2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

ஒரு பௌத்த துறவியின் தூது

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூன் 18 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 148)

“இலங்கைத் தீவானது புத்தருக்குச் சொந்தமானது. அது மூன்று இரத்தினங்களால் நிறைந்த திறைசேரியைப் போன்றது. அதனால் ஆதிகால இயக்கர்கள், இந்தத் தீவில் வாழ்ந்தது நிரந்தரமற்றதாக அமைந்ததைப் போலவே, தவறான நம்பிக்கையைக் கொண்டவர்கள், இந்தத் தீவில் வாழ்வதும் நிரந்தரமில்லை. பௌத்தரல்லாத ஒருவர், தனது வலிமையைக் கொண்டு இலங்கைத் தீவைச் சில காலம் ஆண்டாலும், புத்தரின் குறிப்பிட்டதொரு சக்தியால், அத்தகையவரது தொடராட்சி நிலைக்காது. ஆகவே, இலங்கை என்பது, பௌத்த மன்னர்களுக்கே பொருத்தமுடையது; ஆகவே, அவர்களது ஆட்சியே நிரந்தரமாக நீடிக்கும்” என்று ‘பூஜாவலிய’ என்ற 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள நூல் குறிப்பிடுகிறது.   
‘சிங்கள-பௌத்த’ மேலாதிக்க மனப்பான்மையை மட்டுமல்ல, இலங்கை ஒரு பெளத்த தேசம் என்ற புனைவின் அடிப்படையையும் இது சுட்டி நிற்கிறது. இதைத் தன்னுடைய, ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில், ‘அரச மதமாகப் பௌத்தம்’ என்ற அத்தியாயத்தில், வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார்.   

அதுமட்டுமல்ல, “இலங்கை பெளத்தத்துக்கு உரியது; ஆகவே சோழர்கள், சேரர்கள் போன்ற பௌத்தரல்லாதவர்கள், இலங்கையின் அரியாசனத்துக்கு உரித்துடையவர்கள் அல்லர்” என்ற நிஸ்ஸங்க மல்லன் காலத்துக் கல்வெட்டுக் கூறுவதையும் போதிசத்துவர்கள் மட்டுமே, இலங்கையின் அரசனாக முடியும் என்ற நான்காம் மஹிந்த காலத்து, ஜேத்தவனாராமக் கல்வெட்டுக் குறிப்பிடுவதையும் வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார்.   

இந்த முயற்சிகள் மூலம், முழு இலங்கையும் ஒரு தனித்த, பௌத்த இறைமைக்கு உட்பட்டது என்றொரு வரலாற்றுப் புனைவைக் கட்டியெழுப்ப முனைகிறார்கள்.  

 இன்று, இலங்கை அரசியலில் கடந்துவிட முடியாத அரசியல் புனைவாக, இது ஆழவேர்விட்ட பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது.   

இதனால்தான் இன்றும், ‘துட்டகைமுனு’ இலங்கை அரசியல் தலைமைகளின் ஆதர்ஷ புருஷராகக் கொள்ளப்படுகிறார்.  

சர்வகட்சி மாநாடு ஒத்திவைப்பும் அமிர்தலிங்கத்தின் அதிருப்தியும்  

சர்வகட்சி மாநாடு மூலம், இந்தியாவில் தான் ஒத்துக்கொண்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு ஏற்ப, அரசியல் தீர்வொன்றை வழங்குவதால், தான் ஆதர்ஷிக்கும் ‘துட்டகைமுனு’ ஆக முடியாது என்பதுதான், ஜே.ஆர்  ஜெயவர்தனவின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.   

ஆனால், இந்தியாவை வௌிப்படையாகவும் முழுமையாகவும் எதிர்த்துச் செல்லும் வலு, ஜே.ஆரிடம் இருக்கவில்லை. ஜே.ஆரை ஆதரித்த ஏனைய சர்வதேச சக்திகளும் நேரடியாக இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை.  

 தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த ஜே.ஆருக்கு, இஸ்‌ரேலின் ஆதரவு அதிகம் இருந்ததாகப் பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள். இஸ்‌ரேலிய உதவியுடன், இலங்கையின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தந்திரோபாயங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.   

இதை வௌிப்படையான சவாலாக இந்தியா பார்த்தது. இஸ்‌ரேலின் ‘மொஸாட்’, அமெரிக்காவின் ‘சீ.ஐ.ஏ’, பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ’, ஐக்கிய இராச்சியத்தின் ‘எம்.ஐ.6’, இந்தியாவின் ‘றோ’ எனச் சர்வதேச சக்திகளின் உளவுத்துறைகள், இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகப் பலரும் பதிவுசெய்கிறார்கள்.   

இது, வெறும் இலங்கைக்குள்ளான இனப்பிரச்சினை அல்ல; மாறாக. பூகோள அரசியல் போட்டியின் ஆடுகளம் என்பதுதான் யதார்த்தமாக இருந்தது. இந்த நிலையில்தான், செப்டெம்பர் 30ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன சர்வகட்சி மாநாட்டை, நவம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.   

பிராந்திய சபைகளை ஜே.ஆர் ஏற்றுக் கொள்ளாததும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும்  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த பார்த்தசாரதியைத் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், சர்வகட்சி மாநாடு தொடர்பிலான தமது அதிருப்தியைப் பதிவு செய்ததுடன், தாம் பொறுமை இழந்துவிட்டதாகவும், சர்வகட்சி மாநாட்டிலிருந்து வௌியேறத் தாம் எண்ணியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   

சர்வகட்சி மாநாடு என்பது, இந்தியாவின் குழந்தை; குறிப்பாக, இந்திராவின் குழந்தை. அது தோல்வியடைவது, இந்தியாவின் தோல்வியாகும். ஆகவே, அமிர்தலிங்கம் தரப்பினரைப் பொறுமைகாக்கக் கோரிய பார்த்தசாரதி, அவர்களுடைய கரிசனங்கள் பற்றி, இந்திரா காந்தி அறிந்திருப்பதாகவும் தமக்கு உள்ள மாற்று உபாயங்கள் பற்றித் தாம் ஆராய்வதாகவும் உறுதியளித்தார்.  

வல்பொல ராஹுல தேரரின் அழைப்பு  

இந்த நிலையில், 1984 ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில், பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தன்னுடைய தலைமையிலான பௌத்த பிக்குகளின் குழுவொன்று, தமிழ்நாட்டில் சென்னை நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், வன்முறை மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று கூறியும் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.   

19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஏற்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத் தீயை, 20ஆம் நூற்றாண்டில் ஏந்திச் சென்றவர்களுள் முக்கியமானவர் வல்பொல ராஹூல தேரர் என்பவராவார். 
வல்பொல ராஹூல தேரர், ஒரு பௌத்த துறவி மட்டுமல்ல, பௌத்தம், குறிப்பாகத் தேரவாத பௌத்தம் பற்றிய புலமையாளர்களில் முக்கியமான ஒருவர்.  

இலங்கை மட்டுமல்லாது, சர்வதேசப் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தவர். இது அவருடைய ஒரு முகம். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத செயற்றிறனாளர் என்பது அவருடைய மறுமுகம். 

தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, பௌத்த துறவிகள் தம் உயிரையும் தரத்தயார் என்ற தேசிய பகட்டாரவார எண்ணத்தைக் கொண்டிருந்தவர் என்பதோடு, சர்வகட்சி மாநாட்டில் மாவட்ட சபைகளைத் தாண்டிய தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதிலும் மிகஉறுதியாக இருந்தவர்.  

 தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, இலங்கைத் தீவின் பௌத்த பாரம்பரியத்தைப் பேணிக் காக்க, பௌத்த துறவிகள் சமூக செயற்பாடுகள் மற்றும் அரசியலில் ஈடுபட வேண்டும் என, ‘பிக்குகளின் பாரம்பரியம்’ (ஆங்கிலம்) என்ற, அவர் 1974இல் எழுதிய நூலில், பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபட, வௌிப்படையாக அறைகூவல் விடுத்தார்.  

பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பிரவேசத்துக்கும் - சமகால அரசியலுக்கும், தமக்கான அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்களின் உருவாக்கத்துக்கும் ஊற்றுவாயாக, வல்பொல ராஹூல தேரரைக் கருதலாம்.   

பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, ‘இலங்கையின் பௌத்த துறவிகள்’ பற்றிய தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிடும் எச்.எல். செனவிரட்ன, ‘மேல்தட்டு பௌத்த பிக்குகளின் போர்வெறியைத் தூண்டும் பிரசாரமும், இராணுவ நடவடிக்கை மூலமான வெற்றியே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்ற கோட்பாடும், பௌத்த துறவறத்தின் சமூக மற்றும் மனிதாபிமான கரிசனைக் குறைவைக் காட்டுகிறது.  பௌத்தத் துறவறமானது, சமாதானம் தொடர்பிலான ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இனப்பிரச்சினை இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கும்’ என்று பதிவு செய்கிறார். 

கௌதம புத்தர் போதித்த, புனித அட்டவழிப்பாதையில் செல்லும் கடப்பாடுடைய பிக்குகளின் அரசியல் ஈடுபாடு என்பது, மதரீதியான பார்வையில் ஏற்புடையதல்ல. இத்தகைய  வாதம் இலங்கை, மியான்மார், தாய்லாந்து உள்ளிட்ட பலநாடுகளின் பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனமாகும்.   

இது தனித்து ஆராயப்படத்தக்க பெரும் வாதப் பரப்பாகும். புலைமைத்தளத்தில், ‘அரசியல் பௌத்தம்’ என்று இதை விளிக்கிறார்கள். யதார்த்தத்தில் மதங்கள், அரசியலின் முக்கிய கருவியாகப் பயன்பட்டதை, பயன்பட்டுக்கொண்டிருப்பதைக்  காணலாம்.  பௌத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல. 

சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியாளர்களான டீ.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவல ஆகியோர் பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பங்களிப்பை விரும்பவில்லை.   
மாறாக, அவர்களை ம‌ய்யநிலை அரசியலிலிருந்து சற்று அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்கள் என்று சில விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள். 

ஆனால், எஸ். டபிள்யு.ஆர். டீ. பண்டாரநாயக்கவின் ‘பஞ்சமாபலவேகய’வுடன் இந்த நிலை மாறுகிறது.   
எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன போன்ற தலைவர்கள், பௌத்தத்தைத் தமது அரசியலுக்குச் சாதகமான கருவியாகப் பயன்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாதது.  

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மறுப்பு  

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதியாக அறியப்பட்ட வல்பொல ராஹூல தேரர், ஜே.ஆருக்கும் இனவெறி கக்கும் சிங்கள-பௌத்த தேசியவாதியான அமைச்சர் சிறில் மத்யூவுக்கும்  நெருக்கமானவராகவும் திகழ்ந்தார்.
சர்வகட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தமை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதன் உள்நோக்கம் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.  

சர்வகட்சி மாநாட்டில், வெறும் பிராந்திய சபைகளைக் கோரிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையையே நிராகரித்து, மாவட்ட சபைகளை விட, அதிகமான தீர்வொன்றை வழங்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்த வல்பொல ராஹூல தேரர், தனிநாடு கோரும் தம்மிடம் எந்தச் சமரசத்தை முன்வைக்கப் போகிறார் என்பது, தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் இதற்குப் பின்னால், வேறேதும் நிகழ்ச்சிநிரல் இருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி இருந்தது.    

இந்த நிச்சயமற்ற சூழலில், இதைத்  தவிர்ப்பதே சாலச்சிறந்தது என்று கருதிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் அமைப்புகளின் தலைமைகள், வல்பொல ராஹூல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.   

அவர்கள் இணைந்து அனுப்பிய பதில் கடிதத்தில், ‘பௌத்த துறவிகள் குழுவோடு நாம் பேசத் தயாராக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களோடு பேசுவது தமிழ்மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வைப் பெற்றுத் தராது’ என்று குறிப்பிட்டிருந்தனர்.   

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், வல்பொல ராஹூல தேரரின் அழைப்பை மறுத்து, தனியாகப் பதில் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘நாம் வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்ல; நாம் பயங்கரவாதத்தில் ஈடுபடவுமில்லை; அடிமையாக வாழாதிருப்பது மட்டுமே எங்களுடைய ஒரே எண்ணம். நாம் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நாம் அமைதியாக வாழவே விருப்பம் கொண்டுள்ளோம். அரசாங்கத்தின் ஆயுதம் கொண்ட அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ளவே, நாம் ஆயுதம் ஏந்தியுள்ளோம்.

வணக்கத்துக்குரிய பௌத்த துறவியான நீங்கள், பௌத்த மதத்தை அவமதிக்கும் அரசாங்கமொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதையிட்டு வருத்தம் கொள்கிறோம். நீங்கள் உண்மையில் சமாதானத்தை விரும்பினால், நீங்கள் உண்மையில் பௌத்தத்துக்கும் பௌத்த தர்மத்துக்கும் மதிப்பளித்தால் தயவுசெய்து அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம், அதன் அடக்குமுறையை நிறுத்த அறிவுறுத்துங்கள். எமக்கு அமைதி வேண்டும்; ஆனால், அதற்காக நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திடம் மண்டியிட்டு ஏமாற்றமடைய, நாம் தயாரில்லை’ என்று குறிப்பிட்டிருந்ததாக, ரீ.சபாரட்ணம் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார்.   

1984 ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துப் பரவிய வன்முறைகள், ஒக்டோபர் மாதத்திலும் தொடர்ந்ததுடன், தலைநகர் கொழும்பையும் எட்டிப் பார்த்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .