2025 மே 08, வியாழக்கிழமை

எம்மை நினைத்து யாரும் கலங்க மாட்டார்கள்

காரை துர்க்கா   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தீவில் தமிழ் மக்களது வாழ்வும் வளமும் உயர்வான, உன்னதமான போற்றுவதற்குரிய நிலையில் இருந்தன.   

அவர்களது சீரும்சிறப்பும் மிக்க மேலோங்கிய ஒழுக்க விழுமியங்களும் சமுதாயக் கட்டமைப்புகளும் சிறப்பாக வழிப்படுத்தப்பட்டிருந்தன. கலாசாரங்களும் பண்பாடுகளும் ஒன்றிணைந்து, மேம்பட்ட சமூகமாகத் திகழ்ந்தார்கள்.    

இவற்றால் அவர்கள் பெருமைப்பட, நாட்டை ஆண்டவர்கள் பொறாமை கொண்டார்கள். இதனால், இரண்டு இன மக்களது இதயங்களுக்கு இடையில், பகைமை குடிகொள்ளத் தொடங்கியது; அன்பு முடிவுக்கு வந்தது; போர் ஆரம்பித்தது; தமிழ் மக்களது இருப்பு அணைந்தது; தற்போது அனைவராலும் ஏமாற்றப்பட்டு, ஏதிலிகளாக, ஏளனம் செய்யப்படும் பரிதாபகரமானநிலையில் வாழ்கின்றார்கள்.   

இவற்றுக்குப் பிரதான காரணம், தொடர்ச்சியாக நாட்டை ஆண்ட, ஆளும் பேரினவாத அரசாங்கங்களின் அராஜகப் போக்காகும். அடுத்து, இந்த நிலைக்குத் துணைக் காரணம், தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற போக்கு. இதனை, இந்த இரு தரப்பும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.   

இத்தகைய செல்நெறியின் நீட்சியாக, இந்த அவலநிலை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களது உயிரழிவுகளுக்குக் காரணமாகியது. அதற்குப் பின்னரும், இன்னமும் கொஞ்சமும் ஓயாது தொடருவது, கவலை பகிரும், மனதைப் பிளக்கும்; மானத்தை இழக்கும் விடயங்களாக உள்ளன.    

பேரினவாத ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையில், தமிழ் மக்களுடன் ஆட்சியதிகாரங்களைப் பகிர்வதில் எள்ளளவும் ஆர்வமும் இல்லை; விருப்பமும் இல்லை.   

ஆனால், உலகத்துக்காக ‘நல்லிணக்கம்’ என்றும் ‘ஒருமைப்பாடு’ என்றும் நாடகமும் அரங்கியலும் பாடம் கற்பித்து, அரங்கேற்றமும் செய்கின்றார்கள். வெற்றுக் கோ(வே)சம் போடுகின்றனர். தமிழ் மக்கள், நல்லிணக்கம் கை நழுவிச் செல்வதாகவே திடமாக நம்புகின்றனர்.   

மறுபுறத்தே தமிழ் மக்களை பெரும் ஆபத்திலிருந்தும் அழிவிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய தமிழ்த் தலைமைகள், ஆற்ற வேண்டிய காரியங்கள் பல இருக்க, வெற்றுப் பேச்சுகள் பேசி, வெட்டித்தனமாகக் காலத்தை ஓட்டுகின்றனர்.   

தமிழரசுக் கட்சியை தலைமைக் கட்சியாகக் கொண்டு இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களது தனிப் பெரும் கட்சி என்ற ஏகபோக உரிமையை இழந்து கொண்டிருக்கின்றது.   

தமிழ் மக்களது கோபத்தையும் வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் வேகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான அண்மைக் கால மதிப்பெண்களே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வீழ்ச்சிப் பெறுபேறு ஆகும்.   

“அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய தருணத்தில், கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு, சரிவைக் கண்டுள்ளது” என, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.   

கூட்டமைப்பு, தமிழ் மக்களது எண்ணங்களையும் விருப்பங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்காமல், பிரதிபலிக்காமல் தடம் மாறிப் பிழையான வழியில் பயணிப்பதாலேயே, கூட்டமைப்பு திசை மாறி செல்கிறது. ஆனால், தமிழ் மக்களது அரசியல் சிந்தனை, நேரான வழியிலேயே பயணிக்கின்றது.   

‘ஈழத்துக் காந்தி’ தந்தை செல்வநாயகத்தால் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கமைக்கப்பட்டது.   

இந்த இரு நிகழ்வுகளும், அக்கால கட்டத்தில், தட்டிக் கழிக்க முடியாத, கட்டாயக் கடமைகளாகக்  காணப்பட்டன. அதுவே கட்சி உருவாக்கத்துக்கு உறுதுணையானது; வேற்றுமைகள் களையப்பட்டன; ஒற்றுமை பேணப்பட்டது. தமிழ் மக்கள் ஓரணியில், ஒன்று திரள்வது வலியுறுத்தப்பட்டது.   

ஆனால், அவ்வாறாக உயர்ந்த கனவுகளுடன் உருவாகிய கூட்டமைப்பை, உருவாக்கியவர்களது மௌனத்துக்குப் பின்னர், கூட்டுக்குலையாமல் கூட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அதன் கடப்பாட்டில் இருந்து விலகி விட்டார்கள்.   

குறிப்பாகத் தமிழ் மக்களுக்குப் பல விடயங்களிலும் பொறுப்புக் கூற வேண்டிய சம்பந்தன், தமிழ் மக்களால் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இன்று, அவரால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் உள்ளது.   

 தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர்தான், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பல துண்டுகளாக உடைந்தது. ஈழத்தில் வடக்கு, கிழக்கில் சம்பந்தன் அவர்களது காலத்திலேயே, பல வருடங்களாகக் கட்டிக் காத்த கூட்டடைப்பின் ஒற்றுமை, ஒடிந்து வருகின்றது.   

கூட்டமைப்பின் தலைவர்களது தீர்க்கதரிசனமற்ற, அரசியல் சாணக்கியமற்ற, புரிந்துணர்வற்ற, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மையற்ற கடந்த காலச் செயற்பாடுகளே, இத்தகைய செல்வாக்கிழப்புக்கும் வீழ்ச்சிக்கும் பிரதான காரணங்கள் ஆகும்.   

குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாக, தமிழ் மக்களது மனங்கள் நோகடிக்கப்பட்டாலும் ஆட்சியாளர்களது மனங்களைச் சற்றும் நோகடிக்காத எதிர்க்கட்சியாக, பௌவியமாகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பவனி வருகின்றது.   

இவ்வாறாகக் கூட்டமைப்பினர், தெற்கில் ஆட்சியாளர்களுக்கு வலுவூட்டி, அவர்களைத் திருப்திப்படுத்த, அவர்களோ, வடக்கு - கிழக்கில் தமது கட்சிகளைத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து வருகின்றனர்.   

தமிழ் மக்கள், ‘தேசியம்’ என்ற உயர் எண்ணக்கருவில் மண்ணைப் போட்டவர்களுக்கு, தமிழ் மக்கள் வாக்குப் போடும் நிலைக்குக் கள நிலைவரங்கள் தலை கீழாகி விட்டன.  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு வாக்குப் போட்டனர்; யாழ். நூலகத்தை எரித்தவர்களுக்கு வாக்குப் போட்டனர்; தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகம் செய்தவர்களுக்கு வாக்குப் போட்டனர்; படையினருடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு வாக்குப் போட்டனர்.   

கூட்டமைப்பின் செயற்பாடுகளில், நம்பிக்கை, விசுவாசம் குறைந்தமையால், ஏனைய கட்சிகளின் வாசல் செல்ல வேண்டிய நிலை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.   

