Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 10 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம். மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46இல் எமது இலக்கை அடைந்துள்ளோம்.
மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பெருமிதப்பட்டுள்ளார்.
ஆனால், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளபோதும்,
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், இது அவர்களுக்குப் படு தோல்வியே. ஏனெனில், இந்த சபைகளில் யாழ். மாநகரசபை உள்ளிட்ட பிரதான பல் சபைகளில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டிபி. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே ஆட்சியமைத்துள்ள நிலையில், இதனை எப்படி பெரு வெற்றி என சுமந்திரனால் கூற முடியும்?
சாவகச்சேரி பிரதேச சபை உள்ளிட்ட இன்னும் சில பிரதேச சபைகளில் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியிருந்த நிலையில், மேற் குறிப்பிட்ட தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டும்
வழக்கு சதிகளை செய்து கொண்டும் திருவுளச்சீட்டு மூலமும் தமிழ் மக்களின் ஆணைக்கு மாறாக ஆட்சியை பின்கதவால் கைப்பற்றிவிட்டு தமிழ் மக்களின் ஆணை தமக்குக் கிடைத்திருப்பதாக சுமந்திரனால் எவ்வாறு உரிமை கோர முடியும்?
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளதாக பொதுவாக கூறும் சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி படுதோல்வி அடைந்தம் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும், அவற்றை தமது வறட்டு கௌரவத்தால் பறிகொடுத்தமை தொடர்பில் ஏன் வாய்திறக்கவில்லை?
வவுனியா மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்ற நிலையில், வவுனியா நகரசபையை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிய போதும் மன்னாரில் தமிழ், முஸ்லிம்கள் மட்டும் வாழ்கின்ற அதிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியினால் ஏன் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை?
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களில் அதுவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 சபைகளில் 11 சபைகளை அதிலும், பெரும்பான்மையான சபைகளை டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டிபி. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் கைப்பற்றியமை தான் தமிழரசுக்கட்சிக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணையா?
இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி முகம் கண்டுள்ள நிலையில், தனித் தமிழரசின் ஆட்சி அமைக்கும் விதத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கிளிநொச்சி மாவட்டத்திற்குத் தலைமை வகிக்கும் சிறீதரன் எம்.பி. முல்லைத்தீவு மாவட்டத்திற்குத் தலைமை வகிக்கும் ரவிகரன் எம்.பி. ஆகியோருடன் தமிழரசின் தலைமை வன்மம் கொண்டு இவ்விருவரையும் பழிவாங்கும் நோக்குடனும் கட்சியிலிருந்து
ஒதுக்கும் வெளியேற்றும் திட்டத்துடனும் செயற்படுவது தமிழரசின் அரசியலையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பதனை தமிழரசின் பதில் தலைவர் சிவஞானமோ பதில் பொது செயலாளர் சுமந்திரனோ புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
தமிழரசு வெற்றி கொண்ட முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தான் பெயரிடுபவர்களையே தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற சுமந்திரனின் சர்வாதிகாரத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி பெரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவிகரன் எம்.பி. அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒதுங்கியுள்ளார்.
அவருடன் எந்த சமரசமும் செய்யாது உடனடியாகவே தமது விசுவாசி ஒருவரை அந்தப் பதவிக்கு அமர்த்தி ரவிகரன் எம்.பி.வெற்றி பெற்றுக்கொடுத்த சபைகளுக்கு தமது விசுவாசிகளை தவிசாளர்களாகவும் பிரதி தவிசாளர்களாகவும் தமிழரசின் தலைமை நியமித்துள்ளது.
ரவிகரன் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளதால் தற்போதைக்கு தமிழரசுக்கு நெருக்கடிகள் ஏற்படாது விட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அதற்கான விளைவுகளைத் தமிழரசு எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
அதேபோன்று, சிறீதரன் எம்.பியின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசின் ஆட்சியமைந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறீதரனின் தீவிர விசுவாசியை அப்பதவியிலிருந்து அகற்றத் தமிழரசின் தலைமை திட்டமிட்டுள்ளது.
அதற்காக அவர் மீது கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தமிழரசின் தலைமை தயாராகின்றது.
இது அந்த தவிசாளருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழரசுக்குள் இருந்து கொண்டே தமிழரசின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டைக் கடுமையாக எதிர்க்கும், பகிரங்கமாக விமர்சிக்கும் சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தமிழரசின் தலைமையால் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை இழந்துள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும்,
பல சபைகளை இழந்துள்ள தமிழரசுக் கட்சி, தன்னை மீண்டும் வலிதாக்கிக்கொள்ள, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக்கிக் கொள்ளக் கட்சிக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தி அனைவரையும் ஒரே வீட்டுக்குள் கொண்டுவந்து
விட்டுக் கொடுப்பு தன்மைகளுடன் தமிழரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய நேரத்தில் தலைக்கனம், வறட்டுக் கெளரவம், பிடிவாதம், நான் என்ற அகங்காரம் போன்றவற்றால் கட்சிக்குள் பிளவுகளை, குழப்ப நிலைகளை, பழிவாங்கல்களை, பதவி நீக்கங்களை, கட்சி நீக்கங்களை மேற்கொண்டால் தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்பதனை புதிய தலைமையான பதில் தலைவர் சிவஞானமும் பதில் பொது செயலாளர் சுமந்திரனும் சற்றேனும் தமிழர் நலன் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், தந்தை செல்வா “கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது” என்று கூறியதை “கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது” என்று கூற வேண்டிய நிலையே ஏற்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago