2025 ஜூலை 16, புதன்கிழமை

எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற விருட்சத்தை வேரறுத்தது யார்?

R.Tharaniya   / 2025 ஜூலை 15 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் பற்றிய உண்மை இதுவரை வெளிக் கொணரப்படவில்லை. 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16 இல் இடம்பெற்றது.

உண்மையிலேயே ஒரு ஹெலிகொப்டர் விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகங்கள் 25 வருடங்களாக நீண்டுகொண்டே இருக்கின்றன. 

எம்.எச்.எம். அஷ்ரப் தனி மனிதரல்ல. வெறுமனே பத்தோடு பதினொன்றாவதாக அரசியல் பரப்பில் காலத்தைக் கழித்துவிட்டுப் போனவரும் அல்ல. அவர் ஒரு பிரதான அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவனும் ஆவார் என்பதை அவரது அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அஷ்ரபின் மரணம் தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு விசாரணைக் குழவை நியமித்தார். அது தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

ஆனால், உண்மை வெளியில் கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம் இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதிகூட சுவடிகள் திணைக்களத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை.

இதுபோல, இன்னும் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இது ஒரு சதித்திட்டமா?, பல தரப்பினர் ஒன்றிணைந்து அஷ்ரபை கொலை செய்தார்களா? பின்னர் இன்னுமொரு தரப்பு  இதனை மூடி மறைத்ததா? என்ற கேள்விகளுக்கும் இன்றும் விடையில்லை.

அஷ்ரபின் மூலம் அரசியல் பலன் பெற்ற சந்திரிகா அம்மையாhர் இந்த உண்மையை கண்டறிந்து முஸ்லிம் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்யாமல் நிறுத்திக் கொண்டதாகவே தெரிகின்றது. அஷ்ரபின் மறைவுக்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டுத் தலைவர்களாக வந்தவர்களுள் ஒருவர் என்ற வகையிலும் தலைவரின் மனைவி என்ற வகையிலும் பேரியல் அஷ்ரப் இதற்காக முன்னின்றிருக்க வேண்டும்.

அவரும் ‘‘தலைவர் போய்விட்டார்தானே இனி என்ன செய்ய முடியும்” என்ற தோரணையிலும் என்றும், “விசாரணை அறிக்கையை வைத்து எதுவுமே செய்ய முடியாது” என்று ஒரு சட்டத்தரணி கூறியதை நம்பியும், தனது முயற்சிகளை நிறுத்திக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. 

தலைவரின் துணைவியாரை விட, அஷ்ரபிற்குப் பிறகு மு.காவின் தலைவராக இன்றுவரை பதவி வகிக்கின்ற றவூப் ஹக்கீம் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளார். அவரும் அவர் சார்ந்தவர்களும்தான் இந்த விருட்சத்தில் அதிக கனிகளை சுவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்று ஹக்கீமுக்கு கிடைத்திருக்கின்ற தலைவர் என்ற இடமும் அங்கீகாரமும் அஷ்ரப் என்ற அரசியல் ஆளுமை விட்டுச் சென்றவையாகும். அதேபோன்று அஷ்ரபின் சிஷ்யர்கள் என தம்மைக் கூறிக் கொள்ளும் ஏ.எல்.எம்.அதாவுல்லா, எம்.ரி.ஹசன் அலி, மர்ஹ_ம் சேகு இஸ்ஸதீன், நஸீர் அகமட், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோராவது இதனை நிறைவேற்றியிருக்க வேண்டும்; 

அஷ்ரபின் நேரடி அரசியல் சிஷ்யர் எனச் சொல்ல முடியாவிட்டாலும், அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு, மு.கா. ஊடாக அரசியலுக்கு வந்து, இன்று ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவராக இருப்பவர் என்ற வகையில் றிசாட் பதியுதீனுக்கும் இதில் பொறுப்புள்ளது.

அதேபோல், பசீர் சேகுதாவூத் ஒரு முயற்சிகளைச் செய்த போதும் அது நீடிக்கவில்லை என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 
இந்நிலையில், ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் வெளியிட்டுள்ள ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ எனும் நூல் இவ்விவகாரத்தை புதியதொரு கோணத்தில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனலாம். அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு விபத்து என்ற மனோநிலையைக் கடந்து, உலக மற்றும் உள்நாட்டு அரசியலின் பின்னணியில் சில விடயங்களை சிந்திக்க வேண்டிய தேவைப்பாட்டை உணர்த்தியிருக்கின்றது.  

அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அரசியல், சமூக ஆய்வாளருமான எம்.பௌஸர், சர்ஜூனின் ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் நேரடியாகவே சில விடயங்களைக் கூறியுள்ளார். 
அவர் இவ்வாறு கூறுகின்றார், 

“அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல.

இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்” என்கின்றார். 

இதனை புரிந்து கொள்வதற்கு அக்கால அரசியல் சூழலையும் நாட்டில் காணப்பட்ட பின்புலத்தையும் புரிந்து கொள்வது அவசியமாகும். 
பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியத்தோடும், சிங்கள பெருந்தேசியத்தோடும் இணைந்தே அரசியல் செய்து வந்தனர்.

சிங்கள அரசாங்கங்களின் புறக்கணிப்பு ஒரு புறமும், தமிழ் ஆயுதக் குழுக்களின் அக்கிரமங்கள் மறுபுறமும் முஸ்லிம்களை அழுத்திய காலமது. 
எனவே, முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத வழியில் செல்லாமல் பாதுகாக்கவும் முஸ்லிம்களுக்கான சொந்த அரசியலை உருவாக்கவும் வேண்டிய தேவை ஏற்பட்டது.

அப்போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. அஷ்ரப் ஒரே காலத்தில் 
தமிழ் ஆயுதக் குழுக்கள் மற்றும் சிங்கள கடும்போக்கு சக்திகளின் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, குருக்கள் மடம், காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகள் என ஒவ்வொரு சம்பவத்திற்காகவும் அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் துணிந்து குரல்கொடுத்த தலைவராக அஷ்ரப் இருந்தார்.  

ஆனால், குறுகிய காலத்திற்குள்ளே தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் பெருவளர்ச்சி பெற்றது. சந்திரிகா அம்மையாரின் நண்பனாக 
அஷ்ரப் மாறிவிட்டிருந்தார். 

கொழும்பில் தான் முஸ்லிம்களுக்கான அரசியல் மையம் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இது 
வயிற்றில் புளியைக் கரைத்தது.

இப்படி, எம்.எச்.எம்.அஷ்ரப் பலருக்கும் தலையிடியாக, சவாலாக மாறிவிட்டிருந்தார் என்பதை சர்ஜூன் ஜமால்தீனின் புத்தகம் தெட்டத் தெளிவாக குறிப்பிடுகின்றது. புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள், அரசாங்கத்தின் ஒரு பிரிவினர், தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், 
ஒருசில கடும்போக்காளர்கள் என இதனை வகைப்படுத்தலாம். 

இந்த சூழ்நிலையிலேயே இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற ஒரு விடயம் வந்தது. நகர்வுகள் குறித்து அஷ்ரபிடம் ஆலோசனை கேட்பவராக இருந்த சந்திரிகா அம்மையார், நோர்வே தலையீட்டுடனான சமாதான திட்டம் பற்றிக் கூறியதாகவும் அதற்கு அஷ்ரப் மறுத்ததாகவும் இந்த 
நூல் கூறுகின்றது.

“இந்த திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கிற்கோ எனது சமூகத்திற்கோ எந்த நன்மையும் இல்லை. எனவே இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்மேடன”; என்று சந்திரிகாவிடம் அஷ்ரப் சொன்னதாக அஷ்ரபை அதற்கு முதல் நாள் இரவும் கூட சந்தித்திருந்த  முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுவ்லா இந்த நூலாசிரியரிடம் கூறியிருக்கின்றார். 

இது அப்படியே இருக்க, அஷ்ரபின் மரணத்திற்குப் பின்னர் நடந்தவற்றை நோக்குவோம். தலைவரின் மரணத்திற்குப் பிறகு மு.கா.வுக்கு இரட்டைத் தலைமை நியமிக்கப்பட்டு பின் றவூப் ஹக்கீம் தனித் தலைவராகின்றார். நோர்வே உள்ளே வருகின்றது.

பேச்சுவார்த்தை நடக்கின்றது. முஸ்லிம்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஆயினும் மு.கா. இந்தச் செயன்முறையில் பங்கேற்கின்றது. ரணில் விக்ரமசிங்கவின் கை ஓங்குகின்றது என பல மாற்றங்கள் நடக்கின்றன. 

ஆகவே, தலைவர் அஷ்ரப் உண்மையிலேயே திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றால். சம்பந்தப்பட்டோர் எதிர்பார்த்த மாறுதல்கள், பலன்கள் அவர்களுக்குக் கிடைத்ததாகவே சொல்ல முடியும்.

இந்தப் பின்னணியில் அஷ்ரப் மரணம் என்ற விடயமும் மூடிமறைக்கப்பட்டது எனலாம். ஆனால், ஆய்வாளரும் அரசியல் நோக்கருமான பௌஸர் இவ்விடயத்தைத் தெளிவாகக் கூறுகின்றார். 

“2002இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய்நகர்த்தலே அஷ்ரப் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.

ஒரு நாட்டில் ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் தமது நிகழ்ச்சி நிரலைத் தங்குதடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலைச் சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ஹெலியில் தலைவர் அஷ்ரபுடன் கதிர்காமத்தம்பி என்ற ஒருவரும் சென்றிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் பின்னர்  மாவீரர் பட்டம் வழங்கியதாகவும் அவர் கொண்டு சென்ற பையிலேயே 
குண்டு இருந்திருக்கலாம் என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது. 

ஆனால், அன்றைய தினம் அஷ்ரபுடன்  பெரியதம்பி என்று ஒருவரும் பயணித்துள்ளார். அவரது பயணப் பையும் சோதிக்கப்படவில்லை என்ற 
புதிய தகவல் மேற்படி புத்தகத்தில் வெளிக் கொணரப்பட்டுள்ளது. 

ஆகவே, வெளிநாட்டுச் சக்தி, உள்நாட்டு அரசியல் தரப்பில் ஒருபகுதியினர், புலிகள் இணைந்து ஒரு கூட்டுச் சதித்திட்டத்தின் ஊடாக எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற பெருவிருட்சத்தை வேரறுத்துள்ளார்களா? என்ற சந்தேகம், 25 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது. 

எத்தனையோ பழைய விவகாரங்களுக்கு இப்போது நீதி தேடுவது போல, எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் குறித்த உண்மை வெளிக்கொணரப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டால் மட்டுமே முஸ்லிம் அரசியல் நிம்மதி கொள்ளும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X