தம்மால் ஒதுக்கப்பட்ட கட்சிகளின் நிழலிலேயே, அவர்கள் ஒதுங்க வேண்டிய நிலை உருவாகியது. அவலத்துக்குள் தள்ளியவர்களிடம் ‘அபயம் தருவார்களோ’ என இடம் தேட வேண்டிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   

கூட்டமைப்பின் சின்னத்தில் ‘தும்புத்தடி’ போட்டியிட்டாலும் அது வெற்றி பெறும் என்ற எண்ணத்துக்கு, மக்கள் தும்புத்தடியால் அடித்தது போன்றதே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு அமைந்துள்ளன.   

ஒட்டுக்குழு என்றும் காட்டிக் கொடுத்தோர் என்றும் இணக்க அரசியல் செய்பவர்கள் என்றும் அன்று கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் பிரசாரம்   செய்தார்கள்; நையாண்டி செய்தார்கள்.   

ஆனால் இன்று, அவர்களுடன் இணைந்து, ‘தமிழ் மக்களுக்காக’ இணக்க அரசியல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் வீடு தேடிச் சென்று, ஆதரவு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.   

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியிடம் (ஈ.பி.டி.பி) ஆதரவு கோரிய விடயத்தை கூட, அப்படியே அமுக்குவதற்குத்தான் முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஈ.பி.டி.பி உண்மையை உடைத்தது. அதன் பின்னரே “ஆதரவு கேட்டது உண்மையே” என உலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.   

ஈ.பி.டி.பி மற்றும் தெற்கின் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கூட்டமைப்பு ஆட்சி அமைத்தால், பிரச்சினை எதுவும் இல்லை. அது அரசியல் காய் நகர்த்தல்; ஆனால், அதே அணியினருடன் இணைந்து, வவுனியா நகர சபையில் ஆட்சி அமைத்தால், அநீதி இடம்பெற்றுவிட்டதாகக் கதறுகிறார்கள்.   

அரசியல் அரங்கத்தில் நல்ல நோக்கம் கொண்டவர்கள் அல்ல; தவறானவர்கள் எனக் கூட்டமைப்பினரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள், மீண்டும் அரசியல் அரங்குக்குள் வந்துள்ளார்கள். கூட்டமைப்பினரே அவர்களுக்கான வாசல் கதவை அகலத் திறந்து விட்டுள்ளார்கள்.   

 தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவு அணி மற்றும் எதிரான அணி என இரு அணிகளுக்கு இடையிலான யுத்தம் போலவே, தமிழர் பிரதேசங்களில் இதுவரை காலமும் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் காட்சிகள் விரிந்து காணப்பட்டன. அவை அனைத்திலும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவு அணியே வெற்றியை மறு பேச்சின்றி அள்ளிச் சென்றது.   

தமிழ் மக்களது அரவணைப்பு, அறுந்ததாலேயே கூட்டமைப்பு ஆட்சி அமைக்க மாற்றாரிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் பலமாக இருந்த கூட்டமைப்பு, நல்லாட்சிக் காலத்தில் நலிவடைந்து வருகின்றது.   

இதுவே ரணிலின் இராஜதந்திரம். அமைச்சர் மனோ கணேசன் கூறியது போல, “தமிழ் மக்கள், பலமான பேரம் பேசும் சக்தியாக ஐக்கியப்பட, ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்காது” என்பது முற்றிலும் உண்மையே.   
தனிக்கட்சி ஆதிக்கம், அதிலும் தனிநபர் ஆதிக்கம், மாற்றுக் கருத்துகளை மதிக்காமை, தாங்கள் செய்வது, சொல்லுவது மட்டும் சரியானது போன்ற பல காரணங்களால், தமிழ்க் கட்சிகளது ஒற்றுமை ஓரங்கட்டப்பட்டு வருகின்றது.   

பொறுப்புள்ள அரசியல்வாதிகளின் விளையாட்டுத்தனமான செயற்பாடுகள், தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளித்தள்ளி விடுகின்றன. ஆபத்தான சமுத்திரத்தில், துடுப்பு முறிந்துவிட்ட படகில், தமிழ் மக்கள் பயணிக்கின்றனர். எம்மை நினைத்து யாரும் கலங்க மாட்டார்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X