2024 ஜூலை 27, சனிக்கிழமை

ஐந்து வருடங்களாகியும் தொடரும் விசாரணை

Mayu   / 2024 மே 30 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன் 

இலங்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்‌ஷக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டவர்கள், இருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன. 

பிரித்தானியாவின் செனல் 4 கூட தற்போதைய இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டம் ஒன்றிரண்டு நாட்களில் உருவாக்கப்படவில்லை, அது இரண்டு, மூன்று வருடங்களாகத் திட்டமிடப்பட்டது என பிள்ளையான் தரப்புடன் இணைந்திருந்து தற்போது ஐரோப்பிய நாட்டில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா மௌலானா ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்திருக்கிறார். அந்தக் கருத்துக்களும் கண்டுகொள்ளப்படாதவையாக மாறிப் போயிருக்கின்றன.

சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. 

இத்தனையையும் இயக்கியவர் கண்டுபிடிக்கப்படவில்லை. ராஜபக்‌ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் ஊர்ஜிதமானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்‌ஷக்களின் திட்டமே. இந்த தாக்குதலுக்கு ராஜபக்‌ஷ குடும்பத்தினரே நேரடியாகப் பொறுப்பு என்று பலரும் கருத்துக்களை முன்வைத்திருந்தாலும், இதனை நிரூபிப்பதற்கு யாரும் தயாரில்லை. கடந்த மாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலின் பிரதான சூத்ரதாரியை தான் அறிவேன் என தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதன் பின்னர் அவர், குற்றப்பலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். சில நாட்களில் அது ஓய்ந்து போனது. அதன் பின்னர் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சறில் காமினி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, 2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், 2018 நவம்பர் 30ஆம் திகதியன்று வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றது. அந்த பொருட்களை அங்கு வைத்தது யார்?. சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த ஐ.பி. முகவரியைப் பயன்படுத்தியவர்கள் யார்?.

 வவுணதீவு சம்பவம் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என இராணுவ புலனாய்வு பிரிவினர், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்கு பொய்யான தகவல்களை முன்வைத்தமை. தெஹிவளையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் தற்கொலை குண்டுதாரியின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தமை சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது. 
அந்த அழைப்பினை ஏற்படுத்தியவர்கள் யார்?. தெஹிவளையில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் யார்?. 

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியை அழைத்து வருமாறு தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருந்த சுரேஷ் சலே, அசாத் மௌலானாவிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். 2018 புத்தளத்தில் சுரேஷ் சலேவிற்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அபுஹித் என்ற நபர் தொடர்பில் கூறியுள்ளார். உண்மையில் யார் அந்த அபுஹித் ஆகிய விடயங்கள் தொடர்பில் அருட்தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயங்களுக்கு விடை காண்பது ஐந்து வருடங்களின் பின்னரும் தேவையாக இருக்கிறது. 2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் செனல் 4 கடந்த வருடம் வெளியிட்ட காணொளியில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 

ஆனால், தன் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

 2015 - 2020 வரை சிறையிலிருந்த என்னால் இதனை எப்படிச் செய்ய முடியும்? இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கும் என் மீது பழி போடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஈஸ்டர் படுகொலை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை கடந்த மாதத்தில் வெளியிட்டதுடன், நேற்றைய தினம் அவரது அலுவலகத்தில் குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வினை நடத்தியுமிருக்கிறார்.

அதே நேரத்தில், குண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கான நினைவேந்தல்களும் அத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளைச் சுயாதீனமாக நடத்தப்படுதல், குற்றவாளிகள் தண்டிக்கப்படல், நீதி வழங்கல் குறித்து போராட்டங்களும் நாடு பூராகவும் நடைபெற்றுள்ளன.
கடந்த வருடத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 

அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு கத்தோலிக்க திருச்சபையும் இத்தாக்குதல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரியது. ஆனால், பூசி மெழுகல்களுடன் அது மறக்கப்பட்டதாயிற்று. மீண்டும் இவ்வருடத்திலும் ஏப்ரல் 21இல் ஒரு சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.  ஆனால், பயன் ஏதும் விளையும் என்பது சந்தேகமே.

அதே நேரத்தில், அறிக்கைகள் தயாரிக்கப்படுவதனால் காத்திரமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த முடிவுகள் ஏதும் வராது. சுயாதீன விசாரணைக் குழுவொன்றின் மூலமே சுயாதீனமான, பாரபட்சமற்ற, நீதியான, வெளிப்படைத்தன்மையுடன் கூட பரந்துபட்ட விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவையென, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,  கடந்த ஆண்டு, பாப்பரசரிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.  

இருந்தாலும், அவை எவையுமே நடைபெறவில்லை.  அவருடைய நிலைப்பாடு இப்போதும் அவ்வாறே இருந்துவருகிறது என்பது மாத்திரமே யதார்த்தமாகும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களையடுத்து, நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பை 6 மாதங்களுக்குள் உறுதிப்படுத்துவேன் என்றும் காரணம் காட்டி கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார், இதனையடுத்து, நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

ஆனால், குண்டுத் தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. அதனால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு தீர்வுகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்போதும் விசாரணைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
2009 இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்களடங்கிய பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் இதுவரை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

 இருந்தாலும், இலங்கையின் தமிழ் அரசியல் தரப்பினரும் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளும் அழுத்தங்களை பிரயோகித்த வண்ணமேயுள்ளன. 
ஐக்கிய நாடுகளில்பிரேரணைகள் முன்வைக்கப்படுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும் நடைபெற்றவண்ணமே இருக்கின்றன.

காலங்கள் வருடங்களாக 15 வருடங்கள் கடந்து போய்விட்டது. அதுபோலவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களும், கருத்து முரண்பாடுகளும், விசாரணைகளும்  நடைபெறும் என்பது மாத்திரமே நிரந்தரமாகும்.

மொத்தத்தில், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் போன்று 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் இருக்கும் என்பதில் மாற்றமேதுமில்லை.

 

22.04.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .