2025 மே 17, சனிக்கிழமை

கசக்கத் தொடங்கியுள்ள காதல்

Thipaan   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் எதுவரை நீடிக்கப் போகின்றன? அரசாங்கத்தின் மீது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் கூறத் தொடங்கியுள்ளது தான் இந்தக் கேள்வி எழுந்துள்ளமைக்கு முக்கியமான காரணம்.

தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற வகையிலும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளின் அடிப்படையிலும், கூட்டமைப்புக்கு ஏமாற்றமும் கோபமும் இருப்பது நியாயமானது.

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது வெளிப்படையான கோபத்தை அதிகளவில் வெளிப்படுத்தாத போதிலும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை கடுமையாகவே முன்வைத்து வருகின்றனர்.

சம்பந்தனைப் பொறுத்தவரையில், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக கருதப்படுகிறது.

அரசியல் தீர்வை எட்டுவது தான் பிரதான இலக்கு என்பதால், அரசாங்கத்துடன் முரண்பட்டு அதற்கான வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கூறுகிறார். சின்னச்சின்ன, சலுகைகளைப் பெறுவதற்காக முரண்பட்டுக் கொண்டால், அரசியல் தீர்வை எட்டும் விடயத்தில் பலவீனப்பட்டு விடுவோம் என்பது அவரது நிலைப்பாடு. ஆனாலும், சின்னச்சின்ன விடயங்களுக்குக் கூட படியிறங்கி வராத அரசாங்கம், எப்படி பிரதான அரசியல் தீர்வை வழங்கப் போகிறது என்பதே, பெரும்பாலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்வியாக இருக்கிறது. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகள், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படவில்லை.

அது அரசாங்கத்தின் மீது நாடாளுமன்றத்தில், கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படையான தாக்குதலைத் தொடுப்பதற்குக் காரணமாகியது.

அதுபோல பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பதவிக்கு கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்ட பேராசிரியர் மோகனதாசுக்குப் பதிலாக வேறொருவரை அரசாங்கம் நியமித்தமை, மாவை சேனாதிராசா அரசாங்கத்தைக் கண்டிக்க காரணமாகியது. இரா.சம்பந்தன் குறிப்பிட்டது போன்று, சின்னச்சின்ன சலுகைகளுக்காக முரண்படக் கூடாது என்ற கருத்து இந்த இரண்டு விடயங்களுக்கும் தான் பொருந்தக் கூடியது. ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமற்போனோரைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களுக்கும் அளித்திருந்த வாக்குறுதிகளின் படி, அரசாங்கம் செயற்பட்டிருக்கவில்லை.

இவை ஒன்றும் தமிழர்கள் கோருகின்ற சலுகைகளோ பதவிகளோ அல்ல. வெறும் சலுகைகள், பதவிகளின் அடிப்படையில் மாத்திரம் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கிறது என்று கருத முடியாது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் வேகத்துடனோ, ஆர்வத்துடனோ செயற்படவில்லை. அதனால் தான், கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அரசாங்கம் சம்பாதித்திருக்கிறது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி விவகாரத்தில் அரசாங்கத்திலுள்ள சிலர், கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த விவகாரம் சற்று தீவிரமடைந்த நிலையில் தான், அவசர அவசரமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக அரசாங்கம் நியமித்திருக்கிறது.

இந்த நியமனங்களை அரசாங்கம் முன்னரே செய்திருக்க வேண்டும். ஏனென்றால், அதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு, பலரின் பெயர் பட்டியலும் கூட கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி, அரசாங்கம் கூட்டமைப்பை, உதற நினைத்ததன் பின்னணியை வெறுமனே ஓரம்கட்டலாக மட்டும் நினைத்து விட முடியாது. ஏனென்றால், முதலில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தலைவர்களாகவும், இணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள் தனியே ஐ.தே.கவையோ சுதந்திரக் கட்சியையோ மட்டும் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, இது ஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது கட்சியை வளர்க்க எடுத்த முடிவு மட்டும் அல்ல. அவ்வாறு கருதியிருந்தால், தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் அதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பர்.

மாறாக, மட்டக்களப்பிலும், வன்னியிலும், தமது பங்காளிக் கட்சிக்கு அரசாங்கம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியை வழங்கிய போதே, இது கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டும் செயல் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது, வடக்கிலும், மட்டக்களப்பிலும், கூட்டமைப்பே அதிக ஆசனங்களை வென்றிருந்தது மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சியாகவும் இருந்து வருகிறது. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிக்கான பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்ட ஒன்று அல்ல.

2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  வீ.ஆனந்தசங்கரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான பின்னர், அந்தச் சர்ச்சை ஆரம்பமாகியது. தாமே மூத்தவர் என்றும் தமக்கே அது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டு வந்தார். அதனால், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெறுவது வழக்கம். அப்போது, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி என்பது அரசதரப்பில் உள்ளவர்களுக்கே வழங்கப்படுவது மரபு என்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா நியாயப்படுத்தி வந்தார்.

ஆட்சியில் இருக்கின்ற எந்த அரசாங்கமும், பதவிகள் அனைத்தையும் தம் கைக்குள் வைத்துக் கொள்வது தான் வழக்கம்.

அந்த அடிப்படையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. அவ்வாறு தான், ஆளும்கட்சியினருக்கே மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி என்ற மரபு உருவானது.

அந்த மரபின் படிதான், தற்போதைய அரசாங்கம் செயற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் கூட, கூட்டமைப்பு விடயத்தில் அரசாங்கம் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர்களுக்கே வழங்கப்படுகின்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை, எந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கியதோ, அதே அடிப்படையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளையும் வழங்கியிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு நியமனங்களை வழங்காத அரசாங்கம், பகிரங்கமான கண்டனத்தை கூட்டமைப்பு தெரிவிக்கத் தொடங்கிய பின்னர் இணைத் தலைவர் நியமனங்களை வழங்கியது. இதனை ஆரம்பத்திலேயே அரசாங்கம் ஏன் செய்யாமல் விட்டது? குழப்பம் வந்ததும் ஏன் வழங்கியது?

இது ஒரு சூட்சுமமான நடவடிக்கை. இந்த விவகாரம் கூட்டமைப்பை அதிகாரப் பசி கொண்டவர்களாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது, இன்னொரு பக்கத்தில், சின்னச் சின்ன விடயங்களைக் கூட செய்யத் திராணியற்றவர்களாகவும் அவர்களைக் காண்பித்திருக்கிறது.

ஏற்கனவே, கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள், உள்ளும் புறமும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் தீர்வு விடயத்தில், கூட்டமைப்பினால் எதையும் சாதிக்க முடியாது என்ற மனோநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்படுகிறது.

ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய விவகாரங்கள் பெருப்பிக்கப்படுவது அரசாங்கத்துக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

இரா. சம்பந்தன் போன்றவர்கள், பொறுமையுடன், செயற்பட்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே அரசாங்கம் மீதான சர்வதேச அபிப்பிராயம் தமிழர் தரப்புக்குச் சாதகமற்றதாக மாறியிருக்கும் நிலையில், அதனுடன் போட்டியிடத்தக்க அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடிக்க கூட்டமைப்புத் தலைமை முயற்சிக்கிறது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தமிழர் தரப்பு தடையாக இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டியிருப்பது உண்மை.

அண்மைக்காலத்தில் அமெரிக்க அதிகாரிகள் பலரும் அரசாங்கத்தின் விட்டுக்கொடுப்பை ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே எடுத்துக் கூறியிருந்தனர். அதற்கு ஈடாக தமிழர் தரப்பும் நல்லிணக்கத்துக்குத் தயாராகவே இருக்கிறது என்பதைக் காட்ட முயற்சிக்கிறார் இரா.சம்பந்தன்.

இத்தகைய நம்பிக்கையை கூட்டமைப்பை வெளிப்படுத்த முடியாமல் செய்வதே, அரசாங்கத்தின் திட்டமோ என்று கூட சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாசூக்காக புறக்கணித்து, அவர்களைப் பொறுமையிழக்க வைப்பதன் மூலம் தனது திட்டத்தைச் சாதிக்க அரசாங்கம் நினைக்கலாம். இதன்மூலம், சர்வதேச ஆதரவு தமிழர் தரப்புக்கு கிட்டவிடாமல் தடுக்கக முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு இழக்கச் செய்வது, சர்வதேச ரீதியில் அவர்களைத் தனிமைப்படுத்துவது இந்த இரண்டும் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். இதனை சம்பந்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இத்தகையதொரு மறைமுக நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுவது, உண்மையானதாக இருந்தால், இந்த பிரச்சினையை கூட்டமைப்பு எதிர்கொள்வது சிக்கலானதாகவே இருக்கும். ஏனென்றால், கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து என்பது குறைந்து வருகிறது. இது மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்பினருக்கு இன்னும் சாதகமாகஅமைந்து விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .