2025 மே 17, சனிக்கிழமை

எரிக் சொல்ஹெய்மின் முனைப்பு

Thipaan   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டு வருதல்;, இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி (To End a Civil War; Norway’s Peace Engagement in Sri Lanka)' எனும் தலைப்பில் கடந்த வாரம் இலண்டனில்

நூலொன்று வெளியிடப்பட்டது. நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் இலங்கையின் சமாதான பேச்சுக்களில் கவனம் செலுத்திய நோர்வேயின் முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோரின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை முன்வைத்து, மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் குறித்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

நூல் வெளியீட்டு விழாவில் எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பங்கெடுப்பாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சில கவனம் பெற்றன. இலங்கையில், தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தினை இலகுவாக பெற முடியாது. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில், தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதை தென்னிலங்கை விரும்பவில்லை. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை சர்வதேசம் விமர்சன ரீதியிலான கண்ணோட்டத்தோடு அணுகுவதோடு, அதனை முன்னிறுத்தி இலங்கையோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இறுதி மோதல்களின் பேரழிவுக்கு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்.

சமாதான முயற்சிகளின் தோல்வி, தென்னிலங்கையின் நிலையற்ற தன்மை மற்றும் புலிகளின் சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளாத்தன்மை ஆகியவற்றினால் ஏற்பட்டது. எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்த கருத்துக்களில், இவை மேல்மட்டத்தில் இருந்தவை.

ஏனெனில், முன்னாள் சமாதானத் தூதுவர் என்கிற அளவில் எரிக் சொல்ஹெய்ம் அடையாளப்படுத்தப்படுவதைத் தாண்டி, தமிழ்த் தரப்புக்குள் தொடர்ச்சியான ஆளுமையையும், தலையீடுகளையும் செய்யும் வல்லமையை அவர் இன்னமும் பெற்றிருக்கின்றார். அதிக தருணங்களில் தென்னிலங்கையோடும்- தென்னிலங்கையின் தீர்மானம் மிக்க சக்திகளோடும் தமிழ்த் தரப்பினை இணைக்கும் 'இராஜதந்திர முகவராக' அவர் வலம் வருகின்றார்.

இலங்கை தொடர்பிலான வெளிப்படையான அரங்கிலிருந்து எரிக் சொல்ஹெய்ம் நீக்கப்பட்டமை மாதிரியான தோற்றப்பாடு, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், உண்மை அப்படியல்ல. அதுபோல, தமிழ்த் தரப்பினை சுற்றி அவரின் இயங்கு நிலை என்பது பாரிய முனைப்புக்களைக் கொண்டது. நீண்டு செல்லக் கூடியது.

இலங்கையின் இனமுரண்பாடுகளுக்குள் சமாதான ஏற்பாட்டாளர் எனும் நிலையில் தன்னுடைய தலையீடுகளை மேற்கொண்ட நோர்வேயின் செயற்பாடுகளின் உண்மையான நோக்கம், சமாதானப் பேச்சுக்களின் தோல்வியில் அவர்களின் பங்கு என்பன தொடர்பில் ஆராய்வது அவசியம். அது, தொடர்ந்தும் செய்யப்பட வேண்டியது.

இலண்டன் நூல் வெளியிட்டு விழாவில், எரிக் சொல்ஹெய்மின் கருத்துக்கள் நோர்வேயின் குற்றங்களையும், செயற்றிறனற்ற நடவடிக்கைகளையும் கழுவுவதாகவே இருந்தது. குறிப்பாக, இறுதி மோதல்களின் பாரிய அழிவுகளுக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்றும், இறுதி மீட்பராக தாம் நடந்து கொண்டமைக்கான முனைப்புக்களையும் அவர் வெளிப்படுத்தி னார். (அதாவது, '2009 ஜனவரி மாதத்தில் சர்வதேச கண்காணிப்போடு விடுதலைப் புலிகளை சரணடைய வைப்பதற்கான முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டது.

ஆனாலும், அதற்கு புலிகள் இணங்கவில்லை.' என்றிருக்கின்றார்) 21ஆவது நூற்றாண்டின் ஆரம்பம், போராட்ட அமைப்புக்கள் மற்றும் கிளர்ச்சிக்குழுக்களின் கோலொச்சுகைகளோடு நிகழ்ந்தது. இதனை, உலகின் வல்லரசு சக்திகள் அவ்வளவுக்கு சகித்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தன்னுடைய தாக்குதல் நகர்வினை உறுதிப்படுத்திய அமெரிக்கா, அதற்கான ஆதரவை வல்லாதிக்க நாடுகளிடம் குறிப்பிட்டளவில் பெற்றுக் கொண்டது.

அதற்கான  ஊடக, இராஜதந்திரக் கவனம் என்பது பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. அதன்போக்கில், உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் தம்முடைய ஆளுகையை, தலையீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும், அதன் ஆதரவுத் தளங்களும் கருதின. அப்படியான தருணமொன்றிலேயே நோர்வேயின் தலையீடு இலங்கையில் நிகழ்கின்றது. நோர்வேயின் நோக்கம் உண்மையிலேயே மனப்பூர்வமான அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக வைத்தாலும், அவர்களின் செயற்பாட்டு அணுகுமுறை என்பது சந்தேக நோக்கங்களோடு ஆராயப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள், 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பெரும் போர் வெற்றிகளை வடக்கில் நிகழ்த்திக் கொண்டிருந்தனர். வடக்கின் கேந்திரமுக்கியத்துவம் மிக்க ஆணையிறவு படைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. அது, சர்வதேச ரீதியில் பெரும் கவனம் பெற்றது. அதனை, இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் பாரிய அச்சுறுத்தலான நோக்கின. அப்படியான தருணத்தில் தான், இலங்கை அரசாங்கத்துக்கும்;- விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.  

ஒப்பந்தமொன்றை மேற்கொண்ட தரப்பு என்கிற நிலையில், ஆரம்பத்தில் புலிகளுக்குள் சம அந்தஸ்தினை வழங்குவதற்கான ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்கவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தென்னிலங்கை ஆட்சியதிகாரத்தில் இருந்ததனால் ஏற்பட்ட முரண்பாடுகளும் சமநிலைத் தன்மையைக் குழப்பின. அத்தோடு, விடுதலைப் புலிகளுக்கான அங்கிகாரத்தினை வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அக்கறை கொள்ளவில்லை. 

விடுதலைப் போராட்ட அமைப்பொன்றை பயங்கரவாதிகள் எனும் தோற்றப்பாட்டோடு மாத்திரமே இறுதி வரை அணுகினார்கள். இந்த அணுகுமுறையை மாற்றுவது தொடர்பில் சமாதான ஏற்பாட்டாளர் என்கிற வகையில் நோர்வே வெற்றிபெறவில்லை. இது, சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளை பாரியளவில் நம்பிக்கையிழக்கவும் செய்தது. அல்லது வெறுப்படைய வைத்தது.

இலங்கை காலணித்துவத்திலிருந்து விடுபட்ட காலம் முதல் நீடித்து வரும் தேசியப் பிரச்சினையொன்றினையும், அதன் போக்கில் முனைப்புப் பெற்ற விடுதலைப் போராட்டத்தினையும் கையாளும் தரப்பு அதனை சர்வதேச அங்கிகாரத்தோடு முன்னெடுக்க வேண்டும். மாறாக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கருவியாக மாத்திரமே தன்னை முன்னிறுத்திக் கொண்டு, இரண்டாம் பட்சப் பிரச்சினையாக சமாதான முனைப்புக்களை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் உண்டு.

அதனை, எரிக் சொல்ஹெய்மே கூட தன்னுடைய பதிலொன்றில் தெரிந்தோ- தெரியாமலோ தெரிவித்திருக்கின்றார். அதாவது, '2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் பிரச்சினைகளே அதிக கவனம் பெற்றிருந்தன. ஐக்கிய நாடுகளில் அந்த விடயங்களே அதிகமாக உரையாடப்பட்டன. இலங்கையின் சமாதானப் பேச்சுக்கள் பற்றி பெரிதாக பேசப்பட்டிருக்கவில்லை. எமது நாட்டின் பிரதமரே கூட பேசியிருக்கவில்லை. அதற்கான களம் அப்போது இருக்கவில்லை' என்றிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கம், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சமாதானப் பேச்சுக்களை நீடித்துக் கொள்ளவிரும்பவில்லை என்கிற விடயத்தை எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்திருக்கின்றார். அது, வெளிப்படையானதுதான். ஆனால், அது தொடர்பில் அவர் கூறிய விடயமொன்று கவனத்தில் கொள்ளத் தக்கது.

'சமாதானப் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டு வருவோம். வடக்கினை பிரபாகரனுக்கு வழங்கத் தயார். முதலமைச்சராக்கத் தயார்' என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் நேரடியாக தெரிவித்ததாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருக்கின்றார்.

தென்னிலங்கை, சமாதானப் பேச்சுக்களில் பெரிதாக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஊடகங்கள் கூட ஒருவித விரும்பமின்மையுடன் செயற்பட்டன. அதாவது,  விடுதலைப் புலிகளை தமக்கு நிகரான பேச்சுத்தரப்பாக அணுகுவதிலும், நியாயப்பாட்டோடு பிரச்சினையொன்றை தீர்த்துக் கொள்வதிலுள்ள ஆர்வத்தினையும் வெளிப்படுத்துவதிலுள்ள குறைநிலை அது. அவ்வாறான நிலைமை மீண்டும் யுத்தச் சூழலொன்றுக்கான தோற்றுவாயாக அமைந்தது. அதனை, மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் மிகவும் விரும்பினர். சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது புரிந்து கொள்ளத்தக்கதுதான்.

இன்னொரு பக்கம் இறுதி மோதல்களின் பாரிய அழிவுகளுக்கு விடுதலைப் புலிகளின் மீது குற்றஞ்சாட்டியிருக்கும் எரிக் சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப் புலிகள், சர்வதேச அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் வல்லமையோடு இருக்கவில்லை.

அது, அவர்களை சமாதானப் பேச்சுக்களிலிருந்து விலகவும், தோல்வியுறவும் வைத்தது என்றிருக்கின்றார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு சமாதானப் பேச்சுக்களின் தோல்விகளுக்கு முக்கியமானது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், பல நேரங்களில் போராட்ட அமைப்பொன்றின் தலைவராக அல்லாமல் கிளர்ச்சிக்குழுவொன்றின் தலைவரை நோக்குவது போலலே வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வதேசம் நோக்கியது. அதனை, உணர்ந்து கொள்ளும் வல்லமை புலிகளிடம் இருக்கவில்லை என்றும் விவரித்திருக்கின்றார்.

எரிக் சொல்ஹெய்ம் தோற்றுவித்திருப்பது நீண்ட உரையாடலொன்று. அதனை பல்வேறு கோணங்களிலிருந்து சம்பந்தப்பட்ட- பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழ் மக்கள் அணுக வேண்டியிருக்கின்றது.  ஏனெனில், இன்னமும் சர்வதேச ரீதியிலான அரசியலுக்குள் தமிழ் மக்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது அவசியமாகின்றது. 

ஆயுதப் போராட்டமொன்று, சர்வதேச ஒத்துழைப்போடு அழிக்கப்பட்டமையும், அப்போது நிகழ்ந்த பேரழிவும், அதன் நீட்சியாக தொடரும் பழிபாவங்களும் பல்வேறு தரப்பினரை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அதன் போக்கில் நோர்வே தனக்கு வெள்ளையடிக்க வேண்டிய தேவையுண்டு. அந்த முனைப்புக்களில் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டளவு வெற்றியைப் பெற்றிருக்கின்றார். அதனை, இலண்டன் நூல் வெளியிட்டு விழாவும் உறுதி செய்தது.

இவ்வாறான நிலையில், தமிழ்த் தரப்பு தொடர் தோல்விகளுக்குள் இருந்து மீள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது, இலங்கை அரசு, சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் என்பவற்றை மிகுந்த அக்கறையோடும் அவதானத்தோடும் அணுகுவதோடும், புத்திசாதுரியமாக செயற்படுவதனூடுமே நிகழ்த்தப்படக் கூடியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .