், தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தவியலும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
‘சேர்’ பட்டத்துக்காய் தவம் கிடந்தோர் வரிசையாக இருந்ததால், விசுவாசமான அடியாள்களுக்குக் குறை இருக்கவில்லை. இதுதான் இலங்கையின் சுதந்திரத்தின் கதை.
இதில் கொண்டாட என்ன இருக்கிறது. ஓர் அடக்குமுறையாளரிடம் இருந்து இன்னோர் அடக்குமுறையாளருக்கு ஆட்சி கைமாறியதால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
இன்னமும் இலங்கை அரசியல், இந்த உயர்குடி ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியே தவிக்கிறது. ஒருபுறம் சிங்கள-பௌத்த தேசியவாதம், சுதந்திர தினத்தை ‘சுதேசிகளின் வெற்றியாக’ உருவகப்படுத்தினாலும் மேட்டுக்குடியினரே சுதந்திர இலங்கையில் ஆட்சிக்கு வந்தனர்; ஆட்சி செய்தனர்; செல்வம் ஈட்டினர்; சுகபோகங்களை அனுபவித்தனர். இதை நாம் கொண்டாட வேண்டுமா?
இலங்கையில், அந்நியர் ஆட்சிக்கெதிரான வீரம் செறிந்த போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கண்டி இராச்சியம், பிரித்தானியர் வசமானதைத் தொடர்ந்து, 1817-18ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரித்தானியர்களுக்கு எதிரான கலகமும் 1848ஆம் ஆண்டு, மாத்தளைக் கலகமும் இடம்பெற்றன.
இவை பிரித்தானிய ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் ஆகும். இவை நினைவுகூரப்படுவதில்லை; ஆனால், பிரித்தானியர்களின் நம்பிக்கைக்குரிய சேவகர்கள், தேச பிதாக்களாகவும் இன்ன பிறவாகவும் கொண்டாடப்படுகிறார்கள்.
இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றமும் புதிய முதலாளி வர்க்கத்தின் உருவாக்கமும் சாராய விற்பனையோடு தொடர்புபட்டது. பிரித்தானியர்களுக்கு சாராயம் காய்ச்சி, அதைக் கண்டிக்கும் இன்ன பிற பகுதிக்கும் கொண்டு செல்வதனூடு, செல்வம் சேர்த்தே இலங்கையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய உயர்குடி வர்க்கம் உருவானது. அவர்களே கொலனியாதிக்கத்தின் நம்பிக்கைக்குரியோராக இருந்தனர். அவர்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்ட நாளை, நாம் கொண்டாடுவதா அல்லது இலங்கையில் அந்நியர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களை நாம் நினைவுகூர்வதா.
இலங்கையின் வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். நாம் யாரைக் கொண்டாடுகிறோம், யாரை நினைவுகூர்கிறோம். இலங்கை வரலாற்றில் மக்களுக்குப் பணியாற்றிய, நல்லது செய்த, அந்நியரை எதிர்த்த அனைவரும் தூசி மறைத்துக் கிடக்கிறார்கள். இது இப்போதும் தொடர்கிறது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில், இலங்கையில் கொல்லப்பட்ட இந்தியப் படையினர் நினைவுகூரப்பட்டனர். அமைதியின் பெயரால் அமைதி காக்க வந்த அவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை யார் நினைவுகூர்வது. அவர்களோடு ஒட்டித் திரிந்தோரால் கொல்லப்பட்ட ஏதுமறியா இளைஞர்களை யார் நினைவுகூர்வது.
ஒரு நியாயத்தை ஆதரிக்கும் சொற்களும் செயல்களும் எல்லா நியாயங்களையும் ஆதரிக்கின்றன. ஒரு அநியாயத்தை ஆதரிக்கும் சொற்களும் செயல்களும் எல்லா அநியாயங்களையும் ஆதரிக்கின்றன. இதை நாம் மறக்கலாகாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago